மணிமேகலை ஆராய்ச்சி
ஒளவை துரைசாமி
1. மணிமேகலை ஆராய்ச்சி
2. பதிப்புரை
3. பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்!
4. நுழைவாயில்
5. தண்டமிழாசான் உரைவேந்தர்
6. மணிமேகலை ஆராய்ச்சி
மணிமேகலை ஆராய்ச்சி
ஒளவை துரைசாமி
நூற் குறிப்பு
நூற்பெயர் : மணிமேகலை ஆராய்ச்சி
தொகுப்பு : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 7
ஆசிரியர் : ஒளவை துரைசாமி
பதிப்பாளர் : இ. தமிழமுது
பதிப்பு : 2009
தாள் : 16 கி வெள்ளைத்தாள்
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 24 + 416 = 440
நூல் கட்டமைப்பு: இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 275/-
படிகள் : 1000
நூலாக்கம் : பாவாணர் கணினி
தி.நகர், சென்னை - 17.
அட்டை ஓவியம்: ஓவியர் மருது
அட்டை வடிவமைப்பு: வ. மலர்
அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா
ஆப்செட் பிரிண்டர்சு
இராயப்பேட்டை, சென்னை - 14.
பதிப்புரை
ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை
தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார்.
வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.
இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராக வும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந் தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை.
“ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு.துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும்,
“இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து
வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான்
தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே
முன்கடன் என்றுரைக்கும் ஏறு”
என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம்.
அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம்.
இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி
தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின்
107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள்.
நன்றி
பதிப்பாளர்
பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்!
பொற்புதையல் - மணிக்குவியல்
“ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்
மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள்
உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன்
அள்ளக் குறையாத ஆறு”
என்று பாவேந்தரும்,
“பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே
பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு
நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே
நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில்
கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல்
காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும்
தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே
தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!”
என்று புகழ்ந்ததோடு,
“அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால்
அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே
புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்”
எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும்.
பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து
வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்
பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடைய
வராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன.
உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார்.
பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டு கிறது.பாட்டுக்களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற்
களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டா யிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது.
கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன.
“இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற்
பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து,
கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த
பெரும்புலமைக் கல்வி யாளர்!
விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல்,
வடமொழிநூல், மேற்பால் நூல்கள்
நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய
நற்றமிழ் தழைக்க வந்தார்!”
என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும்.
கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார்.
ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங்களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப்பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம்.
ஒளவை நடராசன்
நுழைவாயில்
செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல்களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல் ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்
களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம்.
எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை.
எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார்.
சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இரும்புக்கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார்.
பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது.
சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாட வேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச்செம்மைப்படுத்துவதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார்.
தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங்களையும் கற்றறிந்த புலமைச் செல்வர்.
ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ்நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று.
ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை
நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத்துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக்கணக் கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரைவரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும்.
ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார்.
ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன.
அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப்படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்புகளையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவுபடுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவுபடுத்துவர்.
ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது.
ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர் களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர்.
“தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர்.
ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப் பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம்.
ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன்.
**rமுனைவர் இரா.குமரவேலன்
தண்டமிழாசான் உரைவேந்தர்
உரைவேந்தர் ஒளவை. துரைசாமி அவர்கள், பொன்றாப் புகழுடைய பைந்தமிழ்ச் சான்றோர் ஆவார். ‘உரைவேந்தர்’ எனவும், சைவ சித்தாந்த கலாநிதி எனவும் செந்தமிழ்ப் புலம் இவரைச் செம்மாந்து அழைக்கிறது. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருள்விளக்கம் காட்டி நூலுக்கு நூலருமை செய்து எஞ்ஞான்றும் நிலைத்த புகழ் ஈட்டிய உரைவேந்தரின் நற்றிறம் வாய்ந்த சொற்றமிழ் நூல்களை வகை தொகைப்படுத்தி வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் அருந்தொண்டு அளப்பரியதாகும்.
ஒளவைக்கீந்த அருநெல்லிக் கனியை அரிதின் முயன்று பெற்றவன் அதியமான். அதுபோல் இனியமுது பதிப்பகம் ஒளவை துரைசாமி அவர்களின் கனியமுது கட்டுரைகளையும், இலக்கிய நூலுரைகளையும், திறனாய்வு உரைகளையும் பெரிதும் முயன்று கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவர்தம் அரும்பெரும்பணி, தமிழுலகம் தலைமேற் கொளற்குரியதாகும்.
நனிபுலமைசால் சான்றோர் உடையது தொண்டை நாடு; அப்பகுதியில் அமைந்த திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஒளவையார்குப்பத்தில் 1903-ஆம் ஆண்டு தெள்ளு
தமிழ்நடைக்கு ஒரு துள்ளல் பிறந்தது. அருள்திரு சுந்தரம்பிள்ளை, சந்திரமதி அம்மையார் ஆகிய இணையருக்கு ஐந்தாம் மகனாக (இரட்டைக் குழந்தை - உடன் பிறந்தது பெண்மகவு)ப் பிறந்தார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமான்போன்று இளமையிலேயே ஒளவை அவர்கள் ஆற்றல் நிறைந்து விளங்கினார். திண்டிவனத்தில் தமது பள்ளிப்படிப்பை முடித்து வேலூரில் பல்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். ஆயின் இடைநிலைப் பல்கலை படிக்கும் நிலையில் படிப்பைத் தொடர இயலாமற் போயிற்று.
எனவே, உரைவேந்தர் தூய்மைப் பணியாளராகப் பணியேற்றார்; சில மாதங்களே அப்பொறுப்பில் இருந்தவர் மீண்டும் தம் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மீதூர்ந்த அளப்பரும் பற்றால் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலான தமிழ்ப் பேராசான்களிடம் பயின்றார்; வித்துவான் பட்டமும் பெற்றார். உரைவேந்தர், செந்தமிழ்க் கல்வியைப் போன்றே ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்தார்.
“ குலனருள் தெய்வம் கொள்கைமேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
அமைபவன் நூலுரை ஆசிரியன்”
எனும் இலக்கணம் முழுமையும் அமையப் பெற்றவர் உரைவேந்தர்.
உயர்நிலைப் பள்ளிகள், திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி என இவர்தம் ஆசிரியப் பணிக்காலம் அமைந்தது. ஆசிரியர் பணியில், தன் ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்தினார். எனவே, புலவர். கா. கோவிந்தன், வித்துவான் மா.இராகவன் முதலான தலைமாணாக்கர்களை உருவாக்கினார். இதனோடமையாது, எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வத்தோடும் , தமிழாழத்தோடும் உரைவேந்தர் ஈடுபட்டார். அவர் சங்க இலக்கிய உரைகள், காப்பியச் சுருக்கங்கள், வரலாற்று நூல்கள், சைவசித்தாந்த நூல்கள் எனப் பல்திறப்பட்ட நூல்கள் எழுதினார்.
தம் எழுத்துப் பணியால், தமிழ் கூறு நல்லுலகம் போற்றிப் பாராட்டும் பெருமை பெற்றார் உரைவேந்தர். ஒளவையவர்கள் தம் நூல்கள் வாயிலாக புதுமைச் சிந்தனைகளை உலகிற்கு நெறிகாட்டி உய்வித்தார். பொன்னேபோல் போற்றற்குரிய முன்னோர் மொழிப் பொருளில் பொதிந்துள்ள மானிடவியல், அறிவியல், பொருளியல், விலங்கியல், வரலாறு, அரசியல் எனப் பன்னருஞ் செய்திகளை உரை கூறுமுகத்தான் எளியோரும் உணரும்படிச் செய்தவர் உரைவேந்தர்.
எடுத்துக்காட்டாக, சமணசமயச் சான்றோர்கள் சொற்போரில் வல்லவர்கள் என்றும் கூறுமிடத்து உரைவேந்தர் பல சான்றுகள் காட்டி வலியுறுத்துகிறார்.
“இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவணபெலகோலாவில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும், காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திரநந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது? என்று கேட்க, அவர் தன் பெயர் பரவாதிமல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் ‘சாவாயும் வாதுசெய் சாவார்” (147:9) என்பது காண்க. இவற்றால் சமணச் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடையவர் என்பது பெறப்படும். படவே, தோலா மொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பார் என்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித் தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண், ‘தோலா நாவின் சுச்சுதன்’ (41) ‘கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. நகைச்சுவை பற்றியுரை நிகழ்ந்தபோதும் இவ்வாசிரியர் சொற்போரே பொருளாகக் கொண்டு,
“ வாதம் வெல்லும் வகையாதது வென்னில்
ஓதி வெல்ல லுறுவார்களை என்கை
கோதுகொண்ட வடிவின் தடியாலே
மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்’
என்பதும் பிறவும் இவர்க்குச் சொற்போர்க் கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன.
சூளாமணிச் சுருக்கத்தின் முன்னுரையில் காணப்படும் இப்பகுதி சமய வரலாற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனம் பல்லாற்றானும் பல்வேறு செய்திகளை விளக்கியுரைக்கும் உரைப்பாங்கு ஆய்வாளருக்கு அருமருந்தாய் அமைகிறது. கல்வெட்டு ஆய்வும், ஓலைச்சுவடிகள் சரிபார்த்தலும், இவரது அறிவாய்ந்த ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன.
நீரினும் ஆரளவினதாய்ப் புலமையும், மலையினும் மானப் பெரிதாய் நற்பண்பும் வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர். இவர்தம் நன்றி மறவாப் பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒரு செய்தியைக் கூறலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் போற்றிப் புரந்த தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும், மௌன நோன்பும் இருத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
“ தாயாகி உண்பித்தான்; தந்தையாய்
அறிவளித்தான்; சான்றோ னாகி
ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான்
அவ்வப் போ தயர்ந்த காலை
ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்;
இனியாரை யுறுவேம்; அந்தோ
தேயாத புகழான்தன் செயல் நினைந்து
உளம் தேய்ந்து சிதைகின்றேமால்”
எனும் வருத்தம் தோய்ந்த கையறு பாடல் பாடித் தன்னுளம் உருகினார்.
இவர்தம் அருந்தமிழ்ப் பெருமகனார் ஒளவை.நடராசனார் உரைவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்குதலில் பெரும்பங்காற்றியவர். அவர்தம் பெரு முயற்சியும், இனியமுது பதிப்பகத்தாரின் அருமுயற்சியும் இன்று தமிழுலகிற்குக் கிடைத்த பரிசில்களாம்.
உரைவேந்தரின் நூல்களைச் ‘சமய இலக்கிய உரைகள், நூற் சுருக்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி, காவிய நூல்கள்- உரைகள், இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள், வரலாறு, சங்க இலக்கியம், கட்டுரை ஆய்வுகளின் தொகுப்பு’ எனப்பகுத்தும் தொகுத்தும் வெளியிடும் இனியமுது பதிப்பக உரிமையாளர் செல்வி இ.தமிழமுது, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.இளவழகனார் அவர்களின் அருந்தவப் புதல்வி ஆவார். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலைமேற்கொள்ளும் கடப்பாடு உடையதாகும்.
“ பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக்
கொள்முதல் செய்யும் கொடைமழை வெள்ளத் தேன்
பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை
வாயார வாழ்த்தாத வாய்”
எனப் பாவேந்தர் கொஞ்சு தமிழ்ப் பனுவலால் நெஞ்சு மகிழப் பாடுகிறார். உரைவேந்தர் தம் எழுத்துலகச் சாதனைகளைக் காலச் சுவட்டில் அழுத்தமுற வெளியிடும் இனியமுது பதிப்பகத்தாரை மனமார வாழ்த்துவோமாக!
வாழிய தமிழ் நலம்!
முனைவர் வேனிலா ஸ்டாலின்
உரைவேந்தர் தமிழ்த்தொகை
தொகுதி - 1
ஞானாமிர்த மூலமும் பழையவுரையும்
தொகுதி - 2
சிவஞானபோத மூலமும்சிற்றுரை
தொகுதி - 3
சிலப்பதிகாரம் சுருக்கம்
மணிமேகலைச் சுருக்கம்
தொகுதி - 4
சீவக சிந்தாமணி - சுருக்கம்
தொகுதி - 5
சூளாமணி சுருக்கம்
தொகுதி - 6
பெருங்கதைச் சுருக்கம்
தொகுதி - 7
சிலப்பதிகார ஆராய்ச்சி
மணிமேகலை ஆராய்ச்சி
சீவகசிந்தாமணி ஆராய்ச்சி
தொகுதி - 8
யசோதர காவியம்
தொகுதி - 9
தமிழ் நாவலர் சரிதை
தொகுதி - 10
சைவ இலக்கிய வரலாறு
தொகுதி - 11
மாவை யமக அந்தாதி
தொகுதி - 12
பரணர்
தெய்வப்புலவர்
The study of thiruvalluvar
தொகுதி - 13
சேரமன்னர் வரலாறு
தொகுதி - 14
நற்றிணை -1
தொகுதி - 15
நற்றிணை -2
தொகுதி - 16
நற்றிணை -3
தொகுதி - 17
நற்றிணை -4
தொகுதி - 18
ஐங்குறுநூறு -1
தொகுதி - 19
ஐங்குறுநூறு -2
தொகுதி - 20
பதிற்றுப்பத்து
தொகுதி - 21
புறநானூறு -1
தொகுதி - 22
புறநானூறு -2
தொகுதி - 23
திருக்குறள் தெளிவு - பொதுமணித்திரள்
தொகுதி - 24
செந்தமிழ் வளம் - 1
தொகுதி - 25
செந்தமிழ் வளம் - 2
தொகுதி - 26
வரலாற்று வாயில்
தொகுதி - 27
சிவநெறிச் சிந்தனை -1
தொகுதி - 28
சிவநெறிச் சிந்தனை -2
கிடைக்கப்பெறாத நூல்கள்
1. திருமாற்பேற்றுத் திருப்பதிகவுரை
2. தமிழகம் ஊர்ப் பெயர் வரலாறு
3. புதுநெறித் தமிழ் இலக்கணம்
4. மருள்நீக்கியார் (நாடகம்)
5. மத்தவிலாசம் (மொழியாக்கம்)
மணிமேகலை ஆராய்ச்சி
மணிமேகலை யென்பது ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று என்பது தமிழுலகு நன்கறிந்த செய்தியாகும். பண்டை நாளில் விளங்கியிருந்த நூலாசிரியர், உரையாசிரியர் பலரும் பெரிதும் ஈடுபட்ட தமிழருமை வாய்ந்தது. இந்த அரிய காப்பிய நூல், ‘கற்பனைக் களஞ்சிய’மாக விளங்கிய துறை மங்கலம் சிவப்பிரகாச அடிகளால் தாம் அருளிய திருவெங்கைக் கோவையில், “கொந்தார் குழல் மணிமேகலை நூல் நுட்பம் கொள்வதெங்ஙன்?” என்றும் அம்பிகாபதி என்பவரால், அம்பிகாபதிக் கோவைக்கண், “மாதவி பெற்ற மணிமேகலை நம்மை வாழ்விப்பதே” என்றும் தொனி நயம் படப் போற்றியுரைத்த அருமையுடையது; அழகிய செம்பாக மான நடையழகு வாய்ந்தது; ஏனைச் சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம் என்ற இரண்டினும் எளிய நடை பொருந்தியது; ஆங்காங்குச் சிதறித் தோன்றும் வளையாபதி, குண்டலகேசி என்ற காப்பியச் செய்யுட்களை நோக்க, அவற்றினும் நடையழகு சிறந்திருப்பது; காவிரிப்பூம் பட்டினம், வஞ்சி, காஞ்சி முதலிய பெரு நகரங்களின் பண்டைச் சிறப்பை எடுத்துக் காட்டுவது; இயற்கையழகை இனிது காட்டி மகிழ்வுறுத்துவது; புத்த தருமங் களையும், பண்டை நாளில் தமிழகத்தில் நிலவிய பல சமயக் கருத்துக்களையும் விளங்க அறிவிப்பது. “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்” தின் தொடர்ச்சியாக, கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளான மணிமேகலையின் துறவு நெறியைச் செஞ்சொற் சுவைததும்பச் சொல்லும் சீர்மையுடையதுமாகும்.
I.நூலாசிரியர்:
1. பெயர்; இக்காப்பிய நூலை ஆக்கிய சான்றோர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்போராவர். “வளங்கெழு கூல வாணிகன் சாத்தன், மாவண் தமிழ்த்திற மணிமேகலைத் துறவு, ஆறைம்பாட்டினுள் அறிய வைத்தனன்” என்று இந்நூற் பதிகம் கூறுகின்றது. “ஞகாரை முதலா” என்ற தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திர வுரையில், ஆசிரியர் பேராசிரியர், “சீத்தலைச் சாத்தனாராற் செய்யப்பட்ட மணிமேகலையும், கொங்கு வேளாற் செய்யப் பட்ட தொடர் நிலைச் செய்யுளும் போல்வன” என்று கூறுவதும் அப்பதிகக் கூற்றுக்கு நல்ல சான்று பகருகின்றது. இவரை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தன் என்றும், சீத்தலைச் சாத்தன் என்றும் அறிஞர் வழங்கியிருக்கின்றனர்.
இங்ஙனம் வழங்குவதை நோக்கின், இவரது பிறந்தவூர் சீத்தலை யென்பதும், வாணிகம் செய்தற் பொருட்டு மதுரையில் இருந்தவர் என்பதும் அறியப்படும். சீத்தலை என்னும் இவ்வூர், இப்போது திருச்சிராப்பள்ளிச்சில்லா பெரம்பலூர்த் தாலுக்காவில் உளது என்பர். கூலமாவது நெல், வரகு, தினை, சாமை முதலிய பதினெண்வகைப் பொருள்களின் பொதுப் பெயர்.
இனி, சீத்தலை யென்பதை ஊர்ப்பெயராகக் கொள்ளாது, ஒரு காரணம் பற்றி வந்த பெயராகக் கொண்டு காலஞ்சென்ற டாக்டர் உ.வே. சாமிநாதையர் பின்வருமாறு கூறுவர்: “சங்கத்தில் அரங்கேற்றுவித்தற் பொருட்டு வரும் நூல்களிற் பிழைகள் காணப் படுந்தோறும், ஆக்கியோர்களைக் குற்றம் கூறுதற்குத் துணியாராய், ‘இந்தப் பிழைகளைக் கேட்கும்படி நேரிட்டதே’ என்று மனம் வருந்தித் தமதுதலையைக் குத்திக் கொள்வாரென்றும், அதனால் தலை புண்பட்டுச் சீயோடிருந்தமையின் சீத்தலைச் சாத்தனா ரென்பது இவர்க்குப் பெயராயிற்றென்றும் கூறுவர்; ‘வள்ளுவர் முப்பாலால், தலைக்குத்துத் தீர்வு சாத்தற்கு’ என்று மருத்துவன் தாமோதரனார் திருக்குறளைச் சிறப்பித்துக் கூறிய செய்யுளில் இதனைக் குறிப்பித்திருத்தலும், ‘இய பெயர் சினைப்பெயர்’ என்பதன் உரையில், ஆசிரியர் இளம்பூரணர் முதலியோர் சினை முதற் பெயருக்கு உதாரணமாக, ‘சீத்தலைச் சாத்தன்’ என்னும் இவர் பெயரைக் காட்டி யிருத்தலும் இக்கொள்கைக்கு ஆதாரங்களாக அமைவது காண்க” என்பர். இனி, நற்றிணை யுரைகாரரான பின்னத்தூர் அ.நாராயணசாமி அய்யர், அந்நூலின் பாடினோர் வரலாற்றுப் பகுதியுள், நம் சாத்தனாரைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்: “சீத்தலையென்பது ஓர் ஊர்; செந்தலை, முகத்தலை, கழாத்தலை, இரும்பிடர்த்தலை என்பவை போல. பெருஞ்சாத்தன், பேரி சாத்தன் முதலியோரின் வேறுபடுத்த இவர் இயற்பெயர் ஊர்ப்பெயர் புணர்த்திச் சீத்தலைச் சாத்தனார் எனப்பட்டது. சீத்தலை யென்னுமூர் திருச்சிராப்பள்ளிச் சில்லா பெருமளூர்த் தாலுக்காவில் உள்ளது. திருவள்ளுவ மாலையில் வரும் மருத்துவன் தாமோதரனார் பாடலில் ‘தலைக்குத்துத் தீர்வு சாத்தற்கு’ என்று இருத்தலானே அதற்கேற்பச் ‘சீத்தலை - சீப்பிடித்த தலை’ என்று கதை கட்டிக் கூறுவாருமுளர். தலைக்குத்து ஒருகால் இருந்திருப்பினும் இருக்கலாம்; அதுபற்றிச் சீப்பிடித்தல் ஒருதலையன்மையின், சீத்தலைக்குச் சீப்பிடித்த தலையென்று பொருள் கூறுதல் பொருத்த மாகத் தோன்றவில்லை” என்பது.
இவ்விருவர் கூறும் கூற்றுக்களை நோக்கின் நற்றிணையுரை காரர் கூறுவதே இயற்கையில் பொருந்துவதாகத் தோன்று தலால், எதிர் காலத்தே அறிஞர் ஆராய்ந்து உண்மை துலங்குங் காறும் சீத்தலை யென்பதை ஊர்ப்பெயராகக் கோடலே சிறப்பு என்க. இதனைத் திரு.உ.வே.சாமிநாதையரும் ஒருவாறு உடன்பட்டுச் “சீத்தலை யென்னும் ஊரிலுள்ள ஐயனார் பெயராகிய சீத்தலைச் சாத்தனார் என்பது இவரது இயற்பெயரென்று ஒரு சாரார் கூறுவர்” என்று உரைத்துள்ளார்.
2. பிறப்பு வளர்ப்பு: இவருடைய பெற்றோர் பெயரும் பிறப்பு வளர்ப்பு வரலாறும், வாழ்க்கைத் துணை, மக்கட்பேறு முதலிய நலங்களும் இதுகாறும் சிறிதளவும் தெரிந்தில.
3. காலம்: இவருடைய பாட்டுக்கள் சில சங்க இலக்கிய மெனப்படும் தொகை நூல்களிற் காணப்படுகின்றன. இவர் சிலப்பதிகாரம் பாடியருளிய இளங்கோவடிகளுடன் இருந்திருக் கின்றார். அடிகள் சிலப்பதிகாரம் பாடுதற்கேற்ற வேட்கைச் சுடரைக் கொளுத்திய வரும் இவரே; அது முடிந்தபின், அதனை அடிகள் சொல்லக் கேட்டவரும் இவரே. ஆகவே, அடிகள் காலமே இவரது காலமாமென்பர். அடிகள் இற்றைக்குச் சற்று ஏறக்குறைய 1800 ஆண்டுகட்கு முன்னிருந்தவர் என்பது அறிஞர் முடிபு. திருமணக் காலத்தில் “மாமுது பார்ப்பான் மறைவழி” காட்டலும், “தீவலம் செய்தலும்” சங்க இலக்கிய காலத்தில் இல்லை. இந்நூலுட் கூறப்படும் தருக்க முடிபுகள் நான்கு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தனவாகத் தோன்றுகின்றன. இன்னோரன்ன வற்றைக் கொண்டு ஆராயும் அறிஞர், அடிகள் காலம் கி.பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டாகலாம் என்பர். இக்கூற்று மெய்ப்பிக்கப்படுமாயின், அடிகள் காலத்தோடு சாத்தனார் காலமும் தெளிவாகிவிடும். காவிரிப்பூம்பட்டினம் கடல் கொள்ளப்பட்டதும், மதுரைமாநகர் கண்ணகியாரால் எரியூட்டப் பெற்றதும் இவர் காலத்தே நிகழ்ந்திருக்கின்றன.
4. இவர் காலத்திருந்த அரசர்: இவர் காலத்தே சோழ நாட்டில் கரிகால் வளவனும், பாண்டி நாட்டில் நெடுஞ் செழியனும், சேரநாட்டில் செங்குட்டுவனும் ஆட்சி புரிந்திருக்கின்றனர் இவரால், சோழருள் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், கிள்ளிவளவன், இளங்கிள்ளி, நெடுமுடிக் கிள்ளி, வென்வேற்கிள்ளி என்போரும், பாண்டியருள் நெடுஞ்செழியனும், சித்திரமாடத்துத் துஞ்சிய நன்
மாறனும், சேரருள் இமயவரம்பன் நெடுஞ்சேரலா தனும் பிறரும் இந்நூற்கண்ணும் பிறாண்டும் சிறப்பிக்கப் பெற்றிருக்கின்றனர். இவர் காலத்துப் புலவர் பெருமக்களை நோக்கின், மேலே கூறிய முடிவேந்தர் மூவரையும் பாடிய புலவர் பெருமக்கள் பலரும் இவர் காலத்துச் சான்றோர் என்பதொன்றே அமைவதாம். இவரை இளங்கோவடிகள், தமதுசிலப்பதிகாரத்தில் குறிக்க நேரும்போ
தெல்லாம், “தண்டமிழ்ச் சாத்தன்” (பதி) என்றும், “தண்டமிழாசான் சாத்தன்”, “நன்னூற் புலவன்” (காட்சி) என்றும் சிறப்பித்து ஓதியுள்ளார். இவற்றை நோக்கின், இவர் அடிகட்கு ஒருகால் தமிழாசிரியராக இருந்திருக்கலாமோ என்று நினைத்தற்கும் இடமுண்டாகின்றது.
5. நன்மாறன் தொடர்பு: இவன் பாண்டியர் மரபினன். நன்மாறன் என்ற பெயரினர் பலர் இருந்தமையின் இவனை அவரிற் பிரித்துக் கூறுவார், சித்திரமாடத்துத்துஞ்சிய நன்மாறன் எனச் சான்றோர் சிறப்பித்திருக்கின்றனர். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய நன்மாறன் எனப் பலர் இருந்திருத்தல் காண்க. துஞ்சுதல், இறத்தல். ஆகவே, நம் சீத்தலைச் சாத்தனாரால் பாடப்பெறும் பெருமை வாய்ந்த நன்மாறன் சித்திரமாடம் என்னுமிடத்தே இறந்தவன் என்பது விளங்கும்.
இந் நன்மாறன், இவர் புலமை நலத்தை வியந்து பெரிதும் ஆதரித்துள்ளான். இவன் இறந்தது கேட்டோ, அதற்கு முன்னர் இவன்பால் சென்றிருந்த தன்னை ஆதரித்தது கண்டோ, இவர் தன்னைப் பேணிச் சிறப்பித்த நலத்தை ஓர் அழகிய பாட்டால் இனிது உரைத்துள்ளார். அப்பாட்டுக் கையறுநிலையாக இன்மையின், நேரிற் கண்டு பாடியதாகவே கோடல் வேண்டும். அவனைக் கண்டபோது, அவனுடைய அணிகிளரும் அழகிய மார்பும் தாள்வரை நீண்ட தடக்கையும் பிற நற்பண்பும் இவர் உள்ளத்தே நன்கு பதிந்து விட்டன. அதனால்.
“ ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பின்
தாள்தோய் தடக்கைத் தகைமாண் வழுதீ!”
என்று தொடக்கத்தே எடுத்தோதி இன்புற்றார். பின்பு, அவன் அளிக்கும் திறத்தை,
“ வல்லைமன்ற நீ நயந்தளித்தல்,
தேற்றாய், பெரும, பொய்யே என்றும்
காய்சினம் தவிராது கடலூர்பு எழுதரும்
ஞாயிறனையை நின் பகைவர்க்கு;
திங்கள் அனையை எம்ம னோர்க்கே” (புறம்.59)
என்று மனங்குளிரப் பாடி மகிழ்ந்திருக்கின்றார். இடையறாது பன்னாள் பகைமை செய்யினும், நன்மாறன் வலி சிறிதும் குன்றாது போருடற்றி வென்றி யெய்திய சிறப்பைக் “காய்சினம் தவிராது கடலூர்பு எழுதரும் ஞாயிறனையை” என்று உவமையடையால் எய்துவித்தோதும் இயல்பும், “தேற்றாய் பெரும பொய்யே” என அவன் கொடைமடச் சிறப்பும் அழகு கனிய உரைக்குந்திறம் உன்னுந்தோறும் இன்புறுவிக்கின்றது.
6. ஏனைப்பாட்டு நலம் - பொது: இம் மணிமேகலை யொழிய, சங்க இலக்கியங்களுள் மேலே நன்மாறனைப் பாடிய புறப்பாட்டு ஒன்றும், அகத்தில் ஐந்தும், நற்றிணையில் மூன்றும், குறுந்தொகையில் ஒன்றுமாகப் பத்துப் பாட்டுக்கள் காணப்படு
கின்றன*. புறமொழிந்த ஒன்பதும் அகனைந் திணைப் பாட்டுக்
களாதலின், அவற்றை முறையே ஆராய்வது சீத்தலைச் சாத்தனாரது புலமை நலத்தைக் காண்டற்கு இனிய வாயிலாகும், அகப்பாட்டுக்
களின் திணை வகுப்பு, முதற் பொருளும், அஃது இல்வழிக் கருப்பொருளும், இரண்டும் மில்லையாயின், உரிப்பொருளும் அடிப்படையாகக் கொண்டது அந்நெறியே நோக்கின், இப்பாட்டுக்கள் ஒன்பதும் குறிஞ்சித் திணையில் இரண்டும், பாலையில் மூன்றும், முல்லை மருதங்களில் தனித் தனியே ஒவ்வொன்றும், நெய்தலில் இரண்டு மாகும். ஆகவே இவர் பாலை குறிஞ்சி, நெய்தல் என்ற மூன்று நிலத்துக் கருப்பொருளையே மிகுதியாகப் பாடும் பான்மை யுடையவர் என்பது புலனாகும். உரிப்பொருள் நெறியே தூக்கியாராயின், குறிஞ்சித் திணையில் மூன்றும், முல்லையில் நான்கும், மருதத்தில் இரண்டும் அடங்குகின்றன. எனவே, பாலை நெய்தல் கட்குரிய உரிப்
பொருளைப் பாடுதலில் இவர்க்கு விருப்பம் மிகுதியும் இன்மை எய்துகின்றது. இவ்வியல்பே, இம் மணிமேகலைக் காப்பியத்தும் விளங்கித் தோன்றுகின்றது. இவ்வாறு முதல், கரு, உரி என்ற பொருள் மூன்றாலும் ஆராய்ந்த வழி, முல்லைத் திணையும் இவராற் பாடப்பெற்றிருத்தல் இனிது விளங்கவும், பின்னத்தூர் திரு. அ.நாராயணசாமி அய்யரவர்கள் “இவர் முல்லை யொழிய ஏனை நானிலங்களையும் புனைந்து பாடியுள்ளார்” என்று கூறியுள்ளார். ஒருகால், அவர்,
“ வானம் வாய்ப்பக் கவினிக் கானம்
கமஞ்சூல் மாமழை கார்பயந் திறுத்தென,
மணிமருள் பூவை அணிமலர் இடையிடைச்
செம்புற மூதாய் பரத்தலின், நன்பல
முல்லை வீகழல் தாஅய், வல்லோன்
செய்கை யன்ன செந்நிலப் புறவின்” (அகம்.134)
என வரும் சீத்தலைச் சாத்தனாரது முல்லைப் பாட்டினைக் காணாது போயினர் போலும்; கண்டிருப்பின் இவ்வாறு கூறாரன்றே!
7. குறிஞ்சித் திணை: தலைமைப் பண்பு முற்றும் நிரம்பிய ஒருவனும் ஒருத்தியும் தம்மில் தாமே எதிர்ப்பட்டுக்காதல் கொள் கின்றனர். இக்காதல், நன்கு உருக்கொள்ளும் வாயிலாகக் கூறும் இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியிற் கூட்டம் என்பவை நிகழ்கின்றன. தனக்கும் தலைமகட்கும் உண்டாகிய காதலன்பு முறுகிச் சிறப்பது குறித்துத் தலைமகன் விரைய வரைந்து கொள்ளாது. பகலினும் இரவினும் தலைவியும் தோழியும் குறிக்கும் குறிவழி வந்து கூட்டம் பெற்றுச் செல்கின்றான். இதனைத் தோழி நினைந்து, “இவர் தம் களவொழுக்கம் பிறர்க்குப் புலனாயின் யாவர்க்கும் இகழ்ச்சியுண்டாம்; அதனால் தலைமகற்கும் ஏதமாம்; தலைமகளும் உயிரிற் சிறந்த பெருநாணம் உடையாளாதலின் இறந்து படுவாள்” என்றெல்லாம் எண்ணி, அத் தலைமகன் தெருண்டு வரையுமாறு தகுவனவற்றைக் கூறத் தொடங்குகின்றாள். இதனை வரைவு கடாதல் என்பர். தலைமகனைக் குறியிடத் தேனும் பிறாண்டுத் தனித்தேனும் காணலுற்றால் வெளிப்படையாகவே சில கூறி, விரைய வரைந்து கொள்ளுமாறு வேண்டுவள்; தங்கள் கடிமனையின் சிறைப் புறத்தே கண்டால், பிறர் செவிப்படினும் அவர்கள் ஐயுறா வண்ணம், மறைத்த சொற்களையே சொல்லி அவனை வரைவு கடாவுவள்.
ஒருநாள், தலைமகன் பகற்காலத்தே, தலைவியும் தோழியும் விளையாட்டயரும் குறியிடத்திற்கு வந்திருக்கின்றான். அவனைத் தோழி கண்டு, “எம் தலைவிக்கும் நினக்கும் உளதாகிய தொடர்பு அலராகி விட்டது; அதனால் அவள் எய்தும் வருத்தம் மிகப் பெரிது; அதனினின்றும் நீ அவளைக் காத்தல் வேண்டும் என்று யாம் பல முறையும் இரந்து நின்றோம். நீயோ எம் வேண்டுகோளை ஏற்று அருளாயா கின்றனை” என்ற கருத்துப் பட,
“ கானலம் சிறுகுடிப் பெருநீர்ச் சேர்ப்ப!
மலரேர் உண்கண் எம்தோழி எவ்வம்
அலர்வாய் நீங்கநீ அருளாய்”
என்கின்றாள். அது கேட்கும் தலைமகன், “அதற்காகத் தானே இவ்வாறு ஒழுகுகின்றேன்” என்று உரைக்கின்றான். தோழி, வருத்த முற்று, “இல்லையில்லை; அருளுதல் மெய்யாயின், இதுகாறும் நீட்டியாது இவளை வரைந்து கொண்டிருப்பாய்; அருள்வாய் போலத் தோன்றி அருளாமையே செய்கின்றாய்; இவ்வொழுக்கம் ஒருகால் புறத்தார்க்கு நன்கு தெரிந்துவிடின், அப்போழ்தும் இது போலவே பொய்ப்பாய் போலும்! நீ பொய்க்கினும், அன்று யாம் வண்டலாடுமிடத்தே அவ்வண்டல் சிதையத் தேரொடு வந்து, எம் தலைவியின் புது நலத்தை நுகர்ந்தபோது, நீ செய்த சூளும் பொய் யாகுமோ? இக் கடலே எமக்கு அறிகரியாக உளது, காண்” என்பாளாய்,
“ தடவுநிலைப் புன்னைத் தாதணி பெருந்துறை
நடுங்கயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்”
வண்டற் பாவை சிதைய வந்து நீ
தோள் புதிது உண்ட ஞான்றைச்
சூளும் பொய்யோ, கடல்அறி கரியே” (அகம். 320)
என்று கூறுகின்றாள். இதனைக் கேட்கும் தலைமகனோ, “இவர்கள் மெய்யாகவே ஊரவர் எடுக்கும் அலர்க்கு அஞ்சி யலமருகின்றனர்; இவர்களை இனியும் வருந்த விடுவது முறையன்று” எனத் தெருண்டு வரைந்து கொள்ளத் துணிகுவன். இதுவே தோழி கூறியதன் கருத்தும் பயனுமாகும்.
இனி, ஊரவர் அலரெடுத்துரைக்கும் குறிப்பும், அதனினின்றும் தலைமகளைக் காத்தற்குரிய பொறுப்பும் தலைமகற்கு உணர்த்தக் கருதுகின்ற தோழி, உள்ளுறையால் அவன் உணர்ந்து கொள்ளு மாறு உரைக்கின்றாள், தலைமகனைக், கண்டு, “கானல் சிறு குடிப் பெருநீர்ச் சேர்ப்ப” என்பவள், ஊரவர் கூறும் அலரை உள்ளுறுத்து,
“ ஓங்குதிரைப் பரப்பின் வாங்குவிசைக் கொளீஇத்
திமிலோன் தந்த கடுங்கண் வயமீன்
தழையணி யல்குல் செல்வத் தங்கையர்
விழவயர் மறுகின் விலையெனப் பகரும்
கானலஞ் சிறுகுடிப் பெருநீர்ச் சேர்ப்ப”
என்கின்றாள். இதன்கண் திமிலோனாகிய பரதவன் கொணர்ந்த வயமீனை, அவனது செல்வத் தங்கையர் எடுத்துச் சென்று மறுகிடத்தே விற்பர் என்றது, நின்னால் இவட்கு உண்டாகிய வேறு பாட்டினை, ஏதில் மகளிர் எடுத்து ஊரிடத்தே அலர் கூறுகின்றனர் என்றதாகும்.
இனி, இவ்வலரால் உண்டாகிய துன்பத்தைப் போக்குதற்கு உரியவன் தலைமகனே என்றும், அதற்கு ஏற்றது உடனே செய்தல் வேண்டும் என்றும் தோழி கூறக் கருதி, அதனையும் உள்ளுறையால்,
“ நெடுங்கழி துழைஇய குறுங்கா லன்னம்
அடும்பமர் எக்கர் அஞ்சிறை யுளரும்
தடவுநிலைப் புன்னைத் தாதணி பெருந்துறை”
என்று கூறுகின்றாள். இதனால் கழி படிந்து துழவிய அன்னம், நனைந்த தன் சிறகினை எக்கரை யடைந்து உலர்த்துவது போல, தலைமகளும் இவ்வூரவர் எடுத்த அலர்மிகு வருத்தத்தை நின்னை யடைந்து போக்கிக் கொள்ளற்குரியள் என்றாளாயிற்று.
வந்த போதும் வண்டற்பாவை சிதைய வந்தாயாதலின், இப்போதும் எம் புதுநலம் கெட்டு வருந்த ஒழுகுகின்றாய். இவ்வாறு பிறர்க்கு எய்தும் கேடு கருதாது ஒழுகும் நீ எம்பால் அன்று செய்த சூளும் பொய்ப்பையாயின், அதனை மெய்ப்பித்தற்கு அறிகரியாகக் கடலுண்டு என்பாள், “கடலறிகரியே” என்று கூறுகின்றாள். இவ் வண்ணம் ஒரு பணிப்பெண் தலைமகனை நெருங்கிக் கூறல் தகுமோ எனின், “உறுகண் ஓம்பல் தன்னியல்பாகலின், உரியதாகும் தோழிகண் உரனே” என ஆசிரியர் தொல்காப்பியனார் வழுவமைத் திருக்கின்றார்.
இப்பாட்டு நெய்தற்குரித்தாயினும் குறிஞ்சி வந்து மயங்கிய திணைமயக்க மாகும்.
இனி, பகற் குறிக்கண் வந்த தலைமகனை இவ்வாறு நெருங்கிக் கூறிய தோழி, ஒரு கால் அவன் இரவுக் குறிக்கண் வந்து சிறைப் புறத்தானாதலை அறிகின்றாள்; உடனே, இரவுக்குறியிடத்தும் தலைமகள் போந்து அவனைத் தலைப் பெய்து கூடற்கு இயலாத வாறு ஊரவர் உறங்காது விழித்திருத்தலைக்காட்டி, இம்முட்டுப் பாடு நீங்க, விரைய வரைந்துகோடலே தக்கது என்று அவற்கு உணர்த்தக் கருதி,
“ கல்லக வெற்பன் சொல்லில் தேறி
யாம் எம்நலன் இழந்தனமே; யாமத்து
அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொ டொன்றிப்
புரையில் தீமொழி பயிற்றிய உரையெடுத்து
ஆனாக் கௌவைத் தாகத்
தான் என் இழந்தது இவ்வழுங்க லூரே?” (நற்.36)
என்று கூறுகின்றாள். “யாம் வெற்பனது சொல்லைத் தேறி, நலன் இழந்தமையின் உறங்காது விழித்திருப்பேமாக, இவ்வூர் உறக்க மின்றி ஆரவாரத்துடன் இருத்தற்கு இஃது எதனை இழந்தது?” என்று சொல்லு முகத்தால், தலைப்பெய்தற்கு முடியாமை யும், அலர் மிகுதியும் குறிப்பிடுதல் காண்க.
இதனோடு தலைமகற்குத் தம் தந்தை தன்னையரால் ஏத முண்டாகுமோ என அஞ்சும் அச்சமும் உடன்தோன்றி வருத்தும் வருத்தத்தை உள்ளுறையில் வைத்து,
“ குறுங்கை யிரும்புலிக் கோள்வல் ஏற்றை,
பூநுதல் இரும்பிடி புலம்பத் தாக்கித்
தாழ்நீர் நனந்தலைப் பெருங்களி றடூஉம்
கல்லக வெற்பன்”
என்றுரைக்கின்றாள்.
இதன்கண், புலியேறு, பிடி புலம்புமாறு களிற்றையடும் என்றது, எம் ஐயன்மார் யாம் வருந்துமாறு தலைமகனைப் பற்றி வருத்துவரோ என்று அஞ்சுவதனைக் குறிப்பித்தாளாம்.
பிறிதொரு காலத்தே தலைமகன் தங்கள் கடிமனையின் சிறைப்புறத்தே வந்துநிற்கின்றான். அவனுக்குத் தலைமகள் மேனி வேறுபாடு கண்டு பெற்றோர் இற்செறித்திருத்தலும் அவள் அதனால் தலைமகனைக் கூடலருமை கண்டு வருந்தியிருத்தலும் உணர்த்தக் கருதி, தலைமகனை நோக்கிக் கூறுவாள்போல மிக்க அறிவு நலம் தோன்றக் கூறுகின்றாள். கூறுவோள் தொடக்கத்தே, தலைவியது வருத்தமும் மேனி வேறுபாட்டினைத் தாய் அறிந்தமையும் எடுத்து,
“ தோலாக் காதலர் துறந்துநம் அருளார்;
அலர்வ தின்றுகொல் இதுஎன்று நன்றும்
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம்
அறிந்தனள் போலும் அன்னை………………”
என்று மொழிந்து பின் தாயின் செய்கையினை ஓதலுற்று
“ ………………………………………………………………………சிறந்த
சீர்கெழு வியனகர் வருவனள் முயங்கி,
நீரலைக் கலைஇய ஈரிதழ்த் தொடையல்
ஒண்ணுதற் பெதும்பை நன்னலம் பெறீஇ
மின்னே ரோதி இவளொடு நாளைப்
பன்மலர் கஞலிய வெறிகமழ் வேலித்
தெண்ணீர் மணிச்சுனை யாடின்
என்னோ மகளிர்தம் பண்பென் றோளே” (நற்.339)
என்று சொல்லி முடிக்கின்றாள். இது தாயறிவுறுதலும் காப்பு மிகுதலும் கூறி வரைவு கடாவியதாகும்.
இவ்வாறு பல வகையாலும் வரைவு கடாவப்பெற்ற தலை மகன் பின்பு தெருண்டு, தலைமகளை வரைந்து கொண்டு இல்லிருந்து நல்லறம் புரியத் தொடங்குகின்றான்.
8. முல்லைத் திணை: இல்லிருந்து நல்லறம் செய்யும் தலைமகன், அவ்வறமும் இன்பமும் சிறத்தற் பொருட்டுப் பொருள் குறித்துத் தலைவியைப் பிரிந்து ஏகுகின்றான். அப்பிரிவுத்துயர் தலைவியைப் பெரிதும் வருத்துகின்றது. கூடியிருந்தபோது தலைமகன் தன்னை இணைம் பிரியாது இருந்து இன்புறுவித்ததை நினைக்கின்றாள்; அவன் தன்னை இன்றியமையாக் காதல்கொண் டொழுகியது அவள் நெஞ்சில் நிலவுகின்றது. அதனால் அவள் தோழியை நோக்கி,
“ யாங்கு அறிந்தனர்கொல்? தோழி! பாம்பின்
உரிநிமிர்ந் தன்ன உருப்பவிர் அமையத்து
இரைவேட் டெழுந்த சேவல் உள்ளிப்
பொறிமயிர் எருத்தின் குறுநடைப் பேடை
பொரிகால் கள்ளி விரிகாய் அங்கவட்டுத்
தயங்க இருந்து புலம்பக் கூஉம்
அருஞ்சுர வைப்பின் கானம்
பிரிந்துசேண் உறைதல் வல்லு வோரே” (குறுந் 154)
என்று வினவுகின்றாள். என்னைப் பிரிந்துறைய மாட்டாத காதலர் உடைமையது உயர்ச்சி கருதி இப்போது பிரிந்துறைய ஒருப்பட்டா ராயினும், அவர் சென்ற கானத்தில் இடயிடையேயுள்ள அருஞ் சுரத்தில், இரைவேட்டெழுந்த சேவலையுள்ளி, அதன் பெடை தனித்திருந்து புலம்பிக் கூவுமதனைக் காண்பரேல் உடனே யான் ஈண்டு அவர் பிரிவாற்றாது புலம்புதலை நினைந்து வந்துவிடுவர்; அற்றாகவும், அவர் வாராது பிரிந்து சேண் உறைகின்றார். அங்ஙனம் உறைதற்கு வேண்டும் வன்மையினை எவ்வாறு கற்றனரோ, தெரிந்திலதே என்பாள், “பிரிந்து சேண் உறைதல் வல்லுவோர் யாங்கறிந்தனர் கொல்” என்று கூறுகின்றாள். இப் பிரிவாற்றாது கூறலும் ஒருவாறு ஆற்றியிருத்தற்கு நிமித்த மாதலின், கருப் பொருளால் இப்பாட்டுப் பாலைக் குரியதாயினும், உரிப்பொருளால் முல்லைத் திணைக்கு உரியதாகின்றது.
தலைமகனது பிரிவை ஒருவாறு ஆற்றியிருக்கும் தலைமகள், அவன் பிரிந்து நெடிது உறைதலை நினைக்கின்றாள்; உடல் மெலி கின்றாள். இதனைக் கேட்ட தோழி, “அன்னாய், நம் தலைவர் பொருளினும் அருளுடைமை பெரிதும் சிறந்தது எனக் கருதும் பெற்றியர். தாம் செல்லும் சுரத்தில், மாவும் புள்ளும் தத்தம் துணையொடு கூடியுறையும் அன்பு நிலையைக் காணுந்தோறும், அவர் உங்களையே உள்ளுவராதலின், விரைய வருவர்; வருந்தற்க” என்று தேற்றுகின்றாள். அவட்குத் தலைவி, “தோழி, அவர் காதல் நிலையை நீ அறியாய்; யான் அறிகுவன்; அவர்க்குக் காதல் பொருளே யன்றி, நம்பால் அருள் என்று தெளியேன். அருளே அவர்க்குக் காதல் என்று நீ தான் கூறுகின்றாய்” என்ற கருத்துப்பட,
“ அறியாய், வாழி, தோழி………..
……….. ……….. ………….. …………
அருஞ்சுரக் கவலை நீந்தி என்றும்
இல்லோர்க்கு இல்என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல்;
அருளே காதலர் என்றி நீயே” (அகம்.53)
என்று செப்புகின்றாள். இதன்கண், தலைவன் பொருளே காதலான தற்குக் காரணம் கூறுவாள், “என்றும் இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும் பொருளே காதலர் காதல்” என்று தலைவனது உள்ளத் தன்மையை உள்ளவாறே மொழிகின்றாள். நெஞ்சம் அவ்வாறு வலித்தலால் எழுந்த வன்மையே, கொடிய சுரத்தையும் அவரை இனிது கடந்தேகுமாறு செய்தது என்பாள், சுரத்தின் கொடுமையை விரித்து,
“ ……….. ……….. ………….. இருளற
விசும்புடன் விளங்கும் விரைசெலல் திகிரிக்
கடுங்கதிர் எறித்த விடுவாய் நிறைய
நெடுங்கால் முருங்கை வெண்பூத் தாஅய்
நீரற வறந்த நிரம்பா நீளிடை
வள்ளெயிற்றுச் செந்நாய் வருந்துபசிப் பிணவொடு
கள்ளியங் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உள்ளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
பொரியரை புதைத்த புலம்புகொள் இயவின்
விழுத்தொடை மறவர் வில்லிட, வீழ்ந்தோர்
எழுத்துடை நடுகல் இன்னிழல் வதியும்
அருஞ்சுரக் கவலை…………………………….” (அகம்.53)
என்று, உரைக்கின்றாள்.
தோழி, வேறே தகுவன கூறித் தேற்றுமுகத்தால் “தலைவர் இளவேனிற் பருவ வரவின்கண் வருவதாகக் கூறியிருக்கின்றார்; அதுவும் இதோ வந்து விட்டது; நீ மேனி வேறுபட்டு வருந்தற்க; அவர் விரைய வருகுவர்” என்று வற்புறுக்கின்றாள். இவ்வாறு பன்முறையும் தோழியால் வற்புறுக்கப்பட்டுளாளா தலின், தலைவி, அவ்வன்புறைக்கு எதிரழிந்து வருத்தம் மிக்கு,
“ நெடுஞ்சே ணிடைய குன்றம் போகிய
பொய்வ லாளர் முயன்றுசெய் பெரும்பொருள்
நம்மின் றாயினும் முடிக வல்லென
பெருந்துனி மேவல் நல்கூர் குறுமகள்
நோய்மலிந் துகுத்த நொசிவரற் சின்னீர்
பல்லிதழ் மழைக்கண் பாவை மாய்ப்பப்
பொன்நேர் பசலை யூர்தரப் பொறிவரி
நன்மா மேனி தொலைதல் நோக்கி
இனையல் என்றி; தோழி! சினைய
பாசரும் பீன்ற செம்முகை முருக்கினப்
போதவிழ் அலரி கொழுதித் தாதருந்து
அந்தளிர் மாஅத்து அலங்கல் மீமிசைச்
செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம்
இன்இள வேனிலும் வாரார்,
இன்னே வருதும் எனத்தெளித் தோரே” (அகம்.229)
என்று வருந்திக் கூறுகின்றாள். இதன்கண், அவள், தான் இறந்து படினும், தலைவன் கருதிய பொருள் முடிக்க என நினைந்து நோய்மலிந்து, கண்கலுழ்ந்து, பசலைபடர்ந்து, மேனிநலம் தொலைந் தமையும், அதுகாணும் தோழி, அவர் இளவேனில் வரவின்கண் வருவர் என்றதும், அவன் வாராமையும் கூறுதல் காண்க.
இனி, இதன்கண் வேறொரு கருத்தும் புலப்படுக் கின்றாள்: அவர் குன்றங்கள் பல கடந்து சென்றுள்ளார். அவ்விடத்தே, களிற்றைப் பிரிந்த மடப்பிடி தன் குழவியுடன் கூடி உண்டற்குரிய குளகினை மறுத்து உண்ணாது உயங்கித் தோன்றுவதைக் கண்டிருப்பர். அதன் செயல், தன்னைப் பிரிந்திருக்கும் என்னை நினைவுறுத்தாது போயிராது. அற்றாகவும், பொய்வலாளராதலின், அவர் அந் “நெடுஞ் சேணிடைய குன்றம்” போயினர். காண் என்பாளாய்,
“ பகல்செய் பல்கதிர்ப் பருதியஞ் செல்வன்
அகல்வாய் வானத் தாழி போழ்ந்தென
நீரற வறந்த நிரம்பா நீளிடைக்
கயந்தலைக் குழவிக் கவியுகிர் மடப்பிடி
குளகுமறுத் துயங்கிய மருங்குல் பலவுடன்
பாழூர்க் குரம்பையின் தோன்று மாங்கண்
நெடுஞ்சேண் இடைய குன்றம் போகிய
பொய் வலாளர்…………” (அகம். 229)
என்று இனைகின்றாள்.
இவள் செய்கை இவ்வாறிருக்க, பிரிந்த தலைமகன் தான் மேற்கொண்ட வினையை முடித்துக்கொண்டு, இவளைக் காண்டற் கெழுந்த வேட்கை பெரிதும் முடுகுதலால், விரைந்து வருகின்றான். அவன் மீளலுறுங் காலம் கார்காலம். மழை நன்கு இனிது பெய் திருக்கிறது; கானம் இனிய காட்சி வழங்குகிறது. காயாமரங்கள் நீலமலரைப் பூத்திருக்கின்றன. தம்பலப் பூச்சிகள் ஆங்காங்குப் பரந்து கிடக்கின்றன. இடையிடையே முல்லை மலர்கள் உதிர்ந்து கிடக்கின்றன. இவற்றைக் காணும் அத்தலைமகன்,
“ வானம் வாய்ப்பக் கவினிக் கானம்
கமஞ்சூல் மாமழை கார்பயந்து இறுத்தென
மணிமருள் பூவை அணிமலர் இடையிடைச்
செம்புற மூதாய் பரத்தலின், நன்பல
முல்லை வீகழல் தாஅய், வல்லோன்
செய்கை யன்ன செந்நிலப் புறவு” (அகம்.134)
என மகிழ்ந்து கூறுகின்றான். அப்போது, அவன் கண்ணெதிரே மான் கூட்டம் தோன்றுகிறது. மானேறு பிணைமானைக் கூடும் காட்சியைக் காண்கின்றான். அருள் வள்ளலாதலின், தான் செல்லும் தேரிற் பூட்டிய குதிரையின் செலவு மானின் புணர்நிலைக் கூட்டத்தைக் கெடுக்குமென்று அஞ்சுகின்றான். உடனே பாகனை நோக்கி,
“ வா அப் பாணி வயங்குதொழிற் கலிமாத்
தாஅத் தாளிணை மெல்ல ஒதுங்க,
இடிமறந்து ஏமதி, வலவ, குவிமுகை
வாழை வான்பூ ஊழுறுபு உதிர்ந்த
ஒழுகுலை யன்ன திரிமருப் பேற்றொடு
கணைக்கால் அம்பிணைக் காமர் புணர்நிலை
கடுமான் தேரொலி கேட்பின்
நடுநாட் கூட்டம் ஆகலு முண்டே” (அகம். 134)
என்று சொல்லி மெல்லச் செல்விக்கின்றான்.
மருதத் திணை
இவ்வண்ணம் பொருள் முதலியன ஈட்டலும், ஆண்மைப் பணி புரிதலும், ஈகைமேல் நிற்கும் இசை பெறுதலும் முதலிய நற்செயல் புரிந்து இன்புற்று வாழ்ந்துவரும் தலைமகனுக்குப் பரத்தைமை யொழுக்கம் உண்டாகின்றது. அதனால், அவன் தலைமகளைப் பிரிந்தேகுகின்றான். அவட்குப் பொறாமை மிகு கின்றது. அவளும் தோழியும் அப்புறத் தொழுக்கத்தை மாற்று தற்குப் பெரும்பாடு படுகின்றனர். ஒருநாள், அவன் பரத்தையிற் பிரிந்து வருகின்றான். தலை மகள், அவனை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றாள். தோழியை வாயில் வேண்டித் தலைமகளையடையத் தலைமகன் விழைகின்றான். அவனை மறுக்கும் தோழி, “ஊரனே, இனி எம்மைப் பேணாது அகன்று சென்று அவளையே பேணுக. அவள் நீ பிரிந்தமையின் இகழ்ந்தன சொல்லிக் கண்ணீர் சொரிந்து சிறு துளி கொண்டு எம் தெருவைக் கடந்து சென்றாள்; அவள் ஈங்கே இல்லை” என்பாளாய்,
“ பெரும் பெயர் மகிழ்ந, பேணாது அகன்மோ
………………………………………………………………………………………….
………………………………………………………………………. மாண்ட
மதியேர் ஒண்ணுதல் வயங்கிழை ஒருத்தி
இகழ்ந்த சொல்லும் சொல்லிச் சிவந்த
ஆயிதழ் மழைக்கண் நோயுற நோக்கித்
தண்நறுங் கமழ்தார் பரீஇயினள், நும்மொடு
ஊடினள் சிறுதுனி செய்து, எம்
மணல்மலி மறுகின் இறந்திசி னோளே” (அகம். 306)
என்று கூறுகின்றாள். பெரும் பொருளை விரும்பும் நினக்கு இயைய ஒழுகப்பண்ணாது, இகழ்ந்த சொல் சொல்லி, நோயுற நோக்கி, தார்பரிந்து, ஊடிச் சிறு துனி செய்து மறுகிடை இறந்து திரியப் பண்ணுதல் நின் தலைமைக்கு அமைவதன்று என்று கூறி மறுப்பாள், “பெரும் பெயர் மகிழ்ந,” என்றும், “இதுவோ மற்றுநின் செம்மல்” என்றும் கூறி மறுக்கின்றமை காண்க. மேலும், பரத்தையின் இகழ்ந்த செயலைக் கூறி இகழ்கின்றாளாதலின், அவளை, “மாண்ட மதியேர் ஒண்ணுதல் வயங்கிழை ஒருத்தி” எனப் புகழ்வாள்போல இகழ்கின்றாள்.
நாளும் புதிய புதிய பரத்தையரைக் கூடி, நினக்கு வாயிலாகிய பாணன் முதலாயினார் பரவ அவர் மனைக்கண்ணே தங்குகின்றாய் எனத் தலைவனது புறத்தொழுக்கத்தை வெளிப்படக் கூற நாணி, உள்ளுறையால்,
“ பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய
முட்கொம்பு ஈங்கைத் துய்த்தலைப் புதுவீ
ஈன்ற மரத்தின் இளந்தளிர் வருட
வார்குருகு உறங்கும் நீர்சூழ் வளவயல்” (அகம். 306)
என்கின்றாள். பொய்கை பரத்தையர் சேரியாகவும், ஈங்கைத் துய்த்தலைப் புதுவீ புதிய பரத்தையராகவும், மரத்தின் இளந்தளிர் வாயில்களாகவும், குருகு தலைமகனாகவும் உள்ளுறை கொள்க. நின்மனையிடத்தே விளையாட்டயரும் புதல்வன் மார்பிவர்ந்து மகிழ, அதனால் இன்புற்று இனிதிருக்க வேண்டியவனான நீ இவ்வாறொழுகல் நன்றன்று என்னும் பொருள் பயப்ப,
“ கழனிக் கரும்பின் சாய்ப்புற மூர்ந்து
பழனயாமை பசுவெயிற் கொள்ளும்
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர” (அகம். 806)
என்று தோழி உரைக்கும் திறம் மிக்க நயமாக இருத்தலைக் காண்மின். கரும்பின் சாய்ப்புறம் தலைவன் மார்பாகவும், யாமை மனையிடத்து விளையாடும் புதல்வனாகவும் கொள்க.
பிறிதொருகால் தலைமகன் பரத்தையிற் பிரிந்த போது, மீளத் தன் மனையை அடையக் கருதித் தோழியின் கருத்தறிந்து வருமாறு பாணனை வாயிலாக விடுகின்றான். பாணனும் அவ்வண்ணமே போந்து தோழியைக் காண்கின்றான்.
அவனை வெகுண்டு வாயில் மறுக்கலுற்ற தோழி, “தலை மகன் முன்பு பரத்தையிற் பிரிந்து வந்தபோது வினாயதற்கு ‘யாரையும் அறியேன்’ என்றான்; அப்பொய்ம் மொழி இப்போது ஊரெங்கும் பரந்து நடுக்கம் செய்வதாயிற்று” என்று உள்ளுறுத்து,
“ இருங்கழி துழைஇய ஈர்ம்புற நாரை
இறகெறி திவலையின் பனிக்கும் பாக்கத்து
உவன் வரின் எவனோ? பாண………..” (நற்.127)
என்று மொழிகின்றாள். இவண் அவன் வருதலால் ஒரு பயனும் இல்லை யென்பது பட, “உவன் வரின் எவனோ?” என்றது கேட்டதும் பாணன் காரணம் தெரியாது மருண்டு நிற்க, “தலை மகள் தலை மகனை யின்றியே கானற்குப் பண்டு வண்டலயரச் சென்றது போல இன்றும் செல்வாம் என்கின்றாள். எனவே தலைமகனையின்றியே தான் தனித்துச் சென்று விளையாட்டயரக் கூடிய அளவு அவட்குத் துனியுண்டாகி விட்டது; இவ்வளவிற்கும் தலைவனது புறத்தொழுக்கமே காரணம்,” என்பாள்.
“ ………. பேதை
கொழுமீன் ஆர்கைச் செழுநகர் நிறைந்த
கல்லாக் கதவர் தன்னைய ராகவும்
வண்ட லாயமொடு பண்டுதான் ஆடிய
ஈனாப் பாவை தலையிட் டோரும்
மெல்லம் புலம்பன் அன்றியும்
செல்வாம் என்னும் கானலானே. ” (நற்.127)
என்று உரைக்கின்றாள். “அவன் சோர்பு காத்தல் கடன் எனப் படுதலின்” (தொல்.பொ) தலைமகள் தலைவனின்றியே தன் மனையின் நீங்கிச் சேறல் அறமன்றே; செல்ல ஒருப்பட்டதாகத் தோழி கூறல் வழுவே; ஆயினும், “அறக்கழிவுடையன பொருட் பயம் படவரின்” (தொல்.பொ.) அமையும் என ஆசிரியன்மார் கூறுதலின், தோழி இவ்வாறு உரைத்தல் அமையும் என்பர்.
இது கேட்கும் பாணன் அஞ்சித் தலைமகனைக் கொணர்ந்து கூட்டுகின்றான். தலைவன் தலைமகளோடு கூடி இன்புற்று இனிது வாழ்கின்றான்.
10. இப்பாட்டுக்களின் சிறப்பராய்ச்சி: இது காறும் கூறிய வாற்றால், நம் சீத்தலைச் சாத்தனாரது பாவன்மை நன்கு தெரியக் கண்டோம். இப்பாட்டுக்களுள் சொல்லப்படும் ஒவ்வொரு கருத்தும் வறிதே செல்லாது. கூறுவோர் உள்ளத்தில் எழும் உண்மைக் கருத்துக் களையும் உடன் உணர்த்திச் செல்லும் இயல்புடையதாய் இருத் தலைக் காண்கின்றோம். பொருட் டுறையின் வரம்பு இகந்தன போலத் தோன்று வனவும் நுணுகி நோக்குமிடத்து, அவ்வரம்பு இகவாதே செல்லும் நேர்மை, நம் சாத்தனாரது புலமைத் திறத்தை இனிது காட்டிவிடுகிறது.
இனி, இப்பாட்டுக்களால், இவர் இயற்கைப் பொருள் களைக் கூர்மையுடன் கண்டு, உள்ளதன் உண்மை சிறிதும் மறையாத வாறு உரைக்கும் திறத்தைச் சிறிது காண்டல் வேண்டும். இக்காட்சி, பரந்து பட்டுச் செல்லும் இம்மணி மேகலைக் காப்பியத்தை நுகர்தற்குத் துணை செய்யும்.
குறிஞ்சி நிலத்தே யானைகள் வாழ்வனவாகும். அவை கூட்டம் கூட்டமாகவே வாழ்வன. மேலும், அவற்றுள் களிற்றுக்கும் பிடிக்கும் உண்டாகும் காதலன்பு மிகச் சிறந்ததென்பர். தான் காதலித்த களிறு இறந்துபடின், பிடியானை பலநாள் வரையில் புலம்பிக் கொண்டிருக்குமென யானை வேட்டுவர் கூறுகின்றனர். இவ்வுண்மையை நம் சாத்தனார்,
“ குறுங்கை யிரும்புலிக் கோள்வல் ஏற்றை
பூநுதல் இரும்பிடி புலம்பத் தாக்கித்
தாழ்நீர் நனந்தலைப் பெருங்களிறு அடூஉம்” (நற்.36)
என்று கூறுகின்றார். யானை பிடிப்போரும் நீர்நிலைக் கண்ணே சென்று பதுங்குவராதலின், புலியும், யானையைத் “தாழ் நீர் நனந்தலைக்” கண்ணே இருந்து தாக்குதலை இவர் கூறுவதைக் காண்மின்.
இரலைமானின் கொம்பு முறுக்குண்டு கணுக்கணுவாய் இருத்தலை நாம் காண்கின்றோம். இதற்கு ஓர் எளிய உவமை காட்டி இதனைக் காணார்க்கு உரைக்க முயலின், அப்போது அதன் அருமைப்பாடு தெற்றெனப் புலனாகிறது. இதனை மிக எளிதாகக் காட்டலுற்ற நம் தண்டமிழாசானாகிய சாத்தனார், வாழைப் பூவை எடுத்து, அதனை மூடியிருக்கும் இதழ்களை நீக்க, எஞ்சி யிருக்கும் தண்டினை வேறுபடுத்து இரலைமானின் கொம் பிற்கும் உவமை கூறுவார்.
“ …………………………….குவி முகை
வாழை வான்பூ ஊழுறுபு உதிர்ந்த
ஒழிகுலை யன்ன திரிமருப் பேறு” (அகம். 134)
என்று கூறுகின்றார்
நீர்நிலையில் நின்று மீன் நாடி யுண்டிருந்த நாரைகள் கரை யிடத்திருக்கும் மரங்களில் தங்கித் தம் நனைந்த சிறகுகளை உதறும் போது, அவற்றில் ஒட்டியிருந்து உதிரும் நீர்த் திவலைகள் பனி போல் துளிக்கும் என்பதை நன்கு கண்டதனால்,
“ இருங்கழி துழைஇய ஈர்ம்புற நாரை
இறகெறி திவலையின் பனிக்கும் பாக்கம்” (நற்.127)
என்று இசைக்கின்றார். அன்னங்கள் அத்துணை உயரத்தில் சென்று தங்காது, நீர் நிலையின் அருகிலுள்ள மணல் மேட்டில் இருந்து தம் சிறகுகளை உலர்த்தும் என்பார்,
“ நெடுங்கழி துழைஇய குறுங்கா லன்னம்
அடும்பமர் எக்கர் அஞ்சிறை உளரும்” (அகம்.320)
என்று உரைக்கின்றார்.
வயலருகே யுள்ள பரந்த ஒரு நீர்நிலையின் கரையில் பிரம்பும் ஈங்கையும் வளர்ந்திருக்கின்றன. அவற்றின் இடையே மாமரம் ஒன்று மிக உயரமாக நில்லாது கிளை விரிந்து தழைத்துத் தளிரொடு தாழ இருக்கிறது. மீனுண் குருகு ஒன்று ஈங்கையின் பூங்கொத்தில் இருப்ப, காற்றால் மாந்தளிர் அதன் புறத்தைத் தடவியசைய, அஃது இனிது உறங்குகின்றது. இதனைக் கண்ட சாத்தனார் இனிய சொல்லோவியம் எழுதுவாராய்,
“ பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய,
முட்கொம்பு ஈங்கைத் தூய்த்தலைப் புதுவீ
ஈன்ற மாத்தின் இளந்தளிர் வருட
வார்குருகு உறங்கும் நீர்சூழ் வளவயல்” (அகம்.306)
என்று இசைக்கின்றார். பிறிதோரிடத்தே, பசிய அரும்பும் சிவந்த பூவும் உடைய முருக்க மரத்தில் குயிலொன்று உட்கார்ந்து அப்போது மலர்ந்த பூக்களைக் கோதி, அவற்றின் தாதினை அருந்துகிறது. பின்பு, அதனை விட்டு நீங்கி, புதுத் தளிர் ஈன்ற மாமரத்தையடைந்து, அசைகின்ற தளிர்க்கொத்தில் இருந்து கொண்டு கேட்போர் விரும்புமாறு கூவுகிறது. இஃது இளவேனிற் காலத்தின் இயல்பு. இவ்வியல்பினை நன்கு கண்ட சாத்தனார்,
“ ……………………………………………………சினைய
பாசரும் பீன்ற செம்முகை முருக்கின்அப்
போதவிழ் அலரி கொழுதித் தாதருந்து
அந்தளிர் மாஅத்து அலங்கல் மீமிசைச்
செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம்
இன்இள வேனில்” (அகம். 229)
என்று பாடுகின்றார்.
இறுதியாக ஒன்று காட்டி இப்பகுதியினை முடிக்கின்றாம். நம் சாத்தனார் முல்லைநிலம் ஒன்றைக் காண்கின்றார். அந்நிலம் செம்மண் நிலம் மழை நன்கு பெய்திருக்கிறது. காடு தழைத்துப் பூத்து இனிதாக இருக்கிறது. காயா மரங்கள் நீலநிறமான பூக்களைப் பூப்ப, அவை தரையில் உதிர்ந்து கிடக்கின்றன. அவற்றின் இடையிடையே செக்கர்ச்செவேரென வுள்ள தம்பலப் பூச்சிகள் மேய்கின்றன. அவற்றோடு, புதர்களில் படர்ந்துள்ள முல்லைக் கொடிகள் பூப்ப, அவற்றின் பூக்களும் உதிர்ந்து கிடக்கின்றன. செந்நிலத்தே புல்லின் பசுமையும், காயாம் பூவின் நீலமும், தம்பலப் பூச்சியின் செம்மையும், முல்லைப் பூவின் வெண்மையும் மனக் கண்ணால் கூர்ந்து நோக்கினார் நம் தமிழ்ப் பெரும் புலமைச் சான்றோராகிய சாத்தனார். இதனை நமக்கு வழங்க வேண்டு மென்ற அருள், அவரது உள்ளத்தைச் செலுத்த, அதன் வழி நின்று, வினை முற்றிய சிறப்பும் தன் காதலிமேற் சென்ற பேரன்புமுடைய தலைமகன் ஒருவன் கூற்றில் வைத்து,
“ வானம் வாய்ப்பக் கவினிக் கானம்
கமஞ்சூல் மாமழை கார்பயந்து இறுத்தென,
மணிமருள் பூவை யணிமலர் இடையிடைச்
செம்புற மூதாய் பரத்தலின், நன்பல
முல்லை வீகழல் தாஅய், வல்லோன்
செய்கை யன்ன செந்நிலப் புறவு” (அகம்.134)
என்று தாமும் ஓர் சொல்லோவியம் தீட்டி விட்டார். இனி, இவை போலவரும் பிறவற்றையும் விரிப்பின் இம்முன்னுரை மிக விரியும் என்று அஞ்சி விடுக்கின்றாம்.
II.நூல்
இதுகாறும், சீத்தலைச் சாத்தனார் பாடிய தொகை நூற் பாட்டுக்களை ஓராற்றால் ஆராய்ந்து அவரது புலமைச் சிறப்பைக் கண்டோம். சொற்களை வறிதே செலவிடாது, ஒவ்வொன்றும் நன்கு பயன்பட வழங்குதலும், இயற்கைப் பொருளை உள்ளவாறே எடுத்துக் காட்டுதலும், வெளிப்படையாகவும், மறைமுகமாகவும், குறிப்பாகவும், உணர்த்தற்குரிய கருத்துக்களை ஏற்றவாறு புலமை நலம் விளங்கக் கூறலும், பிறவும், அவருடைய புலமைப் பண் பாதலை இனிது தெளிந்தோம். இனி, அவர் பாடிய இம் மணி மேகலையின் நலத்தைக் காண்பது வேண்டி, முதற்கண், கதைச் சுருக்கத்தைத் தருகின்றாம்.
இக் காப்பியத்துக்குத் தலைவியாய மணிமேகலை, காவிரிப் பூம்பட்டினத்துப் பெருங்குடி வணிகனான கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள். கோவலன் மதுரையில் கொலை யுண்டது கேள்வியுற்று, மாதவி துறவு பூண்டு பௌத்த சங்கத்து அறவண வடிகள் என்பவர்பால் நால்வகை வாய்மையும், ஐவகைச் சீலமும் கேட்டுத் தெளிந்து அவ்வறத்தை மேற்கொண்டு ஒழுகு கின்றாள். மணிமேகலையும் ஆடலும், பாடலும் அழகும் சிறந்திருந்த போதும், “தாயைப் போல மகள்; நூலைப் போலச் சீலை” என்ற பழமொழிக் கிணங்கத் தானும் அப்பௌத்த தருமங்
களைப் பின்பற்றி ஒழுகி வருகின்றாள்.
காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர விழா நடைபெறுகிறது. விழாவில் மாதவியும் மணிமேகலையும் கலந்து, கொள்ளவில்லை. மாதவியின் தாயான சித்திராபதி, வயந்த மாலையை மாதவி பால் செலுத்தி, அவள் விழாவிற்கு வாராமையால் ஊரவர் அலர் கூறுகின்றனரென உரைத்துவரச் செய்கின்றாள். வயந்த மாலை, மாதவியையும் மணிமேகலையையும் மலர் மண்டபத்தே காண் கின்றான். அவட்கு மாதவி,
“ மாபெரும் பத்தினி மகள் மணி மேகலை
அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படாஅள்” (2:55-57)
என்று கூறித், தான் மாதவர் உறைவிடம் புகுந்து அறவண வடிகள் பால் வாய்மையும் சீலமும் கேட்டு அறம்பூண்டொழுகு வதைத் தெரிவித்து இதனைச் சித்திராபதிக்குச் செப்புக என்று விடுக்கின்றாள்.
அப்போது, மாதவி யுரைத்தவற்றைக் கேட்டிருந்த மணி மேகலை கோவலனுற்ற துயர்கேட்டுக் கண்ணீர் வடிப்ப, அந்நீர் அவள் தொடுத்திருந்த பூமாலையை நனைத்து அதன் தூய்மையைச் சிதைக்கவே, மாதவி, அவளைச் சுதமதியுடன் மலர்வனம் புகுந்து புதுப்பூக்கள் வேறே கொணருமாறு பணிக்கின்றாள். இருவரும் விழா வயரும் பல தெருக்களைக் கடந்து, உவவனம் என்னும் அழகிய மலர்ச் சோலையை அடைந்து மலர் கொய்கின்றனர்.
நகரத்தே காலவேக மென்னும் பட்டத்தியானை மதம் பட்டுத் திரிய, அதனை உதயகுமரன் என்னும் அரசகுமாரன் அடக்கிப் பணிவித்து, தான் ஒரு தேர் ஊர்ந்து வருகையில் மணி மேகலை மலர்வனம் சென்றிருத்தலைக் கேள்வியுற்று, ஆங்கே குறுகவர, தேரொலி கேட்ட மணிமேகலை, சுதமதியை நோக்கி, உதய குமரன் என்பாற் காதல் மிகக்கொண்டுள்ளான் என்று யான் அறிவேன். இஃது அவன் தேரொலிபோல இருக்கிறதே; இதற்கு யான் என் செய்வேன்” என்று கூறுகின்றாள். சுதமதி மனம் துளங்கி, அங்கிருந்த பளிக்கறை மண்டபத்தில் அவளை ஒளித்து விடுகின்றாள். உதய குமரன் அவளை யணுகி, “மணிமேகலை தனித்து வந்ததற்குக் காரணம் என்ன?” என்று வினவ, சுதமதி, மக்கள் யாக்கையின் புன்மையியல்புகளை விளங்கக் கூறுகின்றாள். அப்போதில், பளிக்கறையின் உள்ளேயிருந்த மணிமேகலையின் படிவம் அவன் கண்ணிற்குப் புலனாகிறது.
உடனே, மணிமேகலையை யடைய எண்ணி, அவ்வறையின் வாயிலைக் கையால் தடவி நோக்கிக் காணமாட்டாது, “அவள் எத்திறத்தாள்?” எனச் சுதமதியைக் கேட்ப, அவள், “இம் மணி மேகலை, தவவொழுக்கமும் சபிக்கும் வன்மையும், காமம் கடந்த வாய்மையும் உடையள்” என்று உரைக்கின்றாள். அது கேட்கும் அவன், மணிமேகலை “செவ்வியளாயின் என் செவ்வியளாக” எனச் செப்பிவிட்டு நீங்குவோன், “இனி, இவளைச் சித்திராபதியால் சேர்வேன்” என்று சொல்லி ஏகுகின்றான். பின் வெளிவந்த மணி மேகலை, தன் நெஞ்சம் அவன்பால் செல்வது கண்டு, “இதுவோ, அன்னாய், காமத்தின் இயற்கை,” என்று வியந்து, “இதன் இயற்கை இதுவாயின், இஃது என்பால் கெடுக” என்று மொழிந்து நிற்குங் கால், இந்திர விழாக்காணப் போந்த மணிமேகலா தெய்வம் ஒரு பெண் வடிவிற் போந்து, பளிக்கறையில் இருந்த புத்த பீடிகையை வலங்கொண்டு உயரத்தில் எழும்பி நின்று பலவாறு ஏத்தி நிற்ப, பகற்போது நீங்குகிறது; அந்தியும் இரவும் ஒன்றன் பின்னே ஒன்றாக வருகின்றன.
பின்பு, மணிமேகலா தெய்வம், சுதமதியை அவ்வனத்திற்கு இருவரும் வந்த காரணம் கேட்டறிந்து, “இது முனிவர் வனமாதலை யறிந்து உதயகுமரன் தீங்கு செய்யாது சென்றான்: அவற்கு மணி மேகலைபால் எழுந்த வேட்கை தணிந்திலது; இப்போது வெளியே செல்லின் அவன் அகப்படுத்திக் கொள்வன்; நீவிர் இருவரும் சக்கர வாளக் கோட்டத்திற்குச் செல்க” என்று சொல்ல, சுதமதி, “சுடு காட்டுக் கோட்டம் எனப்படும் இதனைச் சக்கரவாளக் கோட்ட மென்று கூறுதற்குக் காரணம் யாது?” என்று வினவுகின்றாள். அத்தெய்வம் காரணம் கூறுகிறது. சிறிதுபோதில் சுதமதி உறங்கவும் மணிமேகலையை மயக்கி, அத்தெய்வம் அவளைத் தழுவி யெடுத்துக் கொண்டு சென்று மணி பல்லவம் என்னும் தீவையடைந்து ஆங்கே ஓரிடத்தே அவளை வைத்து விட்டுச் சென்றுவிடுகிறது.
சென்ற தெய்வம் உதய குமரனை யடைந்து, அவன் முன்னே நிள்று, அரசு முறையின் இயல்பை எடுத்தோதி, “தவத்திறம் பூண்ட மணிமேகலைபால் வைத்த வேட்கை யொழிக” என்று கூறுகிறது. பின்பு, அத்தெய்வமே, சுதமதியை யடைந்து, அவளை யெழுப்பித் தன்னை இன்னாரென்று அறிவித்து, தான் இந்திர விழாக் காண வந்ததும் மணிமேகலை மணிபல்ல வத்தே வைத்ததும் சொல்லி, ‘மணிமேகலை தன் பழம் பிறப்புச் செய்திகளை யறிந்து கொண்டு இற்றைக்கு ஏழாம் நாள் இங்கே வருவள்; அவள் வேற்று வடிவம் கொள்ளினும் நினக்குத் தன்னை மறைக்காள்; அவட்கு என்னைத் தெரியும்; அவள் தான் பெற்ற மகட்குப் பெயரிடும் நாளில், யான்,
“ காமன் கையறக் கடுநவை யறுக்கும்
மாபெருந் தவக்கொடி ஈன்றனை யென்றே
நனவே போலக் கனவகத் துரைத்தேன்;” (7:36 -38)
இதனையும் அவட்குக் கூறி நினைப்பூட்டுக,’ என்று சொல்லி நீங்கிவிடுகிறது.
மணிமேகலையின் பிரிவாற்றாத சுதமதி வருத்தத்துடன் சக்கரவாளக் கோட்டத்திலுள்ள உலகவறவியின் பக்கத்தே நின்று வருந்த, அங்கிருந்த தூணிற் செய்த பாவையொன்று தெய்வச் சாயை பெற்று, சுதமதியின் பழம்பிறப்புச் செய்தியும், காவிரிப்பூம் பட்டினத்திற்கு அவள் வந்த வரலாறும் கூறி,
“ இன்றேழ் நாளில் இடையிருள் யாமத்துத்
தன்பிறப் பதனொடு நின்பிறப்புணர்ந்து ஈங்கு
இலக்குமி யாகிய நினக்குஇளை, யாள்வரும்
அஞ்சல் என்று” (7:106 - 109)
உரைக்கின்றது சிறிது போதில் பொழுது விடிகிறது. அவள் மாதவி பால் சென்று நிகழ்ந்தது முற்றும் அவட்குக் கூறுகின்றாள். இருவரும் மணிமேகலையின் பிரிவு நினைந்து வருந்தி யிருக்கின்றனர்.
மணிபல்லவத்தே தனித்திருந்த மணிமேகலை விழித் தெழுந்து வேற்றிடமாதலை யறிந்து மனம் மருண்டு, “உவ வனத்தின் ஒருபுறம்போலும் இது” என்று நினைந்து, பின்னர்ச் சுதமதியைக் காணாது கலங்கி, அரற்றியும், உரப்பியும் அலமருகின்றாள்; அங்கும் இங்கும் அலைந்து நோக்குகின்றாள்; கோவலனை நினைக்கின்றாள்; கோவெனக் கதறிப் புலம்புகின்றாள். அவளெதிரே, புத்தனாகிய
“ பெருந்தவ முனிவன் இருந்துஅறம் உரைக்கும்
பொருவறு சிறப்பின் புரையோர் ஏத்தும்
தரும பீடிகை” (8:61-63)
தோன்றுகிறது. அதனைக் கண்டதும், அவட்குக் கைகள் அவளை யறியாமலே தலைமேற் சென்று குவிகின்றன; கண்கள் நீர் உகுக் கின்றன. அதனை அவள் மும்முறை வலம் வந்து விழுந்து வணங்கி யெழுகின்றாள். எழும்போதில் அவட்குப் பண்டைப் பிறப்பில், தான் அசோதர நகரத்து இரவிவன்மன் என்னும் வேந்தற்கும் அமுதபதியென் பாட்கும் இலக்குமி என்னும் மகளாய்ப் பிறந்து, அத்திபதியென்னும் அரசன் மகனான இராகுலன் என்பானை மணந்து வாழ்ந்ததும், அவனொடு வாழ்ந்து வருநாளில் பிரமதரும முனிவனை வணங்கி அறங்கேட்டதும், இராகுலன் திட்டிவிடம் என்னும் பாம்பால் இறப்பத் தான் தீப்புகுந்து இறந்ததும், அப்போது அம்முனிவன், நீ வரும் பிறப்பில் மணிபல்லவத்தில் மணிமேகலா தெய்வத்தால் இராகுலனது மறுபிறப்பை அறிவாய் என்று உரைத்ததும் பிறவும் நன்கு தெரிந்து கொள்கின்றாள். உடனே மணிமேகலை அம்மணி மேகலா தெய்வத்தை நினைந்து வருந்து கின்றாள். அபபோது, மணிமேகலா தெய்வம் அங்கே போந்து தரும பீடிகையைப் புத்தனாகவே எண்ணித்துதித்து நிற்க, அத் தெய்வத்தை நோக்கி, மணிமேகலை இராகுலனது பிறப்பை வினவுகின்றாள். அத்தெய்வம் அவள் பிறப்பும் ஏனைச் சுதமதி மாதவி முதலாயினார் பிறப்பும் கூறி, மணிமேகலைக்கு எதிர்வில் நிகழ விருப்பனவும் வேற்றுருக்கோடல், அந்தரம் திரிதல் என்ற இரண்டிற்கு முரிய மந்திரமும் கூறி நீங்குகிறது. நீங்குங்கால், ஒன்று நினைவு கூர்ந்து,
“ மறந்ததும் உண்டென மறித்தாங்கு இழிந்து,
சிறந்த கொள்கைச் சேயிழை, கேளாய்;
மக்கள் யாக்கை உணவின் பிண்டம்;
இப்பெரு மந்திரம் இரும்பசி யறுக்கும் என்று
ஆங்குஅது கொடுத்துஆங்கு அந்தரம் எழுந்து” (10:88-92)
சென்று விடுகிறது.
மணிமேகலை,தானும் உடனே புறப்படாது, அம்மணி பல்லவத் தீவிலுள்ள மணற்குன்றம், பூஞ்சோலை, பொய்கை முதலியவற்றைக் கண்டு வருகின்றாள். அவள் எதிரே தீவதிலகை யென்பா ளொருத்திவந்து மணிமேகலையை யார் என்று வினவ, இவள் தன் பழம்பிறப்பும், இப்பிறப்பும் சேரக் கூறுகின்றாள், மணிமேகலைக்குத் தீவதிலகை தான் இந்திரன் ஏவலால் பீடிகை காவல் புரிந்துவருவதும், பீடிகையின் இயல்பும் கூறி, “இற்றை நாள், இங்கே உள்ள கோமுகிப் பொய்கையில் அமுத சுரபி யென்னும் பாத்திரம் வெளிப்படு நாளாகும். அது முன்நாளில் ஆபுத்திரன் கையில் இருந்தது நாம் அங்கே சென்றால், அப்பாத்திரம் நின்கைக்கு வரும்;
“ ஆங்குஅதிற் பெய்த ஆருயிர் மருந்து
வாங்குநர் கையகம் வருத்துத லல்லது
தான்தொலை வில்லாத் தகைமைய தாகும்” (11:48-50)
அதன் வரலாற்றை ஊரில் அறவண அடிகள் பால் கேட்கலாம்; வருக” என்று சொல்லி அப்பொய்கைக்கு அழைத்தேகு கின்றாள். இருவரும் கோமுகியை வலஞ் செய்து நிற்ப, அமுதசுரபி யெழுந்து வந்து மணிமேகலையின் கையில் தங்குகிறது. தீவதிலகை பசிப் பிணியின் கொடுமையைப் பலபடக் கூறி அதனைத் தீர்ப்பதாகிய நல்லறத்தைச் செய்யுமாறு மணி மேகலைக்கு உரைக்க, அவளும் மகிழ்வோடு இசைந்து, “வெயிலென முனியாது புயலென மடியாது” எவ்விடத்தும் எக்காலத்தும் சென்று, பசிப்பிணியால் வாடு வோரைக் கண்டு,
“ …………………………………….விஞ்சைப் பாத்திரத்து
அகன் சுரைப் பெய்த ஆருயிர் மருந்து அவர்
முகம்கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன்” (11:116-118)
என்று கூறுகின்றாள், தீவதிலகையும் பெருமகிழ்ச்சியுற்று, ‘இப்பாத்திரம்,
“ அறம்கரி யாக அருள்சுரந் தூட்டும்
சிறந்தோர்க் கல்லது செவ்வனம் சுரவாது;
ஆங்கன மாயினை, அதன் பயன் அறிந்தனை” (11:120-122)
இனி, நீ செல்க’ என்று விடுப்ப, மணிமேகலை பீடிகையை வழி பட்டு, வான் வழியாகக் காவிரிப்பூம் பட்டினம் வந்து, வாடி வருந்தித் தன் வருகை நோக்கியிருக்கும் மாதவி சுதமதி என்ற இருவரையும் கண்டு, அவர்தம் பழம் பிறப்பும், அமுத சுரபியின் இயல்பும் கூறுகின்றாள்; யாவரும் மகிழ்கின்றனர். பின்பு மூவரும் அறவண வடிகள் இருக்கும் இடத்துக்குச் சென்று அவரைக் கண்டு வணங்கு கின்றனர். மணிமேகலை தான் மலர் வனம் புக்கதுமுதல் நிகழ்ந்த அனைத்தும் அவர்க்கு உரைக்கின்றாள்.
அறவண அடிகள், “மணிமேகலைக்கு மாதவி சுதமதி யென்ற இருவரது பழம்பிறப்பு வரலாறும், முற்பிறப்பில் தான் அவர்களைக் கண்டதும், சக்கரவாளத்துத் தேவரனைவரும் துடிதலோகம் சென்று, பிரபாபாலரை இரப்ப, அவர் அறம் செழித்தல் வேண்டிப் புத்தனாகத் தோன்றியதும், அவன் தோற்றச் சிறப்பும் பிறவும் கூறி, நின்னால் இங்கே பல நிகழ்ச்சிகள் நிகழ விருக்கின்றன; இம் மாதவியும் சுதமதியும் நின்னுடன் புத்தனை வணங்கி அவன் காட்டிய நல்வழிப் படர்குவர்; நீ பெற்ற அமுதசுரபி கொண்டு மக்களது பசிப்பிணி தீர்க்கும் பேரறத்தை மேற்கொள்க” என்று உரைக்கின்றார். மணிமேகலையும் அப்பாத்திரத்தைக் கையில் ஏந்திக் கொள்கின்றாள்.
அதைக் கண்டதும் அவ்வறவணவடிகள் ஆபுத்திரன் வரலாறும், அவன் வீடுதோறும் ஐயமேற்றுக் ‘காணார் கேளார், கால்முடப் பட்டோர், பேணுநர் இல்லோர், பிணியுற்றோர்’ முதலிய பலர்க்கு உணவூட்டி வந்த திறமும், அவற்குச் சிந்தாதேவி இப்பாத்திரத்தைத் தந்ததும், அவன் அது கொண்டு உணவு தரும் நல்லறம் உவந்து செய்து வந்ததும், இந்திரன் செய்கையும், அவன் சாவகநாட்டிற்குச் செல்லுங்கால் மணிபல்லவத்தில் விடப் பட்டதும், அப்பாத்திரம் பயன் படாமையின், அவன் அதனைக் கோமுகியில் எறிந்து விட்டு உண்ணா நோன்பு கொண்டு உயிர் துறந்து சென்றுசாவக நாட்டில் ஒரு பசு வயிற்றில் பிறந்து சிறந்ததும், அவனைப் பூமிசந்திரன் என்ற அந்நாட்டு வேந்தன் தனக்கு மகனில்லா மையின் மகனாகக் கொண்டு பேணினமையும் அவன் புண்ணிய ராசனாய் அரசுரிமை யெய்தியது மெல்லாம் எடுத்துக் கூறுகின்றனர்.
பின்பு அவர், மணிமேகலையை நோக்கி, “இப்போது நாட்டில் வறன் உண்டாகி யிருக்கிறது. நீ இவ் வமுத சுரபியை வறிதே வைத்திருத்தல் முறையன்று” என்று சொல்லி விடுப்ப, அவள் பிக்குணிக் கோலங் கொண்டு திருவோடேந்தித் தெருவில் வருகிறாள். அவளைக் கண்டோர்,
“ உதய குமரன் உளங்கொண் டொளித்த
மதுமலர்க் குழலாள் வந்து தோன்றிப்
பிச்சைப் பாத்திரம் கையி லேந்தியது
திப்பியம்” (15:67-70)
என்று வருந்துகின்றனர். காய சண்டிகை யென்னும் விஞ்சை மகள் வந்து மணிமேகலையைக் கண்டு “ஆதிரை யென்னும் கற்புடை யாளின் மனையில், முதன் முதலாக ஐயமேற்றல் நன்று” என்று கூறுகின்றாள். அவ்வாதிரையின் வரலாறறியும் குறிப்பொடு மணி மேகலை காயசண்டிகையை நோக்க, அவள், ஆதிரை கணவனான சாதுவன் வரலாறும், ஆதிரையின் கற்பு மாண்பும், சாதுவன் நாகரை நல்வழிப் படுத்தியதும்,பின்பு அவள் சந்திரதத்தனென்னும் வணிகனது வங்கமேறி வந்து ஆதிரையை யடைந்து அறம் புரிய லுற்றதும் விரித்துரைத்து, “அவள்பால் பிச்சை பெறுக” என் கின்றாள். மணிமேகலை மனம் இசைந்து ஆதிரை மனையெதிரே “புனையா ஓவியம் போல” நிற்ப, அவள் அமுதசுரபி நிறைய “மாதிர மடங்கலும் பசிப் பிணியறுக” என்று உணவைப் பெய் கின்றாள்.
அதுகொண்டு மணிமேகலை பசித்தோர்க்கு உணவளிக் கின்றாள்; உணவோ எடுக்க எடுக்கக் குறையாது சுரக்கின்றது. காயசண்டிகை தன்னைப்பற்றி யிருந்த யானைத்தீ என்னும் நோய் கெடுமாறு உணவுண்டு, தன் வரலாறு முற்றும் கூறித் தொழுது விடைபெற்றுப் போகின்றவள், “உலகவறவியில் பசித்தோர் பலர் உளர்; அங்கே செல்க” என்று சொல்லி விட்டுப் போகின்றாள். மணிமேகலையும் அவ்வண்ணமே சென்று பசிப்பிணி தீர்க்கும் நல்லறத்தைச் செய்கின்றாள். இவள் செயல் இதுவாக, இதனை யறிந்த சித்திராபதி, மாதவியும் மணிமேகலையும் செய்வன நாடக மகளிர்க்கு அடுப்பன அல்ல எனச் சினங்கொண்டு, வஞ்சினம் மொழிந்து உதயகுமரனையடைந்து மணிமேகலையின் செய்தியைக் கூறு கின்றாள். அவன் பண்டு அவளைப் பளிக்கறையில் கண்டதும், தெய்வம் போந்து செங்கோன்மை காட்டி, மணிமேகலையை மறப்பாய் என்றதும் கூற, சித்திராபதி அவனைத் தன் மாய மொழியால், மயக்கி விடவும், அவன் மணிமேகலையைக் கண்டு, நற்றவம் பூண்டதற்குக் காரணம் நவில்க என்கின்றான். அவன் தனக்கு முன்பிறப்பிற் கணவனாதலின் அக்கருத்துடன் வணங்கி,
“ பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட் டிரங்கலும்
இறத்தலும் உடையது, இடும்பைக் கொள்கலம்,
மக்கள் யாக்கை இதுஎன உணர்ந்து
மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்” (18:136-139)
என்று சொல்லிச் சம்பாபதியின் கோயிலுக்குள் நுழைந்து காய சண்டிகையின் வடிவுடன் வெளிவருகின்றாள். அதுகண்டு திடுக் குற்ற உதயகுமரன், தானும் சம்பாபதிமுன் சென்று “மாயையால் மறைந்த மணி மேகலையைக் காட்டல் வேண்டும்; காட்டி யருளாயாயின், பன்னாளாயினும் பாடுகிடப்பேன்; மணிமேகலை யின்றியான் போகேன்; உன் அடி தொட்டேன்; இஃது என்குறை” யென்று வேண்டுகின்றான். அப்போது அங்கிருந்த பாவைகளுள் ஒன்று தெய்வமுற்று,
“ ஏடவிழ் தாரோய்! எங்கோ மகள்முன்
நாடாது துணிந்து நாநல் கூர்ந்தனை,” (19:3-4)
என்கின்றது. அதனால் உதயகுமரன் மனம் வருந்தி, “பின்னர்க் காண்பாம்” என்று சொல்லிக் கொண்டு போய் விடுகின்றான். பின்பு மணிமேகலை காயசண்டிகை வடிவிலேயே சிறைக் கோட்டம் சென்று ஆங்கே பசித்திருந்தோர்க்கு உணவு தருகின்றாள். சிறைக் காவலர் சென்று, அரசற்குணர்த்த, அவன் மணிமேகலையைத் தருவித்து அமுதசுரபியின் அருமை யறிந்து, “யான் செயற் பாலது யாது?” என்று கேட்கின்றான்; மணி மேகலை “சிறைக் கோட்டத்தைச் சீத்து அறவோர்க்குரிய அறக்கோட்ட மாக்குதல் வேண்டும்” என்று கூற, அவ்வாறே சிறைக்கோட்டம் அறக்கோட்ட மாக்கப்படுகிறது.
இச் செய்திகளை யெல்லாம் கேள்வியுற்ற உதயகுமரன், அவளைப் பற்றித் தன் தேர்மேற் கொணர்ந்து அவள் கூறும் வித்தையும் அறிவுடை மொழியும் கேட்க மனங்கொண்டு உலக வறவியை அடைகின்றான். அப்போது, காயசண்டி கையைக் காணாத அவள் கணவன் காஞ்சனனென்பவனும் ஆங்கு வருகின்றான். காய சண்டிகை வடிவில் இருக்கும் மணிமேகலை அவனருகே செல்லாது, உதயகுமரன் பக்கலில் நின்று, நரை மூதாட்டி யொருத்தியைக் காட்டி யாக்கையின் புன்மை கூறித் தெருட்டுகின்றாள். காஞ்சனன் பொறாது, “இவன் இவட்குக் காதலனாயினன்” எனத் தவறாக வுணர்ந்து, ஆங்கே ஓரிடத்தே மறைந்திருக்கின்றான். உதயகுமரன் இடையிருள் யாமத்தே வந்து தன் கருத்தை முற்று வித்துக் கொள்ள எண்ணி, நீங்கி, இடையிருள் யாமத்தே வருகின்றான். அவனைக் கண்டதும் காஞ்சனன் அவன் பின்னே சென்று தன் கைவாள் வீசி உதயகுமரனை வீழ்த்தி, மணிமேகலையைப் பற்றிக் கொண்டு செல்லத் துணிந்து அவள் இருக்குமிடம் போகின்றான், அக்காலை, கந்திற் பாவை காஞ்சனனுக்குக் காயசண்டிகை வான்வழியே போகுங்கால் விந்தர் கடிகையின் வயிற்றில் அடங்கிய வரலாற்றைக் கூறி, “உண்மை தெளியாது நீ செய்த தீவினை நின்னை நீங்காது வந்து பற்றும்” என்று தெருட்ட அவன் வருத்தத் துடன் செல்கின்றான்.
மணிமேகலை உறக்கம் நீங்கி, நிகழ்ந்தது கண்டு தன் உண்மை வடிவுடன் உதயகுமரனுக்காகப் புலம்ப, கந்திற்பாவை அவளைத் தடுத்து உதயகுமரன் வெட்டுண்டு வீழ்தற்கேதுவாகிய பழம்பிறப்பு வரலாற்றை யுரைத்து, எதிர்காலத்தில் இனி அவட்கு நிகழ விருப் பனவும் தெரிவிக்கின்றது. அது கேட்கும் மணிமேகலை மனமயக்கம் தீர்கின்றாள்; பொழுதும் விடிகிறது.
சக்கரவாளத்து மாதவர் மணிமேகலையால் உதய குமரற்கு உற்றது தெரிந்து அரசற்குரைப்ப, அவன் மந்திரியாகிய சோழிக ஏனாதியை நோக்கி, “உதயகுமரனை ஈமத்தேற்றிக் கணிகை மகளாகிய மணிமேகலையைக் காவல் செய்க,” என்று கட்டளை யிடுகின்றான்; மணிமேகலை சிறையிடப்படுகின்றாள்.
மணிமேகலை காரணமாகத் தன் மகன் இறந்தது கேட்டறிந்த இராசமா தேவி, அவளை வஞ்சனையால் துன்புறுத்தக் கருதி, அரசனிடம் இனிய நன்மொழி பலபேசி, மணிமேகலையைத் தன்பால் இருக்கச் செய்கின்றாள். மணி மேகலைக்கு மயக்க மருந்தளித்தும், கற்பழிக்க முயன்றும், உணவளியாது விடுத்தும் வருத்துகின்றாள்; மணிமேகலை அவையனைத்தையும் வென்று விடுகிறாள். அது கண்டு அஞ்சிய இராசமா தேவிக்கு மணி மேகலை அறம் பல கூறி, உதயகுமரன் பழம்பிறப்பு வரலாற்றைத் தெளிய உரைத்து, காமம், உயிர்க் கொலை, பொய் முதலியவற்றின் தீங்குகளைக் காட்டித் தேவியைத் தேற்றி நிற்ப, இராசமாதேவி மணி மேகலையை வணங்க, அது பொறாத மணிமேகலை அவளை வணங்குகின்றாள்.
அப்போது சித்திராபதி போந்து, இந்திரவிழா நடைபெறா தாயின் காவிரிப்பூம் பட்டினத்திற்கு உண்டாகக் கூடிய தீங்கும், மணிமேகலா தெய்வம் கூறியிருக்கும் கட்டுரையும் உரைத்து மணி மேகலையைத் தன்னோடு வரவிடுமாறு வேண்ட, இராசமாதேவி மறுக்கின்றாள். அதே சமயத்தில் மணிமேகலையை மீட்டற் பொருட்டு அறவணவடிகளும், மாதவியும், சுதமதியும், தேவியிடம் வருகின்றனர். தேவி அடிகளை வணங்க, அவர் அவட்கு நிதானம் பன்னிரண்டும் தெளியவுரைத்து, மணி மேகலையை நோக்கி, “வேற்றிடங்கட்குச் சென்று பிற அறங்களைக் கேட்டுத் திரும்பும் போது, இவ்வறங்களை விளங்க உரைப்பேன்” என்று சொல்லி விட்டுப் போகின்றார். மணி மேகலையும் வான்வழியாக ஆபுத்திரன் புண்ணியராசனாய்ப் பிறந்து ஆட்சிபுரியும் நாட்டையடைந்து, தருமசாவகன் என்னும் முனிவன் இருக்கு மிடத்தில் இருக்கின்றாள்.
அங்கே புண்ணியராசன் வந்து, முனிவனை வணங்கி அறங் கேட்டு, மணிமேகலையை நோக்கி, “இவள் யார்?” என்று வினவு கின்றான். அருகே நின்ற கஞ்சுகி யொருவன் தான் காவிரிப் பூம்பட்டினம் சென்றிருந்தபோது அறவணவடிகளால் சுட்டப் பட்ட மணிமேகலையே இவள் என்று கூற, உடனே மணிமேகலை அரசனை நோக்கி, “அரசே, உன் கையிலிருந்த அமுத சுரபியே என் கைப்புகுந்தது; நீ உன்னை மறந்தனை; உடனே மணி பல்லவத்துக்கு உன் பழம்பிறப்பை அறிய வருக” என்று சொல்லி விசும்பு வழியாக, மணிபல்லவம் சென்று தரும பீடிகையை வணங்கி நிற் கின்றாள், புண்ணியராசன் அரண்மனை யடைந்து, அமரசுந்தரி என்னும் தாயார் தன் பிறப்பு வரலாறு கூறக் கேட்டுத் தான் அரச போகத்தில் ஆழ்ந்து கிடந்தமை நினைந்து வருந்த, அமைச்சன், அரசற்குரிய அறம்பலவும் மொழிகின்றான். அரசன், “யான் மணி பல்லவம் சென்று திரும்புதற்கு ஒரு திங்கட்காலம் பிடிக்கும்; அதுகாறும் இந்நாட்டைக் காத்துவருக” என்று சொல்லி, பிற உரிமைச் சுற்றத்தையும் விட்டு மணிபல்லவம் வந்து சேர்கின்றான், அவனை மணிமேகலை யெதிர்கொண்டு சென்றுதரும பீடிகையைக் காட்ட, அவன் வணங்கித் தன் பிறப்பைத் தெரிந்து கொள்கின்றான். அங்கே தீவதிலகை போந்து புண்ணியராசனுக்குப் பழம் பிறப்பில் நிகழ்ந்த சிலவற்றைக் கூறி, மணிமேகலையைப் பார்த்துக் காவிரிப்பூம் பட்டினம் கடல் கொள்ளப்பட்டதும், அதற்குரிய காரணமும் விரியக்கூறி, மாதவியும், சுதமதியும், அறவணவடிகளும் இதனை யறிந்து வஞ்சிமாநகர்க்குச் சென்று விட்டனர் என்று சொல்லுகின்றாள். மணிமேகலை, பிரியமாட்டாது வருந்தும் புண்ணிய ராசனைத் தேற்றி, அவனைத் தன் நாட்டிற்கேகுமாறு பணித்துத் தான் மட்டில் வான்வழியாக வஞ்சி நகரை யடைந்து, கண்ணகி கோயிலுக்குச் சென்று வணங்கி நிற்கின்றாள்.
கண்ணகி, தன் கணவன் கோவலனுக்குற்ற தீங்கிற்கு ஏதுவாகிய பழம் பிறப்பு வரலாற்றைத் தான் மதுராபதியிடத்துக் கேட்டதைக் கேட்டவாறே உரைத்து இனி எதிர்காலத்தில் தனக்கு (கண்ணகிக்கு) நிகழ விருப்பனவும் சொல்லி, “இனி, நீ சென்று பல்வகைச் சமயவாதிகளைக் கண்டுஅவர்தம் அறங்களைக் கேட்பாயாக; அதற்கு நீ வேற்று வடிவம் கொள்க” என்று உரைக் கின்றாள். மணிமேகலை, தனக்கு மணி மேகலா தெய்வம் தந்த மந்திரத்தால் ஒரு மாதவன் வடிவுகொண்டு, சமயக் கணக்கர் வாழும் இடம் சென்று, அவர்களுள், பிரமாண வாதி முதல் பூதவாதி ஈறாகப் பலரையும் கண்டு அவர்தம் அறங்களைக் கேட்டுக் கொண்டு, வஞ்சி நகரின் பல அழகிய இடங்களைப் பார்த்து மகிழ்வுற்று, பௌத்தப் பள்ளி யடைந்து அங்கே தவம் பூண்டிருக்கும் கோவலன் தந்தையான மாசாத்து வானைக் காண் கின்றாள். அவனுக்குத் தனக்கு நேர்ந்தது முற்றும் உரைக்கின்றாள். அவனும், தன் வரலாறு முழுதும் கூறி, “அறவணவடிகளும், மாதவியும், சுதமதியும் கச்சிமாநகர்க்குச் சென்று விட்டனர்; அங்கே மழைவளம் இன்மையின் மக்கள் பசியால் வாடுகின்றனர்; ஆண்டுச் செல்க” என்று உரைக்கின்றான்.
மணிமேகலை, தன் உண்மை வடிவுடன் கச்சிநகரை யடைந்து அதன் நடுவண் சென்றிருக்க, அவள் வருகையைக் கஞ்சுகன் ஒருவன் அறிந்து, அரசனான இளங்கிள்ளிக்கு உரைக்கின்றான். அரசன், “கந்திற்பாவை கூறியது முற்றும் உண்மையாயிற்று” என்று மகிழ்ந்து மணிமேகலையைக் கண்டு, தன் நாடு வறங்கூர்ந்ததும், தெய்வம் தோன்றி மணிபல்ல வத்துப் போலப் பொய்கையும், பொழிலும் சமைக்குமாறு பணிக்கத் தான் அவ்வாறே செய்ததும் அவட்குக் காட்டுகின்றான். பின்பு, அங்கே, தீவதிலகைக்கும் மணிமேகலா தெய்வத்துக்கும் படிமமும், கோயிலும் நிறுவி; விழாவும், சிறப்பும், நிகழ்த்தப்படுகின்றன. மணிமேகலை பின்பு அமுத சுரபி கொண்டு பசிப்பிணியால் வருந்தும் மக்கட்குப் பேருணவு வழங்கி அவர்தம் வருத்தம் போக்குகின்றாள். அச்செய்தி நாடு முழுதும் பரவுகிறது. அறவணவடிகளும், மாதவியும், சுதமதியும், மணி மேகலையிருந்த அறச்சாலைக்கு வருகின்றனர். அவர்களை இனிது வரவேற்று நல்லுணவளித்து மணிமேகலை இன்புறுகின்றாள்.
பின்பு, அறவணவடிகள், காவிரிப்பூம்பட்டினம் கடல் கொள்ளப்பட்டதும், தாங்கள் மூவரும் கச்சி நகர்க்கு வந்ததும் கூறுகின்றார். மணிமேகலை தனக்கு நிகழ்ந்தன பலவும் கூறித் தான். சமயக் கணக்கர் பலரையும் சமயப் பொருள் கேட்டதும், அவை செம்மையாக இன்மையின் சிந்தையில் வையாமையும் சொல்லித் தனக்குப் புத்தன் சொல்லிய மெய்யறத்தை விளம்பு மாறு வேண்டு கின்றாள். அவர் புத்த சமயத்துத் தருக்க நெறியும், பிறவும் கூறுகின்றார். அதன்மேல் மணிமேகலை, “புத்தம் சரணங்கச் சாமி, தர்மம் சரணங் கச்சாமி, சங்கம் சரணங்கச்சாமி என்றவற்றை மும்முறை சொல்லி வணங்கி அடிகளை இரந்து நிற்க, அவர் அறங்குன்றிய காலத்துப் புத்தர் தோன்றி, போதியின் கண் இருந்ததும், அவர் உரைத்தருளிய பன்னிரு நிதானங்களின் தோற்றவொடுக்க நெறி களும் பிறவும் விரியக்கூறி, “நின் மனத்திருள் நீங்குக” என்று அருளுகின்றனர். மணிமேகலை ‘தவத் திறம் பூண்டு தருமம் கேட்டுப் பவத்திறம்’ அறுவேன் என நோற்கலுறுகின்றாள்.
III.நூற்புணர்ப்பு
இதுகாறும் கூறிய கதைச் சுருக்கத்தை வகுத்து நோக்கின், மணிமேகலை மலர்வனம் புகுதலும், மணி மேகலா தெய்வத் தால் பின்பு மணிபல்லவம் சென்று தன் பழம் பிறப்பும், அமுத சுரபியும் மந்திரமும், பெறுதலும், பின்னர் காவிரிப்பூம் பட்டினம் போந்து பசித்தோர்க்கு உணவளித்தலும், அவனைக் காதலித்த உதய குமரன் காஞ்சனன் என்னும் விஞ்சையனால் கொலையுண்டலும், அது காரண மாக அவள் சிறைப்படுதலும், சிறை வீடு பெறுதலும், ஆபுத்திரன் நாட்டிற்குச் சென்று அவனை மணிபல்லவம் கொணர்ந்து பழம் பிறப்பறிவித்தலும், அவனின் நீங்கி, வஞ்சிமாநகர் சென்று சமயக் கணக்கர் தம் சமயத்திறம் கேட்டலும், காஞ்சிநகர்க்கு வந்து அறவணர் பால் புத்தரோதிய அறம் கேட்டுத் தெளிந்து “பவத்திறம் அறுப்பேன்” என்று நோற்றிருத்தலும் இக்காவியத்தின் சிறப்புடைய நிகழ்ச்சிகளாம் என்பது இனிது விளங்கும்.
இவற்றை நமக்கு உரைக்கப்புகுந்த இந்நூலாசிரியர், இந்நிகழ்ச்சி களுடன் சுதமதி, தீவதிலகை, காயசண்டிகை, ஆதிரை முதலியோர் வரலாறும், சக்கர வாளக் கோட்டம், தருமபீடிகை, காவிரிப் பூம்பட்டினம் கடல் கோட்படுதல் முதலியவற்றின் வரலாறும். உதயகுமரன், ஆபுத்திரன், துவதிகள், சுகந்தன், தருமதத்தன், கோவலன் முதலியோர் வரலாறும் எனச் சுமார் பதினைந்துக்கு மேற்பட்ட வரலாறுகளை இணைத்து, விழாவறை காதை முதல் பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதை யீறாக முப்பது காதைகளாக விரித்தோதுகின்றார். பதிகம் நீங்கலாகக் காதை முப்பதும் சிறிது குறைய ஐயாயிர மடிகளில் இயன்றுள்ளன.
இக்காப்பிய நிகழ்ச்சியுடன் கிளைக் கதைகள் வந்து இயைந்து செல்லும் செலவு, தொடக்கத்தே ஒரு மலையடியில் தோன்றும் யாறொன்று இடையிடையே தோன்றி வரும் சிற்றாறுகளின் சேர்க்கையால் பெருகித் தங்குதடையின்றி யேகும் காட்சியினை நினைவில் தோற்றுவிக்கின்றது. காவிரிப்பூம் பட்டினத்தில் கால் கொள்ளும் இக்காப்பிய நிகழ்ச்சி, மணி பல்லவம், சாவகநாடு என்ற இரண்டில் நிகழும் நிகழ்ச்சி வந்து கூட வஞ்சிக்குச் சென்று, பின்பு காஞ்சியை யடைந்து கடை நிலையெய்துகின்றது. இவ்வாறு பதினைந்திற்கு மேற்பட்ட நிகழ்ச்சியோடு விரவி யொழுகிய போதும், காப்பியப் பொது நிகழ்ச்சி சிறிதும் சிக்குண்டு தெளிவு படும் திறம் பெறவே இல்லை. இவையாவும் காரண காரிய முறையிலும், எடுத்துக் காட்டு வகையிலும் வந்து இயைவதால், படிப்போர்க்குக் காப்பியநிகழ்ச் சியைப்பின் பற்றிச் செல்லுதற்குச் சிறிதும் அருமை தோன்றுவது கிடையாது. ஒரு நிகழ்ச்சியைக் கண்டபின் இதன் விளைவு என்னவோ எனப் படிப்போரைத் திகைப்பித்துத் தெளிவிக்கும் புலமைத் திறம் இக்காப்பியக் காலத்தில் இல்லை. அத்திறம் இதன்கண் அமைந்திருந்திருப்பின், இதனிற் சிறந்ததோர் இலக்கியம் வேறே இல்லையென்றே துணிந்து கூறிவிடலாம்.
இவ்வாறு இம்மணிமேகலை வரலாற்றை நம் சாத்தனார் ஆற்றொழுக்காகச் சொல்லிச் செல்வதன் நோக்கம்யாதாகும்? உலகில் மக்கள் வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு காரணம்பற்றி நிகழ்கின்றதேயன்றி வேறில்லை; அக்காரணம் முன்னைப் பிறவியினும் தோன்றும்; இப்பிறவியினும் தோன்றும். மக்கட்கு உண்டாகும் நலந்தீங்குகள் யாவும் காரணமாகிய முன்னை வினையின் பயனே; பிறப்புப் பலமாறினும் வினைப்பயன் விடாது வந்து பற்றும் என்ற ஒன்றை வற்புறுத்துதலே இவர் நோக்கமாக உடையர் என்பது தோன்றுகிறது. இவ்வகையில் இவர் நோக்கமும் இளங்கோ வடிகள் நோக்கமும் ஒன்றாதல் விளங்கும். ஏனைச் சமயக்கணக் கர்தம் சமயப் பொருள் காட்டி புத்த சமயத்தின் கருப் பொருளை உணர்த்தல் வேண்டும் என்பது இரண்டாவதேயாகும்.
இனி, இக்காப்பியத்தை உரைக்கப்புகுந்த இவர், மணி மேகலையை மலர்வனத்துக்குக் கொணரக் கருதி, விழாவறை காதையால் இந்திர விழா நிகழ்ச்சி யைப் புலப்படுத்தி, ஊர் அலர் உரைத்த காதையால் மாதவியும், மணிமேகலையும், தவவொழுக் கினரானது உணர்த்தி அதுவாயிலாக மணிமேகலையை மலர்வனம் புகுவிக்கின்றார். அப்பொழுது மணிமேகலை தனித்துச் செல்லுதல் கூடாது என்பதை வற்புறுத்து முகத்தால் தனித்து வந்து கெட்ட தன் வரலாற்றைத் தோழியாகிய சுதமதியைச் சொல்லுவிக்கின்றார்.
இனி, மணிமேகலையை மணிபல்லவத்துக்குக் கொண்டு போகக் கருதிய சாத்தனார், உதயகுமரனுக்கு மணிமேகலைபால் உள்ள காதலைத் தோற்றுவித்து, அவனை அவ்வனத்திற்கு வருவிக் கின்றார். அவனது ஆண்மையை, காலவேகத்தை, அடக்கினா னென்பதாலும், மணிமேகலைக்கும் அவன்பால் காதலுண்மையை அவன் தேரொலி கேட்டு அவள் சுதமதிக்கு உரைக்கும் உரையாலும் தெரிவித்து;அவனின் நீக்குவது காரணமாக மணிமேகலா தெய்வத்தை வருவித்து, மணிமே கலையை மணிபல்லவத்துக்குக் கொண்டு போகின்றார். மணிபல்லவத்தில் மணிமேகலையின் பழம்பிறப்பு வரலாறும், தரும பீடிகை வரலாறும், அமுதசுரபி வரலாறும், தீவதிலகை வரலாறும் வந்து சேர்கின்றன. இங்கே மணிமேகலா தெய்வத்தால் கொடுக்கப்
பெறும் மந்திரம், பின்பு அவள் உலகவறவியில் உதயகுமரன் கைப்படாது தப்பற்குக் காயசண்டிகை வடிவு கோடற்கும்; அரசன் தேவி கற்பழிக்க முயன்றபோது ஆணுருக்கோடற்கும்; சமயக் கணக்கர்பால் சமயப்பொருள் கேட்டதற்குத் தவத்தோன் வடிவு கோடற்கும்; அரசன் தேவி உணவு கொடாது துன்புறுத்த நினைத்த
போது, உணவு துறந்திருத்தற்கும்; வான்வழியாக மணிபல்லவத் திலிருந்து காவிரிப்பூம்பட்டினம், ஆங்கிருந்து சாவக நாடு. வஞ்சி, காஞ்சி முதலிய இடங்கட்கும் சேறற்கும் பயன் படுகிறது. காயசண்டி கையின் வரலாறு உதயகுமரனைக் கொல்லுதற்கும், அதுவே வாயிலாக மணிமேகலையைச் சிறைப்படுத்தற்கும் உதவுகிறது. ஆதிரையின் வரலாறு அமுதசுரபியில் பெய்த சோறு கொடுக்கக் குறைபடா வளம் பெறுதற்கு ஓராற்றால் மதிப்புத் தருகிறது. ஆபுத்திரன் வரலாறு அமுதசுரபியோடு இணைந்து நல்வினையின் மாண்பை எடுத்துக் காட்டுகிறது.
இவ்வாறே சக்கரவாளக் கோட்டம் கந்திற்பாவை யென்ற வற்றின் வரலாறுகளும், இந்திரவிழா வரலாறும், அதனைக் காவிரிப் பூம்பட்டினத்தார் மறத்தற்கு ஏதுவாகும் வரலாறுகளும், கற்புடை மகளிரைக் காமுறுவார் எய்தும் கேட்டிற்கு வேண்டும் எடுத்துக் காட்டுக்களும் பிறவும் முன்னே கூறியவாறு இக்காப்பிய நிகழ்ச்சியில் ஆங்காங்கு வந்து சேர்கின்றன. அவற்றை ஈண்டு விரிப்பதால் பயனில்லை. எங்குச் செல்லினும் மாதவியுடன் சுதமதி பிரியாது வருதற்குக் காரணம் கூறுவார், மணிமேகலையின் பழம் பிறப்பில் உடன் பிறந்தவளாயிருந்த வரலாறும்; மணிமேகலைக்கு உதய குமரன் பாலும், அவனுக்கு மணி மேகலைபாலும் காதலுண் டாயதற்குக் காரணமாக, அவன் முன்னைப் பிறப்பில் இராகுலன் என்ற பெயருடன் கணவனாயிருந்தான் என்ற வரலாறும்; அவன் கொலையுண்ட தற்குக் காரணம், அப்பிறப்பில் அவன் தன் மடையனைக் கொன்ற வரலாறும் பிறவும் காட்டப்படுகின்றன. மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்குத் துணை செய்தற்கு உரிய காரணமும், கோவலன் மதுரையில் கொலையுண்டதற்குற்ற காரணமும் ஈங்கும் கூறப்படுகின்றன.
இவ்வாறு நிகழும் நிகழ்ச்சி யொவ்வொன்றிற்கும் முன்னைப் பிறவியிற்செய்த வினையைக் காட்டுமிடத்து, காஞ்சனன் உதய குமரனைக் கொலை செய்தற்கும், கண்ணகி மதுரையை எரித்தற்கும் காரணம் அவரவர் வரலாறே காட்டுதலால், இத்தீவினைப் பயனை மறுபிறவியில் நுகரக்கடவர் என்றும் கூறி விடுகின்றார். உயிர்கள் தம் வினைப்பயன் நுகர்தற்குப் பிறந்தும், இறந்தும், மீட்டும் பிறந்தும் வரும் என்பதை நேரிற் கண்டு காட்டுதற்குச் சான்றாக அற வணவடிகள் வந்து சேர்கின்றார்.
IV. நூலிற்கண்ட சிலருடைய குணஞ்செயல்கள்.
இக்காப்பியத்தின்கண் வரும் ஆண்களும் பெண்களும் மிகப் பலராதலின், அவருள், மணிமேகலையின் வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடையோரை மட்டில் எடுத்துக் கொள்வாம். ஆடவரில், மாவண்கிள்ளி, உதயகுமரன், ஆபுத்திரன், அறவணவடிகள், காஞ்சனன் என்போரும், பெண்மக்களில், மணிமேகலை, மாதவி, சுதமதி, காயசண்டிகை, இராசமாதேவி, சித்திராபதி என்போரு மாவர்.
1. மாவண்கிள்ளி: உதயகுமரனுக்குத் தந்தையாகிய இவ்வேந்தன் பெயர் மாவண்கிள்ளி யென்றே கூறப்படுகிறது. ஒரு காலத்தே இவனைப் பகைத் தெதிர்த்தசேர பாண்டியர்களைக் காரியாறு என்னும் யாற்றின் கரையில் தன் பின் பிறந்தோனால் வென்று வாகை சூடினான். (மணி. 19:119-127) இவன் மனைவியின் பெயர் சீர்த்தி யென்பது. இவன் அரசுமுறை கோடாச் செங்கோன்மையும், மானமும் உடையன். இவன் ஓரு நாள் தன் தேவியுடன் பூங்காவில் இனிதிருக்கையில் மணிமேகலை காயசண்டிகை வடிவுடன் சிறைக் கோட்டம் புகுந்து உணவளிப் பதனைக் காவலர் போந்து கூறக் கேட்டு, அவளை உடனே தன் முன் வருவித்து, வினவ, அவள் அமுத சுரபியின் சிறப்பைக் கூறினாளாக, அதனைக் கேட்டதும், அவள் செயலை வியந்து பாராட்டி, “யான் செயற்பாலது என்?” என்று வினவுகின்றான். பின்பு அவள் விரும்பியவாறே சிறைக் கோட்டத்தை மாற்றி அறவோர்க்கு உரிய கோட்ட மாக்குகின்றான். உதயகுமரன் காஞ்சனனால் கொல்லப் பட்டதைக் கூற வந்த சான்றோர், அதனைக் கூறாது, பத்தினிப் பெண்டிரையும் தவ மகளிரையும் காமுற்றுக் கெட்ட வேந்தர் சிலர் வரலாறுகளைக் கூற, இவ்வேந்தன் அவர்தம் குறிப்பறிந்து,
“ இன்றே யல்ல என்றெடுத் துரைத்து,
நன்றறி மாதவிர்! நலம்பல காட்டினிர்;
இன்றும் உளதோ இவ்வினை? (22:163-65)
உரையும்” என்று வினவுகின்றான். அவர்கள் உதய குமரன் கொலை யுண்டது கூறுகின்றனர். மகன் தவறு செய்ததனால் அவன் பொருட்டு வருந்தாது, மந்திரியை நோக்கி,
“ யான்செயற் பாலது இளங்கோன் தன்னை
தான் செய்ததனால் தகவிலன் விஞ்சையன்” (22: 206-207)
எனக் காஞ்சனன் செய்கையை வெறுத்துரைப்பதும்,
“ மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல் இன்றுஎனில் இன்றால்;” (22: 208-209)
என அரசு முறையின் அமைதி கூறலும்,
“ மகனை முறைசெய்த மன்னவன் வழிஓர்
துயர்வினை யாளன் தோன்றினன் என்பது
வேந்தர் தம்செவி யுறுவதன் முன்னம்
ஈங்குஇவன் தன்னையும் ஈமத் தேற்றிக்
கணிகை மகளையும் காவல் செய்க” (22: 210-14)
என்பதனால் அவனுடைய மானவுணர்வும், மணிமேகலையைச் சிறை செய்யும் ஆட்சி நலனும் இனிது புலனாகின்றன.
மணிமேகலை சிறையில் இருக்கும்போது அவளைத் தன்பால் கொண்டுவைத்துத் தீங்கிழைக்க எண்ணி வந்து அரசனை வேண்டிய அவட்கு அச்சோழர் பெருமான் அவளது உட்கருத்தை யுணராது. மகன்பால் குற்ற முண்மையும் மணிமேகலைபால் அஃது இன்மையும் தேர்ந்து அரசி அம் மணிமேகலையின் சிறப்புணர்ந்து அவளைத் தன்னோடு உடனிருக்க விரும்புகின்றாள் என்று வியந்து.
“ சிறப்பின் பாலார் மக்கள்; அல்லார்
மறப்பின் பாலார் மன்னர்க்கு என்பது
அறிந்தனை யாயின்இவ் வாயிழை தன்னைச்
செறிந்த சிறைநோய் தீர்க்க” (23: 31-34)
என்று சொல்லுகின்றான். இதனால் இவனுடைய உள்ளம் மிக்க நேர்மையுடைய தென்பது நன்கு விளக்க மெய்துகிறது.
2. உதயகுமரன்: இவன் மாவண் கிள்ளிக்கு மகன்; மிக்க ஆண்மையும், மனவன்மையு முடையவன். காவிரிப்பூம் பட்டினத்தில் விழா நிகழும் போது கால வேக மென்னும் பட்டத்தியானை மதம்பட்டுத்திரிய, அதனை இவனொருவனே அடக்கி யொடுக்கு கின்றான் (4: 44-46). மணிமேகலைபால் இவனுக்குப் பெருங் காதலுண்டு. எட்டி குமரன் ஒருவனால் அவள் மலர்வனம் சென்றிருப்பது தெரிந்து வருபவன், உவவனத்தே சுதமதியைக் கண்டு மணிமேகலை இளமை நலம் கனிந்திருக்கும் திறத்தை வெளிப்பட மொழிந்து,
“ மாதவர் உறைவிடம் ஓரீஇ மணிமேகலை
தானே தமியள்இங்கு எய்தியது உரை” (4: 103-104)
என்று வினவ, அவள் செவ்வன் இறைமொழியாது யாக்கையின் இயல்கூற அமைதியுடன் கேட்கின்றான். பளிக்கறையில் மணி மேகலையின் உருவம் தெரியக் கண்டதும் காமத்தீ யெழுந்து அவன் உள்ளத்தைக் கடாவ, பளிக்கறையின் உள்புகக் கருதி வாயில் தேடிக் காண்கின்றான். மாட்டாமையின், சுதமதியை நோக்க, அவள் மணிமேகலை தவவொழுக்கினாள்; சாபம் தரும் வன்மையள் என்று அச்சுறுப்ப, அதனால் ஒருவாறு மனம் நீங்கிச் செல்வோன்,
“ சிறையு முண்டோ செழும்புனல் மிக்குழீஇ?
நிறையு முண்டோ காமம் காழ்க்கொளின்?
செவ்விய ளாயின்என் செவ்விய ளாக” (5: 19-21)
என்று சொல்லிச் செல்கின்றான். செல்கின்றவன் மணிமேக லையை வவ்விய நெஞ்சினனாய்ச் செல்கின்றான். தவவொழுக்கம் பூண்டா ளாயினும், காமச் செவ்வி முதிர்ந்த வழித் தன் செவ்வியளாவள் என்று நினைத்தலின், அவனை ஆசிரியரும், “வவ்விய நெஞ்ச மொடு அகல்வோன்” (5:22) என்கின்றார். பின்பு அவன் சுதமதியின் வரலாறு கேட்பது தோழியிற் கூட்டம்பெற முயல்வோன் கூற்றாக இருத்தலும் நோக்கற் பாலது. அற்றாக, இதன் அரும்பதவுரை காரர், “அவ்விய நெஞ்சமோடு அகல்வோன்” என்று கொண்டு, “ஒளவியம் - பிறர்க்கு இவள் உரியளாதல் கூடுமோ என்பதால் உளதாகிய பொறாமை” என்று கூறுகின்றார். அவன் அவ்வாறு நினைத்தற்கு வேண்டும் ஏது ஒன்றும் அவள் அவன்பால் நடந்து கொண்டதிலோ, அவன் கூறுவனவற்றிலோ இல்லாமையால், அவ்வரும்பதக் குறிப்புப் பொருந்தாமை யுணரப்படும்.
சுதமதியின் வரலாறு கேட்டதும், அவளால் மணி மேகலை யைப் பெற முடியாதென்று அவன் உணர்ந்தமை தோன்ற,
“ வஞ்சி நுண்ணிடை மணிமே கலைதனைச்
சித்திரா பதியால் சேர்தலும் உண்டு” (5: 81-82)
என்று செப்பிவிட்டுச் செல்கின்றான். இதனாலும் அவன் எப்போதும் அவ்விய நெஞ்சத்தனாகாமை தெளியப்படும்.
உதயகுமரன் மணிமேகலையை வவ்விய நெஞ்சினனாதலை உணர்ந்த மணிமேகலா தெய்வம் அவன்முன் தோன்றி, செங்கோன் மையின் சிறப்புணர்த்தி,
“ தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த
அவத்திறம் ஒழிக” (7: 13-4)
என்று உரைக்கவும், அவன் அஃது ஒழியாது, இருத்தலையும், மணிமேகலை ஓடேந்திப் பிச்சையேற்று இல்லோர்க்கு உதவு தலையும் அறிந்த சித்திராபதி அவனிடம் போந்து அவன் மயங்கத் தகுவன கூறியபோது, அவன்தான் அவளைப்பளிக் கறையில் கண்டு பாவையென்று ஒருவாறு எண்ணிவரத் தெய்வம் தோன்றி, அவள் பால் கொண்ட நினைவை யொழிக என்றதைச் சொல்லி.
“ தெய்வங் கொல்லோ திப்பியங் கொல்லோ
எய்யா மையலேன் யான்” (18:84-85)
என்று கூறுகின்றான்; அவன் “எய்யா மையலை”ச் சித்திராபதி தன்மதி நுட்பத்தால் மாற்றிவிடலும், அவன் “இடங்கழி காம மொடு அடங்கானாகி,” மணி மேகலையைக் கண்டு,
“ உடம்போடு என்தன் உள்ளகம் புகுந்துஎன்
நெஞ்சம் கவர்ந்த வஞ்சக் கள்வி!
நோற்றூண் வாழ்க்கையின் நொசிதவம் தாங்கி
ஏற்றூண் விரும்பிய காரணம் என்? எனத்” (18: 120-123)
தானே தனித்து நிற்கும்போது அவளைக் கேட்க வேண்டு மென்று நினைத்துச் சென்றவன், அவளை அவ்வாறே கண்டவிடத்துத் தான் நினைத்தபடியே வினவாது,
“ நல்லாய்! என்கொல் நற்றவம் புரிந்தது?
சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப” (18: 126-127)
அவனது மனத்தடுமாற்றம் அறிந்து, மணிமேகலை “கேள்வி யாளரில் தோட்ட செவியை நீ யாகுவையெனில்” என்று தொடங்கிச் சில கூறுகின்றாள். அது நிற்க, இவன், அவளை நேரிற் கண்டதும், அவளது தவநிலையும், தெய்வம் கூறியதும், சுதமதி சொல்லும் நெஞ்சை அலைப்ப, அலைப்புண்டு, “கேட்கலாமோ, ஆகாதோ,” என்று, தனக்குள் தடுமாறிப் பின்பு சிறிது தேறி நயமாகக் கேட்டல் நன்று என்று துணிந்து, “நல்லாய், என்கொல் நற்றவம் புரிந்தது? சொல்லாய்” என்று துணிந்து கேட்கின்றான். இதனால், மணி மேகலையின் வனப்புக் கண்டுடைந்த மனவலி, சுதமதியும், தெய்வமும் கூறியவற்றால் கலங்கியதாயினும் சித்திராபதியின் சொல்லால் ஒருவாறு திண்ணிதாகியும் மீட்டும் அம்மணி மேகலையின் தவ வுருவால் கெட்டழிதலைக் காண்கின்றோம்.
மணிமேகலை காயசண்டிகை வடிவில் தோன்றலும், “மணி மேகலை மறைந்து சம்பாபதியின் கோயிலில் உள்ள சுதைப் பாவைகளுள் ஒன்றாயினாள் போலும்; இவளைச் சம்பாபதியால் பெறலாம்” என எண்ணி, அத்தெய்வத்தின் முன்நின்று, தன் வேட்கை நன்கு புலப்பட,
“ மாயையின் ஒளித்த மணிமே கலைதனை
ஈங்குஇம் மண்ணீட்டு யாரென உணர்கேன்;
ஆங்கவள் இவள்என்று அருளா யாயிடின்
பன்னா ளாயினும் பாடு கிடப்பேன்
…………………………………………………….
முதியா ளுன்றன் கோட்டம் புகுந்த
மதிவாண் முகத்து மணிமே கலைதனை
ஒழியப் போகேன்; உன்னடி தொட்டேன்
இது குறை” (18: 155 -172)
என்றுகூற, இவன்பால் மனத்தெளிவின்மை கண்ட அத் தெய்வம், ஒன்றும் கூறாதொழியப் பாவையொன்று, “எம் சம்பாபதிமுன் தகாதன மொழிந்து நல்கூர்ந்தனை” என்கின்றது.
இவற்றை யெல்லாம் கேட்டுப் பெரும் கலக்கமுற்றுச் செல்லும் உதயகுமரன் தனக்குள்ளே,
“ அங்கவள் தன்திறம் அயர்ப்பாய் என்றே
செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம்;
பையர வல்குல் பலர்பசி களையக்
கையி லேந்திய பாத்திரம் திப்பியம்;
முத்தை முதல்வி அடிபிழைத் தாய்எனச்
சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம்” (19: 9-14)
என்று நினைத்து, “இதனைப் பின்னும் காண்பாம்,” என்று செல் கின்றான். இவற்றால் எல்லாம் மனமாற்ற முறாது மணிமேகலை பாற் கொண்ட காமத்தால் மனவலி யுடையனாய்ச் செல்லும் இவனது செலவு குறிக்கத் தக்கது; இவன் கற்ற கல்வி இப்போது துணை செய்கின்றதில்லை; “காதல் மிக்குழிக் கற்றவும் கைகொடா, ஆதல் கண்ணகத் தஞ்சனம் போலுமால்” எனத் திருத்தக்க தேவர் கூறுவது உண்மையாதல் காண்க.
மணிமேகலை வேண்டுகோட் கிசைந்து, சோழ வேந்தனான மாவண்கிள்ளி சிறைக்கோட்டத்தை அறக்கோட்ட மாக்கியது கேள்வியுறுகின்றான் உதயகுமரன்; அவனுக்கு அவள்பால் எழுந்த காமவேட்கை அளவு கடந்து மிகுகிறது. அறிவு, ஆண்மை, நேர்மை நாணுடைமை, மானம் முதலிய நற்பண்பு பலவும் கெட்டழி கின்றன. அவளது முயக்கின்பம் கிடைக்கா விடினும், அவளுரைக்கும் விச்சையும், முதுக்குறை முதுமொழியு மேனும் கேட்டுத் தன் வேட்கையைத் தணிக்கக் கருதுகின்றான்.
“ ……………………………. தோட்டார் குழலியை
மதியோ ரெள்ளினும் மன்னவன் காயினும்
பொதியில் நீங்கிய பொழுதிற் சென்று,
பற்றினன் கொண்டுஎன் பொற்றே ரேற்றிக்
கற்றறி விச்சையும் கேட்டு, அவ ளுரைக்கும்
முதுக்குறை முதுமொழி கேட்குவன்” (20: 13-18)
என்று அவன் மனம்கொண்டு செல்கின்றான். உலக வறவியில் இவன் வரவு கண்ட மணிமேகலை இவன்பால் வந்து, இவன் காதற் குறிப்புணர்ந்து, அதனை மாற்ற நினைத்து, தகுவன பல கூறுகின்றாள். அக்கூற்றால், “மணிமேகலையே காயசண்டிகை வடிவில் இருக்கின்றாள்; மாயவிஞ்சையால் என்மனம் மயக்குறுக்கின்றாள்; இவளை இடையிருள் யாமத்துப்போந்து கொண்டேகல் வேண்டும்” என்று துணிந்து மீள்கின்றான். பின்பு இடையிருள் யாமத்தே போந்து விஞ்சையனால் கொல்லப்படுகின்றான்.
3. ஆபுத்திரன்: இவன் வரலாறு ஆபுத்திரன், புண்ணிய
ராசன் என்ற இருகூறாய் அடங்கும்: இதனைப் பாத்திரம் பெற்ற காதையில் தோற்றுவாய் செய்து ஆபுத்திரன் திறமறிவித்த காதையில் அவன் பிறப்பும், வளர்ப்பும், அறம் செய்தலும் கூறி, பாத்திர மரபு கூறிய காதையில் அவன் சிந்தா தேவியால் அமுதசுரபி பெற்றதும், இந்திரன் சூழ்ச்சியால் அறஞ்செய்தற் கிடன் இன்றிச் சாவகநாடு செல்லுதலும், வழியில் மணிபல்ல வத்தே இறத்தலும் சாவக நாட்டில் அவன் பிறத்தலும் உரைத்து; பாத்திரங் கொண்டு பிச்சைபுக்க காதையில், அந்நாட்டு வேந்தனான பூமிச்சந்திரன் என்பானால் வளாக்கப்பெற்றுப் புண்ணியராசனாய் அரசனாதலும், ஆபுத்திரன் நாடடைந்த காதையில் மணிமேகலை அவன் அரசாளும் சாவகநாடு செல்லுதலும்; ஆபுத்திரனோடு மணி பல்லவம் அடைந்த காதையில் மணிமேகலை அவனை மணி பல்லவத்திற்கு வருவித்துப் பழம் பிறப்புணர் வித்துப் பின்பு அவன் நாட்டிற்குச் செல்லு வித்தலும் கூறப்படுகின்றன. இவற்றால், இம் மணிமேகலைக் காப்பியப் பகுதிகள் பதிகம் ஒழிந்த முப்பதனுள் ஆறு காதைகளில் இவ்வாபுத்திரன் வரலாறு கூறுவனவாதல் உணரப்படும்.
ஆபுத்திரன் இளம்பூதி யென்னும் அந்தணனுக்கு வளர்ப்பு மகனாய் வளர்ந்து நன்னூல் பலவும் கற்று விளங்குங் கால், மறை யோர் வேள்வியில் கொலை செய்தற்பொருட்டுக் கொணர்ந் திருந்த பசுவைக் கண்டு மனமிரங்கி அதனை இரவிற் கொண்டு போகையில் அந்தணர் வந்து அவனைப் பற்றிப் பலவாறு வைது ஏசியபோது. “நோவன செய்யன் மின் நொடிவன கேண்மின்” (13: 50) என்று கூறி, பசு மக்கட்குப் பயன் படுந் திறத்தை எடுத்தியம்புவது, அவனுடைய அருள் நிரம்பிய உள்ளத்தின் அழகையும் அறிவின் ஒட்பத்தையும் புலப்படுத்துகிறது.
பின்பு அவ்வந்தணர்கள் அவனை “ஆமகனாதற்கு ஒத்தனை” என்று இகழ்ந்துகூற, அவன், “உங்கள் முனிவர் கூட்டத்தே அசலன், சிருங்கி, விரிஞ்சி, கேசகம்பளன் என்பவர் முறையே பசு, மான், புலி, நரி என்ற இவற்றிற்குப் பிறந்த வரல்லரோ?” என்று அவர் களைத் தெருட்டலும், அவர்கள் தெருளாது, இவனைக் “காப்புக் கடை கழிந்து கணவனை யிழந்து” கெட்ட சாலி யென்னும் பார்ப்பனி மகன் என்று இகழ்கின்றனர். அவர்களை நோக்கி, ஆபுத்திரன் நகைத்து, பிறப்பால் உயர்வு தாழ்வில்லை யென்பதை விளக்கு முகத்தால்,
“ மாமறை மாக்கள் வருகுலம் கேண்மோ;
…………………………………….
கடவுட் கணிகை காதலஞ் சிறுவர்;
அருமறை முதல்வர் அந்தணர் இருவரும்;
புரிநூல் மார்பீர்! பொய்யுரை யாமோ?
சாலிக் குண்டோ தவறு?” (13: 93-98)
என்று சொல்லுகின்றான்.
இவன் மதுரைக்குச் சென்று, தெருக்கள் தோறும் ஐயமேற்றுக். காணார், கேளார் முதலிய பலர்க்கும் உணவூட்டும் அறம் செய்தலும், அவ்வூரிலுள்ள சிந்தாதேவி கோயிலில் தங்கியிருத் தலும் இவனுடைய நற்பண்புகளாகும். நெடுந்தொலை நடந்து, இளைத்தும், பசித்தும்; ஒருநாள் நள்ளிரவில் வந்து நின்றோரைக் கண்டு இவன் வருந்தவும், சிந்தாதேவி தந்த அமுதசுரபி பெற்று இவன் அவர்கட்கு உணவூட்டி மகிழ்தலும் சிந்தாதேவியைப் பரவுதலும் அறிவுக்கு இன்பந் தருவனவாகும்.
இவனுடைய அறச்செயற்கு மகிழ்ந்து போந்த இந்திரன் இவனைக் கண்டு, தான் இந்திரனென்றும் ‘வேண்டும் வரம் கேள்’ என்றும் உரைக்கும்போது, இவன் அவனைக் கண்டு நகைத்து,
“ அறஞ்செய் மாக்கள் புறங்காத் தோம்புநர்,
நற்றவம் செய்வோர், பற்றற முயல்வோர்,
யாவரு மில்லாத் தேவர் நன்னாட்டுக்கு
இறைவனாகிய பெருவிறல் வேந்தே” (14: 40-43)
என்பதும், “எனக்கு இவ்வமுதசுரபியென்னும் ஓடே அமையும்” என்பான்,
“ வருந்தி வந்தோர் அரும்பசி களைந்து அவர்
திருந்துமுகம் காட்டும் தெய்வக் கடிஞை” (14: 44-45)
என்பதும் பிறவும் இவனது பற்றற்ற உள்ளத்துறவை நன்கு புலப்படுக் கின்றன.
சாவகநாடு வறுமையுற்றது கேள்வியுற்று, அங்கே வங்கமேறிச் செல்லும் ஆபுத்திரன், வங்கமாக்களுடன் மணிபல்ல வத்தில் இறங்கி யிருக்கையில்; அவர்கள் இவனை அங்கேயே தனிப்ப விட்டுச் சென்றுவிடுகின்றனர். இவனோ சாவகநாட்டில் உண்ண உணவின்றிப் பசிப்பிணியால் வருந்தும் உயிர்கட்கு உணவளித்து உவப்பிக்கும் நல்லறத்தைச் செய்தற்குத் தான் இயலாதிருப்பது தெளிந்து மனம் வருந்தி, மணிபல்லவத் தீவில் மக்கள் ஒருவரும் இல்லாமையால்,
“ மன்னுயி ரோம்பும்இம் மாபெரும் பாத்திரம்
என்உயி ரோம்புதல் யானோ பொறேஎன்
……………………………………………..
சுமந்து என்? பாத்திரம்” (14: 87 -90)
என்று வருந்தி உண்ணா நோன்பிருந்து உயிர்விடுதலும், உயிர் விடுங்கால் அப்பாத்திரத்தைக் கோமுகிப் பொய்கையில் எறிபவன்,
“ அருளறம் பூண்டு ஆங்கு ஆருயி ரோம்புநர்
உளர்எனில் அவர்கைப் புகுவாய்” (14: 93-94)
என்று உரைத்தலும் அவனது தனக்கென வாழாத் தகைமை யினைக் காட்டுகின்றன.
ஆபுத்திரன் பின்பு சாவகநாட்டில் பசுவயிற்றிற் பிறந்து பூமிசந்திரனால் வளர்க்கப்பெற்றும் புண்ணிய ராசனாய் அரசாளும் திறத்தை நம் சாத்தனார் சில சொற்களால் விளக்கி விடுகின்றார். அது,
“ நாக புரம்இது; நன்னக ராள்வோன்
பூமிசந் திரன்மகன் புண்ணிய ராசன்;
ஈங்கிவன் பிறந்த அந்நாள் தொட்டும்
ஓங்குயர் வானத்துப் பெயல்பிழைப் பறியாது;
மண்ணும் மரனும் வளம்பல தரூஉம்;
உண்ணின்று உருக்கும் நோய் உயிர்க்குஇல்” (24: 169 - 174)
என வருவது.
புண்ணியராசனாகிய ஆபுத்திரனை, ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் முதற்கண், தருமசாவகன் என்னும் முனிவன் தவப் பள்ளியில்,
“ அறனும் மறனும் அநித்தமும் நித்தத்
திறனும் துக்கமும் செல்லுயிர்ப் புக்கிலும்
சார்பிற் றோற்றமும் சார்பறுத் துய்தியும்
ஆரியன் அமைதியும்” (25: 3-6)
அமைவுறக் கேட்டு மகிழும் நிலையில் நமக்குக் காட்டுகின்றார். அங்கே மணிமேகலை பெண்ணிணையில்லாப் பெருவனப்பும், காமனோடு இயங்காக் கண்ணிணை இயக்கமும் கொண்டு நிற்கின்றாள். அப்போது அவன்,
“ அங்கையிற் பாத்திரம் கொண்டு அறங்கேட்கும்
இங்கு இணையில்லாள் இவள்யார்?” (25: 9-10)
என்று முனிவனை வினவுவது இவனுடைய மனத்தூய்மையையும் நல்லொழுக்கமும் நன்கு விளங்கத் தெரிவிக்கின்றது.
அங்கே நின்ற கஞ்சுகன் ஒருவன், மணிமேகலையைப் பற்றித் தான் அறிந்தது கூறுவான்.
“ கள்ளவிழ் தாரோய் கலத்தொடும் போகிக்
காவிரிப் படப்பை நன்னகர் புக்கேன்,
மாதவன் அறவணன் இவள்பிறப் புணர்ந்து ஆங்கு
ஓதினன் என்றுயான் அன்றே உரைத்தேன்” (25:15-18)
என்கின்றமையின், அறவண அடிகளை ஆபுத்திரன் புண்ணிய ராசனாகிய பின்பு அறிந்திருத்தல் பெறப்படுகின்றது.
பின்பு, மணிமேகலை அவனுக்கு அவன் பழம் பிறப்புச் செய்தியைக் குறிப்பித்து மணிபல்லவம் வருக என்று சொல்லி விட்டு வான் வழியாகச் சென்றது கண்டும், புண்ணிய ராசனாகிய தான் ஆன் வயிற்றிற் பிறந்தது அமரசுந்தரியால் அறிந்தும் ஆபுத்திரன் மனம் மாறு பட்டு, அரசபோகமும் காமக் களியாட்டும்.
“ தூவறத் துறத்தல் நன்றெனச் சாற்றித்
தெளிந்த நாதன்என் செவிமுதல் இட்டவித்து
ஏத மின்றாய் இன்று விளைந்தது
மணிமே கலைதான் காரணமாக” (25: 92-95)
என்று மொழிகின்றான்; சனமித்திரன் என்னும் மந்திரி, துறத்தல் நன்றன்று என்றற்கு அவன் தோன்றுதற்கு முன் இருந்த நாட்டின் நிலைமை கூறி, அதன்பின்,
“ நீயொழி காலை நின்நா டெல்லாம்
தாயொழி குழவி போலக் கூஉம்;
துயர்நிலை யுலகம் காத்த லின்றிநீ
உயர்நிலை யுலகம் வேட்டனை யாயின்
இறுதி யுயிர்கள் எய்தவும், இறைவ!
பெறுதி விரும்பினை யாகுவை யன்றே;
தன்னுயிர்க் கிரங்கான் பிறவுயிர் ஓம்பும்
மன்னுயிர்முதல்வன் அறமும் ஈதன்றால்,
மதிமாறு ஓர்ந்தனை, மன்னவ!” (25: 110-118)
என்கின்றானாக அது கேட்கும் ஆபுத்திரன், அவற்கு இசைந்து, “ஒரு திங்கட் காலத்தே திரும்ப வந்து சேர்வேன்; அதுகாறும் நாடாட்சி காத்தல் நினக்குக் கடன்,” என்பவன், “மணிபல்லவம் வலம் கொள்வதற்கெழுந்த, தணியாவேட்கை தணித்தற் கரிதால்” (25:120-1) என உள்ளத்தின் நினைவை ஒளியாது உரைக்கின்றான்.
மணிபல்லவத்தில் ஆபுத்திரன் தன் பழம் பிறப்பும், தன் பொருட்டு, வங்கமாக்கள் திரும்பப் போந்து உயிர்விட்டதும் பிறவும் அறிந்து வருந்த, மணிமேகலை அவனைத் தேற்றி, “மன்னு யிர்க்கு உண்டியும் உடையும் உறையுளும் வழங்குவதே நல்லறம்” என்று தெளிவிக்கின்றாள். அவட்கு அவன்,
“ என்நாட் டாயினும் பிறர்நாட் டாயினும்
நன்னுதல் உரைத்த நல்லறம் செய்கேன்;
என்பிறப் புணர்த்தி என்னைநீ படைத்தனை;
நின்திறம் நீங்க லாற்றேன் யான்” (25: 234-235)
என்று தன் நன்றியறிவும் பிரிவருமையும் புலப்படுத்துத் தன் பெருந்தகைமையை நம் நெஞ்சத்தே நிறுவுகின்றான்.
4. அறவணவடிகள்: இவரை அறவணன் என்றும் அறவணர் என்றும் வழங்குதலின் இவர் இயற்பெயர் அறவணன் என்றே தெரிகிறது. இவர் மணிமேகலை, மாதவி, சுதமதி, உதயகுமரன் முதலியோரின் முற்பிறவிக்காலத்தே இருந்து வாழ்ந்துவரும் பெரு முதியோராக இருக்கின்றார். மணிமேகலை அறிவறியும் காலத்து இவர் முதியோராய் இருப்பதனை,
“ நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின்
உரை மூதாளன்” (12: 3-4)
என்று இந்நூலாசிரியர் கூறுதல் காண்க. மணிமேகலையைச் சிறைவீடு செய்தற்கு இவர் இரசாமாதேவிபால் வந்தபோது, அவளும் இவரது முதுமை கண்டு,
“ நாத்தொலை வில்லை யாயினும் தளர்ந்து
மூத்ததிவ் யாக்கை வாழ்கபல் லாண்டு” (24: 99-100)
என்று கூறுதல் காண்க.
கோவலன் மதுரையில் கொலையுண்டது கேட்டு வருந்திய மாதவிக்கு இவரே வாய்மை நான்கும் சீலமைந்தும் உரைத்துத் தவநெறிப் படுத்துகின்றார் (2: 60-69); மணிமேகலை மணிபல்ல வத்திலிருந்து அமுத சுரபியுடன் திரும்ப வந்ததும், இவரைக் கண்டு வணங்கி நிகழ்ந்தது கூற, அவட்கு இவர், மாதவியும் சுதமதியு மாகிய இருவரும் முற்பிறப்பில் தாரை வீரை என்ற பெயரினராய்க் கச்சயநாட்டு வேந்தனான துச்சயனுக்கு மனைவியராய் இருந்ததும், அவ்வேந்தனை இவ்வடிகள் கண்டு வீரையும் தாரையும் மாய்ந்த செய்தி யறிந்ததும் கூறி,
“ ஆடுங் கூத்திய ரணியே போல
வேற்றோ ரணியொடு வந்தீரோ” (12:51-2)
என்று கூறுகின்றார்.
இவர் புத்தன் கூறிய நல்லறம் நாட்டிற் பெருகாமைக்கு இரங்கிக் கூறுவன இவரை அறவணவடிகள் என்பது ஏற்புடையதே என்றற்குச் சான்று பகர்கின்றது. மாதவி, சுதமதி யென்ற இருவரது பழம்பிறப்பைத் தான் அறிந்தமை கூறுமிடத்து, புத்த தருமம் பர வாமைக்கு இரங்கி,
“ தரும தலைவன் தலைமையின் உரைத்த
பெருமைசால் நல்லறம் பெருகா தாகி
இறுதியில் நற்கதி செல்லும் பெருவழி,
அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண்ணடைந்தாங்குச்
செயிர்வழங்கு தீக்கதி திறந்து கல்லென்று
உயிர்வழங்கு பெருநெறி ஒருதிறம் பட்டது;
தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம்
உண்டென வுணர்த லல்லது யாவதும்
கண்டினிது விளங்காக் காட்சி போன்றது;
சலாகை நுழைந்த மணித்துளை யகவையின்,
உலாநீர்ப் பெருங்கடல் ஓடா தாயினும்
ஆங்கத் துளைவழி உகுநீர் போல
ஈங்கு நல்லறம் எய்தலும் உண்டெனச்
சொல்லலும் உண்டுயான்; சொல்லுதல் தேற்றார்
மல்லல்மா ஞாலத்து மக்களே” (12: 57-71)
என்றும், புத்தர் பிரான் தோன்றுங் காலத்தில்,
“ பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல,
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி யுவகையோடு உயிர்கொளப் புகூஉம்” (12: 79-81)
என்றும் கூறுதலால் அறியலாம். மேலும், இவர் புத்தரது திருவடி பரவுவதே உட்கோளாளாக வுடையரென்பது,
“ போதி மூலம் பொருந்திய சிறப்பின்
நாதன் பாதம் நவைகெட ஏத்துதல்
பிறவி தோறும் மறவேன்” (12: 101-103)
என்பதனால் விளங்குகிறது.
இவர் மணிமேகலை, மாதவி, சுதமதி முதலாயினார்க்கு எதிர்வில் நிகழ இருப்பனவற்றையும் தெரிந்துரைக்கும் அறிவு நலம் சான்றவர். அவ்விருவரையும் கூறுமிடத்து முற்பிறவியில் துச்சய னுடன் பாதபங்கய மலையைக் கண்டு பரவிய காரணத்தால்,
“ ஈங்கிவர் இருவரும் இளங்கொடி நின்னோடு
ஓங்குயர் போதி உரவோன் திருந்தடி
தொழுது வலங்கொண்டு வினை நீங்கிப்
பழுதில் நன்னெறிப் படர்குவர் காணாய்” (12: 110-13)
என்று உரைக்கின்றார். தீவதிலகையும் மணிமேகலா தெய்வமும் கூறியவாறே, இவ்வறவண வடிகள் மணி மேகலையின் எதிர்காலத்தை யுரைத்து, ஆபுத்திரன் வரலாற்றையும் விரியக் கூறுகின்றார். கூறுபவர், ஆபுத்திரன் மணிபல்லவத்தில் உண்ணா நோன்பிருந்து உயிர் விடுங்கால் தான் சென்றிருந்த தாகவும், அப்போது அவனை, இவர் “என்னுற்றனையோ?” என்று கேட்க, அவன், “தன்உற் றனபல தான்எடுத் துரைத்தனன்” (14: 67-68) என்றும் கூறுகின்றார். ஆபுத்திரன் புண்ணியரா சனாய் ‘ஆ’ வயிற்றில் தோன்றியவன்று நிகழ்ந்த நிகழ்ச்சி களைக் கண்டு, சக்கரவாளக் கோட்டத் தேவர் பலரும் கந்திற் பாவையை வினவ, அது,
“ மணிபல்ல வத்திடை மன்னுயிர் நீத்தோன்
தணியா உயிருயச் சாவகத் துதித்தனன்,
ஆங்கவன் தன்திறம் அறவணன் அறியும் என்று
ஈங்கென் நாவை வருத்தியது” (15: 36-39)
என்று உரைக்கின்றார். இவ்வாறு உரைத்தவர் முடிவில் மணி மேகலையை நோக்கி, “இக்காவிரி நாட்டில் வறமுண்டாகி விட்டது; நீ விரைந்து சென்று இவ்வமுதசுரபியால் பசித்தோர்க்கு உணவளிப் பாயாக” என்பார்
“ வெண்திரை தந்த அமுதை வானோர்
உண்டொழி மிச்சிலை யொழித்து வைத்தாங்கு
வறனோடு உலகின் வான்துயர் கெடுக்கும்
அறனோடு ஒழித்தல், ஆயிழை, தகாது” (15:51-54)
என்று சொல்லி விடுகின்றார். இதனால், உயிர்கட்கு உணவளிக்கும் நல்லறத்தில் மிக்க ஊக்கமுடையர் இவர் என்பது விளங்குகிறது,
மணிமேலையைச் சிறைமீட்டற் பொருட்டு, இவ்வடிகள் மாதவி சுதமதி என்ற இருவருடன் இராசமாதேவிபால் வர, அவள் இவரை வணங்கி வழிபட்டது கண்டு, அவட்கு அறங்கூறத் தொடங்கி, முதற்கண், மகன் இறந்தது குறித்து,
“ தேவி கேளாய், செய்தவ யாக்கையின்
மேவினே னாயினும் வீழ்கதிர் போன்றேன்;
பிறந்தார், மூத்தார், பிணிநோ யுற்றார்,
இறந்தார் என்கை இயல்பே; இதுகேள்” (24: 101-104)
என்று கூறிப் பின் பேதைமை முதல், வினைப்பயன் ஈறாகவுள்ள பன்னிருவகை நிதானங்களையும் விளக்கி, மணிமேகலையை நோக்கி, இவற்றின் பகுதிகளைத் தான் பிற்கூறுவதாகச் சொல்லி விடுக்கின்றார்.
கச்சிநகர்க்கண் மணிமேகலை இருந்து அறஞ் செய்தலைக் கேள்வியுற்று இவ்வடிகள் ஏனை மாதவியும் சுதமதியுமாகிய இருவருடன் அவள்பால் சென்று அவள் இட்ட உணவுண்டு, காவிரிப்பூம்பட்டினம் கடல் கொள்ளப் பட்டதற்குரிய காரணத்தைக் கூறுகின்றார். அது கேட்கும் அவள் இவ்வாறே தனக்குத் தீவ திலகை செப்பிய தாக வுரைத்துத் தனக்கு அறங்கூற வேண்டுமென வேண்ட அவற்றைத் தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை, பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை என்ற இரண்டாலும் விரித்துரைக் கின்றார்.
5. காஞ்சனன்: இவன் காயசண்டிகை யென்னும் விஞ்சை மகட்குக் கணவன். அதனோடு, உதய குமரனைக் கொன்றதனால், இக்காப்பியத்தில் ஒரு தொடர்பு பெறுபவன். இன்றேல், சுதமதியைக் கெடுத்தொழிந்த மாருதவேகன் என்னும் விஞ்சையன் போலப் பெயர் மறைந்து போயிருப்பன். “அக்கறை தீர்ந்த பின் அக்கை மகள் சக்கை” என்று கருதும் மாருத வேகன் போலாது, இக் காஞ்சனன் தன் மனைவி காயசண்டிகைபால் கழியாக் காதல் கொண்டிருப்பவன். காயசண்டிகை தன் செருக்கினால் முனிவன் சாபத்துக்கு இலக்காயது கண்டும், சிறிதும் வெறாது, அவள்பாற் சென்ற காதலால், இக் காஞ்சனனும் மிக இரங்கி,
“ ஆரணங் காகிய அருந்தவன் தன்னால்
காரண மின்றியும் கடுநோ யுழந்தனை” (17: 53-54)
என்று கூறுகின்றான். அவள் வானூடேகும் மந்திரம் மறந்ததும், யானைத் தீயால் வருந்துவதும் கண்டு வருந்தி, கனியும் கிழங்கும் நல்லன கொணர்ந்து தருகின்றான். அவனே, அவள் பசி வருத்தம் கண்டு ஆற்றாது,
“ சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்
கம்ப மில்லாக் கழிபெருஞ் செல்வர்,
ஆற்றா மாக்கட்கு ஆற்றுந் துணையாகி
நோற்றார் உறைவதோர் நோனகர் உண்டால்;
பலநா ளாயினும் நிலனொடு போகி
அப்பதிப் புகுக” (17: 62-67)
என்று அருளுடன் கூறுகின்றான். இவ்வாறே ஆண்டுதோறும் காவிரிப்பூப்பட்டினத்தில் இந்திரவிழா நிகழுந் தோறும் வந்து அவள் பசித்துன்பம் கண்டு வருந்தி விட்டுச் செல்கின்றான்.
இத்துணைக் காதலுடைய இவன் மணிமேகலை காய சண்டி கை வடிவிலிருப்பக் கண்டு, அவளைக் காய சண்டிகையே எனக் கருதிவிடுகின்றான். உதயகுமரன் போலக் கூர்த்த அறிவில்லா மையின், அவளது புறத்தோற்றத்தையே கண்டு மயங்கி விடுகின்றான் இக்காஞ்சனன். உதயகுமரன் தொடக்கத்தே காயசண்டிகையே என்று மயங்கினும் அவள் சொல்லும் செயலும் நோக்கி உண்மை யறிந்தது போல இவ் விஞ்சையன் நோக்க வில்லை. மணிமேகலை உதயகுமரனைக் கண்டதும் அவன் பாற் செல்லவே, இவன் மனம் பொறாமையால் மூடப்படுகிறது. வெகுளி யெழுகின்றது. உண்மையறிவு கலங்கி விடுகிறது. அவன் தனக்குள்ளே,
“ தற்பா ராட்டும் சொற்பயன் கொள்ளாள்,
பிறன் பின் செல்லும்; பிறன்போல் நோக்கும்;
மதுக்கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப்
பவளக் கடிகையின் தவளவாள் நகையும்
குவளைச் செங்கணும் குறிப்போடு வழாஅள்;
ஈங்கிவன் காதல னாதலின் ஏந்திழை
ஈங்கொழிந்தனள்” (20:71-78)
என்று சொல்லி, மனம் சினத் தீயால் வெதுப்பப் படுகின்றான். மணிமேகலையான காயசண்டிகையை முதற்கட் கண்டதும், அவள் அமுத சுரபி கொண்டு உணவளித்தலை வியந்து,
“ இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம்
ஒன்றே யாயினும் உண்போர் பலரால்;
ஆனைத் தீநோய் அரும்பசி களைய,
வான வாழ்க்கையர் அருளினர்கொல்?” (20; 33-36)
என்று கூறுவதால் அவன் காதல்நிலை குன்றாமை பெறப்படு கின்றது.
இப்பெற்றியோனுக்கு உதயகுமரன்பால் செற்ற முண்டா தலும், அவனை மறைவிருந்து கொலை செய்தலும் இக்காலத்தும் நிகழும் நிகழ்ச்சிபோல்வனவே யாகின்றன. ஆயினும், ஓருயிரை அது நின்ற உடலினின்று நீக்குதலாகிய கொலை வினையை அரசரன்றிப் பிறர் செய்தற்கு உரியரன்மையின், இதனையுணர்ந்த அரசனான மாவண் கிள்ளி, இக்காஞ்சனனைப்பற்றிக் கூறுமிடத்து, “யான் செயற்குரிய கொலையை அவ்விஞ்சையன் செய்தமையின், அவன் தகவிலன்” என்று இகழ்ந்துரைக்கின்றான்.
6. மணிமேகலை: மணிமேகலை மாதவிக்கும் கோவலனுக்கும் பிறந்த மகளாயினும் கண்ணகிபால் சிறந்த அன்பும் தொடர்பும் கொண்டு வளர்ந்திருக்கின்றாள். இதனை மாதவி, இவளைப் பற்றிக் கூறும்போது, “காவலன் பேரூர் (மதுரை) கனையெரி யூட்டிய, மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை” (2: 54-55) என்று கூறுதலால் அறியலாம். ஆனால், மணிமேகலை வஞ்சிமாநகர்ச் சென்று கோயில் கொண்டிருந்த கண்ணகியைக் கண்ட போது, அக் கண்ணகிக் கடவுள், கோவலற் குற்ற துன்பத்தை “எம்மிறைக் குற்ற இடுக்கண்” (26:11) என்று சொல்லக் காண்கின்றோமேயன்றி, மணிமேகலையை, என்மகளே என்றோ, எம்மிறை மகளே என்றோ சொல்லக் காண்கிலோம்.
மணிமேகலை பேரழகு படைத்தவள். இதனைச் சுதமதி, “மணிமேகலையின் கண்ணிற் சொரியும் நீர்த் துளியைக் காணின் காமன் தன் படையை எறிந்துவிட்டு உடல் நடுங்குவன்; ‘ஆடவர்’, கண்டால் அகறலு முண்டோ, பேடியரன்றோ பெற்றியின் நின்றிடில்” (3; 20-25) என்று கூறுவதாலும், மலர்வனம் சென்ற போது மணி மேகலையின் தவ வடிவு கண்டோர், ‘அணியமை தோற்றத் தருந்தவப் படுத்திய தாயோ கொடியவள் தகவிலள்’ (3:149-150) என்றும் கூறுவதாலும், ஆபுத்திரன் நாடடைந்தபோது அவனைக் கண்ட அவள், “பெண்ணிணை யில்லாப் பெருவனப் புற்றாள்” (25:27) என்றலினாலும் பிறவற்றாலும் அறியலாம்.
உதயகுமரன் தன்பால் காதல் கொண்டுள்ளான் என்பதை வயந்தமாலை மாதவிக்குரைப்பக் கேட்டு, அவன்பால் மணிமேகலை யுள்ளத்தே காதல் பிறக்கின்றது. அதனை யுணர்ந்து, அவன் தேரொலி கேட்டு அவன்பால் தன்னுள்ளம் சென்று ஒடுங்கு தலையறிந்து “என் செய்வேன்” என்றலும் (4; 79-84); அவன் பளிக்கறைக்கு வந்த போது அவனைக் கண்டதும் அவள் மனத்தில் காதல் எழுதலும், அதனை அவன் செய்த இகழ்ச்சிக் குறிப்பு நினைந்து கெடுக்க முயன்றும், “இகழ்ந்தனனாகி நயந்தோ னென்னாது புதுவோன் பின்றைப் போயதென் நெஞ்சம், இதுவோ அன்னாய் காமத்தி யற்கை” (5: 88-90) என்றலும்; “இதுவே வாயின் கெடுக தன்திறம்” என்றலும் பிறவும் அவள் தான்பெற்ற கல்வியறிவு, சமய நூலறிவு என்ற இரண்டாலும் தன்னையும் தன் மனத்தையும் வேறு வைத்து எண்ணி மனத்தை அறிவால் அடக்கும் திறல் பெற்றிருப்பதைக் காட்டுகின்றன.
கோவலனுற்ற கொடுந்துயர் கேட்டு இவள் கண்ணீர் சொரிந்து புலம்புதலும், மணிபல்லவத்தே தனித்த போது, தனிமையாற்றாது சுதமதியை நினைந்து, “சுதமதி யொளித் தாய்; துயரம் செய்தனை,” “மனம் நடுக்குறூஉம்; மாற்றம் தாராய்; வல்லிருள் கழிந்தது; மாதவி நடுங்கும்; எல்வளை வாராய், விட்டகன்றனையோ?” எனத் தன் இளமைப் பண்பு தோன்ற அழுபவள்,
“ விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள்
வஞ்சம் செய்தனள் கொல்லோ அறியேன்” (8: 25-26)
என்று கூறலும் பிறவும் அவளுடைய மெல்லியற் பொறையை விளக்குகின்றன.
புத்த பீடிகையைக் கண்டு தன் பிறப்புணர்ந்த மணிமேகலை, உடனே, “காதலன் பிறப்பும் காட்டாயோ?” (10:66) என்று விழைதல் அவள் உள்ளத்தே காதற்குறிப்பு அறாது நிலவுதலும், அம்பலத்தே உணவு நல்கும் அறம் செய்யும்போது, உதய குமரன் போந்து “நல்லாய் என்கொல் நற்றவம் புரிந்தது?” என்று வினவ, இவள்,
“ என்னமர் காதலன் இராகுலன் ஈங்கிவன்
தன்னடி தொழுதலும் தகவென வணங்கி” (18: 128-129)
அதனோடு நின்றொழியாது, காதல் வெள்ளத்தால் ஈர்ப்புண்டு,
“ அறைபோய் நெஞ்சம் அவன்பா லணுகினும்
இறைவளை முன்கை ஈங்கிவன் பற்றினும்
தொன்று காதலன் சொல்லெதிர் மறுத்தல்
நன்றி யன்றுஎன நடுங்கினள் மயங்கி” (18: 130-133)
அவனுடன் பேசலுற்றனள் என ஆசிரியர் கூறலும், பின்பு அவ்வுதய குமரன் விஞ்சையனால் கொலையுண்டது கண்டதும் ஆறாத் துயருற்று, காயசண்டிகை வடிவு நீங்கித் தன் உண்மை வடிவுடன் தோன்றி, அவனைக் காண்டலால் எழும் காதல் தன் கருத்து முழுதும் கவர்ந்து கொள்ளவே, பழம் பிறப்பில் அவன்பால் தான் கொண்டிருந்த ஆராக் காதலால் தீயில் விழுந்து உயிர் விட்டது சொல்லி,
“ பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும்
அறந்தரு சால்பும் மறந்தரு துன்பமும்
யான்நினக்கு உரைத்துநின் இடர்வினை யொழிக்கக்
காயசண் டிகைவடி வானேன், காதல!
வாய்வாள் விஞ்சையன் மயக்குறு வெகுளியின்
வெவ்வினை யுருப்ப விளிந்தனையோ” (21: 19-24)
என்று அரற்றிப் புலம்பி அவனைத் தழீஇக் கொள்ள நெருங்கு தலும், கந்திற்பாவை “செல்லல் செல்லல் சேயரி நெடுங்கண்” என்று கூறித் தடுத்தலும் நோக்கின், பழம் பிறப்புணர்ந்தும் உயிரொடு தொடர்ந்து நின்ற காதல், அவள் உள்ளத்தே இருந்து, பிறகு ஓரிடத்தும் எழாமையின் பெரிதும் கெட்டமை தெரிகிறது. சிறிது நின்ற இத்தொடர்பும் இராசமாதேவி மணிமேகலையின் அடி வீழ்ந்து வணங்கிய போது, தானும் அவள் அடிவணங்கி, “தகுதி செய்திலை; காதலற் பயந்தோய்” (23: 145-147) என்று கூறு
மிடத்துத் தோன்றிக் கெடுகின்றது.
இக் காதற் குறிப்பு உள்ளத்தே நிலவினமையின் உதய குமரனைக் காணுந்தோறும் அவன் தன்னை விடாது நயத்தற்கு ஏற்ற குறிப்புக்கள் இவள்பால் நிகழ்ந்தன; இன்றேல் அவன் இவளை இடையிருள் யாமத்திற் போந்து எடுத்தேக நினைத்தற்கு ஏதுவே இல்லாது போயிருக்கும். இக் குற்றம், சோழவேந்தன் “கணிகை மகளையும் காவல் செய்க” என்றற்கு அமைதி செய்கின்றது.
அமுத சுரபியின் இயல்பு கேட்டதும், இவட்குத் தானும் பசித்த மாக்கட்கு உணவு நல்கும் நல்லறம் புரியவேண்டும் என்ற வேட்கை மிக்கு எழுகின்றது; வறியோரின் வறுமை நிலை அவள் மனக்கண்ணில் இனிது தோன்றுகிறது; இவற்றை ஒளியாது உரைக் கலுற்று,
“ துய்ப்போர் தம்மனைத் துணிச்சித ருடுத்து,
வயிறுகாய் பெரும்பசி யலைத்தற் கிரங்கி
வெயிலென முனியாது புயலென மடியாது
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்துமுன்
அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால்” (11: 109-113)
என்று மொழிகின்றாள்.
மணிமேகலையின் பழம்பிறப் புணர்வும், எதிர்கால நிகழ்ச்சி யுணர்வும் அவட்கு வாராதிருப்பின், அவள் வாழ்க்கையே வேறு வகையில் திரும்பி யிருக்கும். இவட்கு மணிமேகலா தெய்வமும், தீவதிலகையும், அறவண வடிகளும், கந்திற் பாவையும், கண்ணகி கடவுளும், மாசாத்துவானும் பெருங்காவல் செய்வது போல இவ்வுணர்வுகளைக் கொளுத் தினமையின், இவள் தன் வாழ்வைத் தூய்மையாக நடத்தி அறப்பயனைப் பெறநேர்ந்தது. இவளுடைய இயற்கை யறிவு யாண்டும் தனித்து நின்று ஒரு நிகழ்ச்சியையும் நிகழ்த்தவில்லை. இதனை, மணிபல்லவத்துத் தனித்துப் புலம்பலும், உதயகுமரனைக் கண்டு உள்ளம் குழைதலும் பிறவும் இனிது விளக்கிவிடுகின்றன.
வஞ்சிநகரத்தே கண்ணகியைக் கண்டு, அழுது நின்று,
“ அற்புக்கடன் நில்லாது நற்றவம் படராது
கற்புக்கடன் பூண்டு நும்கடன் முடித்தது
அருளல் வேண்டும்” (26: 7-9)
என்று வினவலும், சமயக்கணக்கர்தம் திறம் அறியப் போந்தவள், நிகண்ட வாதியை நோக்கி, ஆராய்ச்சித் திறம்பட,
“ …………………………………………………………….நீயுரை: நின்னால்
புகழுந்த தலைவன்யார்? நூற்பொருள் யாவை?
அப்பெருள் நிகழ்வும் கட்டும் வீடும்
மெய்ப்பட விளம்பு” (27: 167-170)
என்று வினவலும், காட்சி, அனுமானம் என்ற இருவகை அளவை களையும் உடன்படாத பூதவாதியைத் தெருட்டுமுகத் தால்,
“ ……………………………………………………………………..நின்
தந்தை தாயரை அனுமானத்தால் அலது
இந்த ஞாலத்து எவ்வகை யறிவாய்” (27: 283-285)
எனக் கூறலும், பிறவுமாகியவற்றிற்கு அவள் மேலே கூறியவாறு கொண்ட உணர்வும் நல்லோர் துணையுமே காரணமாதல் துணியப் படும்.
மணிமேகலையின் சிறப்பனைத்திற்கும் தோற்றுவாயாக மாதவி இவளை இளமையிலேயே நாடக மகளிர்க்குரிய துறையில் செலுத்தாது விலக்கிய செயல் நினைக்குந்தோறும் இறும்பூது பயக்கின்றது. கச்சிநகர்க்கண் இவள் பாத பீடிகை யையும், தீவதிலகை, மணிமேகலா தெய்வம் என்ற இவர்கட்குக் கோயிலையும் அரசனைக் கொண்டு அமைத்துச் சிறப்புச் செய்தது அவராற் பெற்ற அறிவுக்கு நன்றி செலுத்தியதாகும்.
7.மாதவி: இவள் காவிரிப்பூம்பட்டினத்துக் கணிகையருள் சித்திராபதி யென்பாட்கு மகள். இவள் ஆடல், பாடல் அழகு என்ற மூன்றினும் தலைசிறந்து விளங்கி, கோவலன் நட்புப் பெற்று மணிமேகலையைப் பயந்தவள். கோவலன் மதுரையிற் கொலை யுண்டிறந்தது கேட்டு வருந்தித் துறவு பூண்டு, புத்த சங்கத்தைச் சேர்ந்து அறவணவடிகள் பால் அறங்கேட்டு ஒழுகிவருகின்றாள். தன்னைப் போலவே தன் மகள் மணி மேகலையும் நல்ல கல்வியறிவும் அழகும் பெற்றிருப்பினும் இளமையிலே அறத்துறையில் ஒழுகு மாறு விடுகின்றாள். இவள் இதனால் அறச்செயலும் அருளுள்ளமும் உடையளாதல் பெறப்படும்
இவள் உள்ளத்தை மாற்றி நாடகக் கணிகையர்க்குரிய செயலில் ஈடுபடுத்தற்கு முயன்ற சித்திராபதி, மாதவியின் தோழியான வயந்தமாலையை அம் மாதவி பால் விடுப்ப, அவள் போந்து கூறியவற்றைக் கேட்டு மாதவி, சிறிதும், மனம் மாற்றம் எய்தாது,
“ காதல னுற்ற கடுந்துயர் கேட்டுப்
போதல் செய்யா உயிரொடு நின்றே
பொற்கொடி மூதூர்ப் பொருளுரை யிழந்து
நற்றொடி நங்காய் நாணுத் துறந்தேன்” (2:38-41)
என்றும், மணிமேகலையைத் தவநெறிப் படுத்தலே தக்கது என்றும், தான் புத்த சங்கத்தை யடைந்து அறவணவடிகளைச் சரண்புக, அவர்,
“ பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்;
பிறவார் உறுவது பெரும்பே ரின்பம்;
பற்றின் வருவது முன்னது; பின்னது
அற்றோர் உறுவது; அறிக, என் றருளி,
ஐவகைச் சீலத் தமைதியும் காட்டி,
உய்வகை இவை; கொள்” (2: 64-69)
என்று உரைத்ததையும் கூறுதலால், அவள் உள்ளம் அறநெறிக் கண் உறைத்து நிற்றலை அறிகின்றோம்.
தன் மகளாகிய மணிமேகலைபால் மாதவிக்கிருக்கும் அன்பு தாயன்பாயினும் மிகச் சிறந்ததாகும். மாதவி மணிமேகலையைப் பயந்து பெயரிடும் நாளிலே மணிமேகலா தெய்வத்தால், தன் மகள் மணிமேகலை, “காமன் கையறக் கடுநவை யறுக்கும் பெருந் தவக் கொடி” (7; 36-7) என்று பாராட்டப் பெற்றதைக் கனவால் அறிந்திருப்பது, அவட்குத் தன் மகள்பால் பேரன்பு கொள்ளற்குத் தக்க ஏதுவாகிறது. இதனால், மணிமேகலை மணிபல்லவத்துக்குக் கொண்டேகப் பட்டது சுதமதியால் அறிந்து; “நன்மணி யிழந்த நாகம் போன்று அவள், தன்மகள் வாராத் தனித்துயருழப்ப, இன்னுயிர் இழந்த யாக்கையின் இருந்தனள்” (7;1 31-33)என்று ஆசிரியர் குறிக்கின்றார். மேலும், அவள், மணிமேகலை மணிபல்லவம் சென்ற ஏழாம் நாள் வந்ததும் இனியும் வாராமை கண்டு வருந்து வதனை,
“ வழுவறு தெய்வம் வாய்மையின் உரைத்த
எழுநாள் வந்தது; என்மகள் வாராள்;
வழுவாய் உண்டு” (11: 128-130)
என்று மயங்குகின்றாள்.
தன்பால் வந்த மணிமேகலை, “தாயே” என்று சொல்லித் தன்னைத் தழீஇக்கொள்ளாது, பழம் பிறப்பைச் சுட்டி,
“ இரவி வன்மன் ஒருபெரு மகளே,
துரகத் தானைத் துச்சயன் தேவி,
அமுத பதிவயிற்று அரிதின் தோன்றித்
தவ்வைய ராகித் தாரையும் வீரையும்
அவ்வைய ராயினிர்; நும்மடி தொழுதேன்;
வாய்வ தாக மானிட யாக்கையின்
தீவினை யறுக்கும் செய்தவம் நமக்கு ஈங்கு
அறவண வடிகள் தம்பால் பெறுமின்” (11: 133-140)
என்று கூறலும், மாதவி அற்புதமுற்று அயர்ந்து போகின்றாள். அதற்குப் பின் அவள்பால் மிகுதியும் சொல்லாடலோ சிறப்புச் செய்கையோ உண்டாகவே இல்லை. அவள் அறவணன் கூறியது போல, முற்பிறப்பில் பாதபங்கய மலையைப் பரசிய பயனால், போதி மாதவன் திருந்தடி வணங்கி, அவன் கூறிய அறநெறிக் கண் நிற்கின்றாள்.
இந்நெறி நிற்கும் மாதவி அவ்வப்போது மணிமேகலை செயலை அறிந்து வருகையில் மணிமேகலை வேந்தனால் சிறை செய்யப்பட்டுப் பின் அரசமாதேவியுடன் இருப்பதை அறிகின்றாள். அவள் மனம் படாதபாடு படுகிறது. அதனைச் சீத்தலைச் சாத்தனார்.
“ மணிமே கலைதிறம் மாதவி கேட்டுத்
துணிகயம் துகள்படத் துளங்கிய துபோல்
தெளியாச் சிந்தையள் சுதமதிக் குரைத்து
வளியெறி கொம்பின் வருந்திமெய்ந் நடுங்கி”
(24: 83-86)
துன்புற்று,- (வயிறு வருந்தச் சுமந்து பெற்றவளன்றோ! அறவணரை வணங்கி, அவரை யழைத்துக்கொண்டு அரசமா தேவிபால் வந்து சேர்கின்றாள்.
மணிமேகலை நீங்கிய பின், அறவணரோடே யிருந்து முடிவில் கச்சிமாநகர் போந்து, ஆங்கே மணிமேகலை அமைத் திருந்த அறச்சாலையில்அவள் அளித்த அமுதுண்டு, இனி திருந்து, அறம்புரிந்து வருகின்றாள்.
8. சுதமதி: இவள் சண்பை நகரத்துக் கௌசிகன் என்னும் பார்ப்பனனுக்கு மகள்; இளமையிலேயே தாயை யிழந்தவள். தந்தையால் வளர்க்கப்பட்டு ஒருநாள் பூஞ்சோலையில் தனித்துப் பூக்கொய்திருக்கையில், மாருதவேக னென்னும் விஞ்சையனால் கவரப்பட்டுக் கற்பிழந்து காவிரிப்பூம் பட்டினத்தே அவனால் கைவிடப் பட்டவள்; இவளைத் தேடித்திரிந்து போந்த கௌசிகன் பிச்சையுண்டு வாழ்கையில், அவனைப் பசுவொன்று முட்டி வயிற்றைக் கிழித்துக் குடரைச் சரிவிக்க, அவனை யேற்று ஆதரிக்கச் சமணர் கூட்டம் மறுத்து வருத்தவே, இவளும் அவனுடன் பெருந்து யருழப்ப, பின்பு, சங்கதருமன் என்னும் புத்தமுனிவனால் அவன் ஆதரிக்கப் பெற்று உடல்நலம் பெற்றுப் புத்தனோகிய நல்லறம் கேடப் தந்தையுடன் புத்த சங்கத்தை யடைந்து தானும் அறங்கேட்டு மாதவியுடன் மணிமேகலைக்குச் செவிலி போல் இருந்து வருபவளாகும்.
இவள் நல்ல சொல்வன்மையும், இடமறிந்து நலமுரைக்கும் தன்மையு முடையவள். இவள், மாதவி, மணிமேகலையை மலர்வனம் செல்ல விடுத்தபோது, அவள் தனித்தேகல் கூடாதென்றற்கு, அம்மணிமேகலையை “ஆடவர் கண்டால் அகறலு முண்டோ; பேடியரன்றோ பெற்றியின் நின்றிடில்” (3: 24-25) என்றலும், தன் வரலாறு கூறலும், இலவந்திகை, உய்யானம், சம்பாதிவனம், கவோவனம் முதலியன வற்றின் இயல்பு கூறி விலக்கலும், செல்லுதற்குரிய உவவனத்தை,
“ அருளும் அன்பும் ஆருயி ரோம்பும்
ஒருபெரும் பூட்கையும் ஒழியா நோன்பின்
பகவன தாணையிற் பன்மரம் பூக்கும்
உவவனம் என்பதொன் றுண்டு” (3: 56-62)
என்று உரைத்து, இதன் இயல்பும், அஃது ஏற்பட்ட தற்குரிய காரணமும் கூறும் வகையும் பிறவும் மிக்க நயமுடையன வாகும்.
உவவனத்தின் காட்சியை இச் சுதமதி மணிமேகலைக்குக் காட்டலுற்று,
“ குழலிசைத் தும்பி கொளுத்திக் காட்ட
மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய
வெயில் நுழைபு அறியாக் குயில் நுழை பொதும்பர்
மயிலா டரங்கின் மந்திகாண் பனகாண்
மாசறத் தெளிந்த மணிநீர் இலஞ்சிப்
பாசடைப் பரப்பில் பன்மலர் இடைநிள்று
ஒருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை
அரச வன்னம் ஆங்கினி திருப்பக்
கரைநின் றாலும் ஒருமயில் தனக்குக்
கம்புட் சேவல் கனைகுரல் முழவாக்
கொம்பர் இருங்குயில் விளிப்பது காணாய்” (4: 3-13)
என்பன முதலாகக் கூறிச் செல்வது இயற்கைக் காட்சியில் அவட் கிருக்கும் ஈடுபாட்டினை எடுத்துக் காட்டுகிறது.
மணிமேகலையைத் தேடிப் பளிக்கறைக்கண் உதய குமரன் வரக் கண்டு உளம் நடுங்கிநிற்கும் இவள், அவன் மணிமேகலையைப் பற்றி வினவ, அவற்குத் தவமகளா தலின் அத் தகுதி தோன்ற, உடலின் இயற்கையைக் கூறத் தொடங்கி விடுகிறாள்; இதற்குத் தோற்று வாயாக அவள் கூறுவது அவளது நாநலத்தைப் புலப் படுத்துகிறது.
“ இளமை நாணி முதுமை யெய்தி
உரைமுடிவு காட்டிய உரவோன் மருகற்கு
அறிவும் சால்பும் அரசியல் வழக்கும்
செறிவளை மகளிர் செப்பலு முண்டோ?
அனைய தாயினும் யானொன்று கிளப்பல்” (4: 107-111)
என்பது அது. “மணிமேகலை எத் திறத்தினள்” என்று கேட்கும் அவ்வுதயகுமரனை அச்சுறுத்தி வெருட்டவும், அவன் மனம் வருந்தா வகையில் அவன் நலத்தைப் புகழவும் கருதி, முதற்கண் அவன் நலத்தை வியந்தாள் போன்று.
“ குருகுபெயர்க் குன்றம் கொன்றோன் அன்னநின்
முருகச் செவ்வி” (5: 13-14)
என்று புகழ்ந்துரைத்து, மணிமேகலையின் தவநிலையை யோது வாளாய்,
“ நின், முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால்
பருகாள்; *ஆயின், பைந்தொடி நங்கை
ஊழ்தரு தவத்தன்; சாப சரத்தி
காமற் கடந்த வாய்மையள்” (5: 14-17)
என்று சொல்லுகின்றாள். அதற்குமேல் அவன் சுதமதி வரலாற்றைக் கேட்கின்றான். அவனுக்குத் தன் வரலாற்றைக் கூறுமுன், தன் வரலாறறிந்தால், அவன் பால் தோன்றும் காமக் கிளர்ச்சி கண்டு, தனக்கு ஏதேனும் தீங்கு நினைப்பனோ என்று அஞ்சி, முன்ன தாகவே,
“ வார்கழல் வேந்தே வாழ்க நின்கண்ணி,
தீநெறிப் படரா நெஞ்சினை யாகுமதி” (5; 28-29)
என்றுரைப்பதும், தன் நிலைமையைத் தெரிவிப்பாளாய்,
“தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்
இன்பச் செவ்வி மன்பதை எய்த
அருளறம் பூண்ட ஒருபெரும் பூட்கையின்
அறக்கதி ராழி திறப்பட உருட்டிக்
காமற் கடந்த வாமன் பாதம்
தகைபா ராட்டுத லல்லது யாவதும்
மிகைநா இல்லேன்; வேந்தே வாழ்க” (5: 73-79)
என்றுரைப்பதும் அவளது, அறிவு நுட்பத்துக்கு அமைந்த சான்று களாகும்.
9. காய சண்டிகை: இவள் காஞ்சனன் என்னும் விஞ்சை யனுக்கு மனைவி. அவனோடு வருங்கால் பொதியிலின் அருகே ஒரு காட்டாற்றில், விருச்சிகனென்னும் முனிவன் உண்டற்கு வைத்திருந்த நாவற்கனியைத் தன் செருக்கினால் காலாற் சிதைத்து, அவன் இட்ட சாபத்தால் வானூடு செல்லும் மந்திரம் மறந்து யானைத்தீ யென்னும் நோயுற்று வருந்துபவள்; தன் பசித்தீயவித் தற்குக் காவிரிப்பூம் பட்டினத்தே தங்கியிருந்தவள்; கற்புடைய மகளிரின் இயல்பறிந்தவள்.
இவள்தான், மணிமேகலை அமுதசுரபி பெற்றுக் காவிரிப் பூம்பட்டினம் வந்த பின், அவளை, முதற்கண் ஆதிரை யென்பாளின் மனைக்கண் ஐயமேற்கச் சொல்லுகின்றாள்; ஆதிரையின் வரலாற்றை உரைப்பவளும் இவளே. மணி மேகலையை உலக வறவிக்குச் செல்க என்று சொல்லுமிவள், அதன் இருப்பை,
துக்கம் துடைக்கும் துகளறு மாதவர்
சக்கர வாளக் கோட்டமுண்(டு); ஆங்கு அதில்
பலர்புகத் திறந்த பகுவாய் வாயில்
உலக வறவியொன் றுண்டு; அதனிடை
ஊரூர் ஆங்கண் உறுபசி யுழந்தோர்
ஆரு மின்மையின் அரும்பிணி யுற்றோர்
இடுவோர்த் தேர்ந்தாங்கு இருப்போர் பலரால்;
வடுவாழ் கூந்தல், அதன்பாற் போக (17: 75-82)
என்று உரைப்பது இனிதாக இருக்கிறது. இவள் தான் வருந்திய யானைத் தீயின் கொடுமையை,
“ நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி,
அடலரு முந்நீ ரடைந்த ஞான்று
குரங்குகொணர்ந் தெறிந்த நெடுமலை யெல்லாம்
அணங்குடை யளக்கர் வயிறுபுக் காங்கு
இட்டது ஆற்றாக் கட்டழற் கடும்பசிப்
பட்டேன் என்றன் பழவினைப் பயத்தால்” (17: 9-14)
என்று விளக்குந் திறம் நன்றாக இருக்கிறது.
இவள் செல்லும்போது விந்தாகடிகை யென்பாளது வயிற்றிற் பட்டு இறந்துபோகின்றாள்.
இவளது வடிவு கொண்டு, மணிமேகலை அறம் செய்ததனால் தான், காஞ்சனன் உதயகுமரன்பால் பொறாமையும் செற்றமும் கொண்டு கொலை புரிகின்றான். இதனை அவன் வரவு கண்டதும் மணிமேகலை நினைக்கவில்லை; உதயகுமரன் இறந்த பின்பே, உணர்ந்து அவ்வடிவினை அவள் உதறி நீங்குகின்றாள்.
10. ஆதிரை: இவள் வரலாறு இம் மணிமேகலைக் காப்பியத்தில் நெருங்கிய தொடர்புடைய தன்று; மணி மேகலைக்கு முதற்கண் பிச்சையிடும் பேறு ஒன்றுதான் இவட்கு இந்நூலில் கிடைக்கின்றது. இவள் கற்பிற் சிறந்தவள்; கணவன் சாதுவன் என்பவனோ “வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி” கணிகை மாதரின் கூட்டத்தால் கெட்டழிந்தவன். கெட்ட பொருளைமீட்டற்குச் சென்றிருந்த போது, ஏறிச் சென்ற கலம் கெடவே, தப்பி வந்தோர் அவன் இறந்தான் என ஆதிரைக்குச் சொல்ல, அவள் தீப்புக விரும்பி, தீமூட்டி அதில் விழுகின்றாள்; தீ அவளைக் கொல்ல வில்லை. தீயில்,
“ விரைமலர்த் தாமரை யொருதனி யிருந்த
திருவின் செய்யோள் போன்று இனிதிருப்ப”
அவளே வருந்தி,
“ தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன்,
யாது செய்கேன்!” (16: 33-36)
என்று ஏங்குகின்றாள். அசரீரி தோன்றி, “சாதுவன் இறக்கவில்லை; நாகர் தீவில் இருக்கின்றான்; வந்து சேர்வான்’ என்கின்றது. அவள் வீடு போந்து,
“கண்மணி யனையான் கடிதீங் குறுக”
எனத் தன் கணவன் பொல்லா வொழுக்க முடையனாகிய தறிந்தும் வெறாது அவனையே நினைந்து,
“ புண்ணியம் முட்டாள் பொழிமழை தரூஉம்
அரும்பெறல் மரபிற் பத்தினிப் பெண்டிரும்
விரும்பினர் தொழூஉம்” (16: 48-51)
பெருமையுடன் வாழ்கின்றாள். சாதுவனும் நாகர்க்கு நல் அறம் கூறித்தெருட்டி வந்து ஆதிரையுடன், “தன்மனை நன்பல தானம்” செய்கின்றான்.
11. இராசமா தேவி: இவள் சோழன் மாவண் கிள்ளியின் மனைவி; உதயகுமரனைப் பெற்ற தாய். சீர்த்தி யென்பது இவள் இயற்பெயர். இவள் மாவலியின் குலத்து வந்தவள் என்பார், நம் சாத்தனார்,
“ நெடியோன் குறளுரு வாகி நிமிர்ந்துதன்
அடியில் படியை அடக்கிய அந்நாள்
நீரிற் பெய்த மூரி வார்சிலை
மாவலி மருமான் சீர்கெழு திருமகள்
சீர்த்தி யென்னும் திருத்தகு தேவி” (19: 51-55)
என்று கூறுகின்றார். இவ் வரசியை முதற்கண் நமக்குக் காட்டலுற்ற சாத்தனார், சோழர் பெருமான் கண்டு உளம் சிறக்கும் விரைப்பூம் பந்தரும் பிற இனிய காட்சிகளும் அமைந்த வேனிற் பூம்பொழிற் கண் கொணர்ந்து நிறுத்துகின்றார். அப்பொழிற் சிறப்பை,
“ கொம்பர்த் தும்பி குழலிசை காட்ட,
பொங்கர் வண்டினம் நல்லியாழ் செய்ய,
வரிக்குயில் பாட மாமயில் ஆடும்
விரைப்பூம் பந்தர்” (19: 57-60)
முதலியவற்றை விரித்துரைக்கின்றார்.
உதயகுமரன் இறந்தது கேட்டு வருந்தும் இவட்குத் தேறுதல் கூறற்கு வந்த வாசந்தவை யென்பாள், அவன் சாக்காட்டினை இகழ்ந்து,
“ தன்மண் காத்தன்று, பிறர்மண் கொண்டன்று
என்னெனப் படுமோ நின்மகன் மடிந்தது!
மன்பதை காக்கும் மன்னவன் தன்முன்
துன்பம் கொள்ளேல்” (26: 17-20)
என்று சொல்லிவிட்டுப் போகின்றாள். மகன் இறந்த துயரமும் வாசந்தவை சொன்ன இகழ்ச்சி யுரையும் அரசியின் உள்ளத்தைச் சிதைக்கின்றன. மணிமேகலை பால் அவட்கு ஆறாச் சின முண்டா கிறது. மணிமேகலையின் நிலைமையைக் கெடுக்க வேண்டுமென்று ஒரு தீய நினைவு உண்டாகிறது. இதனை மறைத்துக் கொண்டு, அரசன்பாற் சென்று, முதற்கண் தன் மகனை இகழ்ந்து,
“ பிறர்பின் செல்லாப் பிக்குணிக் கோலத்து
அறிவு திரிந்தோன் அரசியல் தான்இலன்”
என்று கூறி,
“ கரும்புடைத் தடக்கைக் காமன் கையற
அரும்பெறல் இளமை பெரும்பிறி தாக்கும்
அறிவு தலைப்பட்ட ஆயிழை தனக்குச்
சிறைதக் கன்று செங்கோல் வேந்து” (23: 25-30)
என்று செப்புகின்றாள், அரசன் மகிழ்ந்து, சிறை வீடு செய்கின்றான். மணிமேகலையைத் தானே அழைத்துச் சென்று தீங்கு செய்யின் பழியாமென்று கருதி, அவளே தன்னோடு இருக்க வருமாறு,
“ என்னோடு இருப்பினும் இருக்க; இவ் இளங்கொடி
தன்ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல்” (23; 35-36)
என்று சொல்வது அவளது சூழ்ச்சித் திறனைக் காட்டுகிறது.
தன் மனையிடத்தே மணிமேகலைக்கு அவள், மயக்க மருந்து கொடுக்கின்றாள்; கல்லா இளைஞன் ஒருவனை யழைத்து அவளைக் கற்பழிக்க முயல்கின்றாள்;
“ மகனைநோய் செய்தாளை வைப்பது என்என்று
உய்யா நோயின் ஊண்ஒழிந் தனளெனப்
பொய்ந்நோய் காட்டிப் புழுக்கறை” (23: 58-60)
ஒன்றில் அடைக்கின்றாள். இவற்றாலெல்லாம் மணிமேகலை சிறிதும் மேனி வருந்தாது இருப்பக் கண்டு, அஞ்சி நடுங்கி, உண்மை யுரைப்பாளாய்,
“ செய்தவத் தாட்டியைச் சிறுமை செய்தேன்!
என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது
பொன்னே ரனையாய்! பொறுக்க” (23: 64-66)
என்று வணங்குகின்றாள். அவள் வணங்குவது தகாது எனக் கருதி மணிமேகலை தானும் அவள் அடிபணிந்து தன் மாண்பினை நிறுவிக் கொள்கின்றாள். பின்பு சித்திராபதி போந்து மணி மேகலையைத் தன்பால் விடுக்க வேண்டுமென்று வேண்டியபோது, நல்லறிவு பெற்ற இராசமாதேவி,
கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக்களவு மென்று உரவோர் துறந்தவை
தலைமையாக் கொண்டநின் தலைமையில் வாழ்க்கை
புலைமையென் றஞ்சிப் போந்த பூங்கொடி
நின்னொடு போந்து நின்மனைப் புகுதாள்;
என்னொடு இருக்கும் (24; 77 - 82)
என்று கூறித் தன் பெருந்தன்மையைப் புலப்படுகின்றாள்.
12. சித்திராபதி: இவள் மாதவியின் நற்றாய்; நாடகக் கணிகையர்க்குள்ள நலமும் தீங்கும் திரண்டு உருக்கொண்டாற் போல்பவள். இவட்கு மாதவியும் மணிமேகலையும் அறம் கேட்டு மாதவர் உறையும் பௌத்த சங்கத்தில் இருப்பதில் சிறிதும் விருப்பம் கிடையாது. காவிரிப்பூம் பட்டினத்தில் இந்திர விழாவில் மாதவியும் மணிமேகலையும் கலந்து கொள்ளாது புத்த சங்கத்தில் இருப்ப தனால் இவள் மிக்க வருத்த மடைகின்றாள்.
“ தீவகச் சாந்தி செய்தரு நன்னாள்
மணிமே கலையொடு மாதவி வாராத்
தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வர,” (2 ; 3 -5)
இச் சித்திராபதி மிகமிக வருந்துகின்றாள்; ஊரவர் அலர் கூறுகின்றனரெனக் கூறி வருமாறு வயந்தமாலையைச் சங்கத்துக்கு விடுக்கின்றாள். மணிமேகலையின் நலம் புனைந்து கூறி, உதய குமரனுக்கு அவள்பால் தீரா வேட்கை யுண்டாகச் செய்தவளும் இவளே என்று மணிமேகலை சுதமதிக்குக் கூறும் கூற்றால் உணர நிற்கிறது. உதயகுமரனும், பளிக்கறையில் சுதமதியிடம், “வஞ்சி நுண்ணிடை மணிமேகலைதனைச், சித்திராபதியால் சேர்தலும் உண்டு” (5: 81-2) என்று உரைக்கின்றான்.
மணிமேகலை அமுதசுரபி யேந்தி அம்பலம் புக்கது கேட்டு, இச் சித்திராபதி கொள்ளும் சினத்துக்கு எல்லையில்லை.
“ மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது
நகுதக் கன்றே; நன்னெடும் பேரூர்
இதுதக் கென்போர்க்கு எள்ளுரையாயது” (18: 8-10)
என்று தொடங்கி, நாடகமகளிரின் இயல்பெல்லாம் விடாது வாய்விட்டுரைத்து, சூள் ஓன்றும் செய்துவிடுகின்றாள், அஃதாவது, மணிமேகலையை உதயகுமரனால் பற்றுவித்து அவன் பொற்றோர் மேல் அவளைக் கொணரச் செய்வது ஒன்று; இன்றேல்,
“ சுடுமண் ஏற்றி அரங்கு சூழ்போகி
வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர்
அனையே னாகி அரங்கக் கூத்தியர்
மனையகம் புகா மரபினன்” (18; 33-36)
ஆவேன் என்பது மற்றொன்று. இவ்வாறு சூள்செய்தவள் உதய குமரனை அடைகின்றாள். அவன் தனக்குச் சுதமதி, மணிமேகலா தெய்வம் முதலியோர் கூறியதைக் கூறுகின்றான். அவனைத் தெளிவிக்குமுகத்தால் பல கூறி முடிவில், அவன் தடையின்றி முற்படுமாறு, மிக்க விரகுடன்,
“ நாடவர் காண நல்லரங் கேறி
ஆடலும் பாடலும் அழகும் காட்டிச்
சுருப்புநாண் கருப்புவில் அருப்புக்கணை தூவச்
செருக்கயல் நெடுங்கண் சுருக்குவலைப் படுத்துக்
கண்டோர் நெஞ்சம் கொண்டகம் புக்குப்
பண்தேர் மொழியிற் பயன்பல வாங்கி
வண்டின் துறக்கும் கொண்டி மகளிரைப்
பான்மையிற் பிணித்துப் படிற்றுரை யடக்குதல்
கோன்முறை யன்றோ குமரற்கு” (18; 103-11)
என்கின்றாள். அவனது பேதையுள்ளம் அவள் நினைத்தவாறே பிறழ்ந்துவிடுகிறது.
உதயகுமரன் இறந்ததும், மணிமேகலை சிறைசெய்யப் பட்டதும் இவள் கேள்வியுற்று, அச்சமும் நடுக்கமும் கொள்கின்றாள். இப்பொழுதேனும் மணிமேகலையைத்தான் தன்னோடு அழைத்துச் சென்றுவிடவேண்டுமென்று ஒரு சூழ்ச்சி செய்கின்றாள். மாதவியால் தன் குடிக்குக் குறைவும் மணிமேகலையால் பட்டினத்துக்குத் தீங்கு முண்டாகுமென்று அரசமாதேவிக்குச் சொல்லி, அவள் மனத்தை மாற்றித் தன் கருத்தை முற்றுவிக்கக் கருதுகின்றாள்; அதனால் அவள் தேவிபால் வந்து முதலில் தனக்குண்டான குறையை,
“ யானுறு துன்பம் யாவரும் பட்டிலர்;
பூவிலை யீத்தவன் பொன்றின னென்று
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும்,
பரந்துபடு மனைதொறும் பாத்திர மேந்தி
அரங்கக் கூத்திசென்று ஐயங் கொண்டதும்
நகுத லல்லது நாடகக் கணிகையர்
தகுதி யென்னார் தன்மை யன்மையின்” (24; 17-24)
என்று சொல்லி, மணிமேகலையால் நகர்க்குத் தீங்கு முண்டாம் என்பதை, முன்நாளில் நெடுமுடிக்கிள்ளி யென்பான், பீலிவளை யென்பாளைத் தேடிச் சென்ற போது சாரணன் ஒருவன் தோன்றி, “இந் நகரத்தே இந்திர விழா நிகழா தொழியின் கடல்கோள் நிகழும்; மணிமேகலா தெய்வத்தால் பிறந்த இந்திர சாபம் இது” என்று கூறியது சொல்லி, இப்போது,
“ தன்பெயர் மடந்தை துயருறு மாயின்
மன்பெருந் தெய்வம் வருதலு முண்டென
அஞ்சினேன் அரசன் தேவி” (24;72-74)
என்று உரைத்துத் தேவியை வணங்கிப் பணிவுடன் இரந்து,
“ நன்மனம் பிறந்த நாடகக் கணிகையை
என்மனைத் தருக” (24; 75-76)
என்று வேண்டுகின்றாள். ஈங்கும் அவள் மனத்தே மணிமேகலை ஒரு தவமகள் என்று தோன்றவில்லை; நாடகக் கணிகையென்று அவள் நவிலுதல் காண்க. ஆனால், தேவியோ மறுத்துவிடு கின்றாள். சித்திராபதி மனம் உடைந்து போய்விடு கின்றாள்.
V.நூலுட் காணப்படும் சில வரலாற் றுவமைகள்:
இந் நூலுள் வைதிக சமயப் புராண வரலாறுகள் பல உவமை களாகக் காட்டப்படுகின்றன. இவ் வரலாறுகளின் குறிப்புக்களே காணப்படுதலின், இந்நூலாசிரியர் காலத்தே, இவை மக்களிடையே நன்கு பயின்றிருந்தமை புலனாகிறது. முருகன் கிரவுஞ்ச கிரியை எறிந்த வரலாறு, “குருகு பெயர்க் குன்றம் கொன்றோ னன்ன நின் முருகச்செவ்வி” (5: 13-14) என்றும், திருமால் இராமனாய்த் தோன்றிக் கடலணையிட்ட செய்தி, “நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி, அடலரு முந்நீ ரடைத்த ஞான்று, குரங்கு கொணர்ந் தெறிந்த நெடுமலை யெல்லாம், அணங்குடை யளக்கர் வயிறுபுக் காங்கு” (17; 9-12) என்றும், திருமால் வாமனனாய்த் தோன்றி மாவலிபால் நிலம் பெற்றது, “நெடியோன் குறளுருவாகி நிமிர்ந்து தன், அடியிற் படியை அடக்கிய அந்நாள், நீரிற் பெய்த மூரிவார் சிலை மாவலி” (19: 51-4) என்றும், அசுரர் மோகித்து விழுமாறு திருமகள் கொல்லிப்பாவை வடிவு கொண்டு கூத்தாடியது, “திருவின் செய்யோள் ஆடிய பாவை” (5:4) என்றும் நெடியோன் கண்ணனாய்த் தோன்றி இடையர் சேரியில் விளையாடிய செய்தி, “மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும், ஆடிய குரவை யிஃதாம்” (19: 65-66) என்றும், இந்திரன் அகலிகைபாற் பெரு வேட்கை கொண்ட செய்தி, “மாதவன் மடந்தைக்கு வருந்துய ரெய்தி; ஆயிரஞ்செங்கண் அமரர்கோன் பெற்றது” (18: 90-91) என்றும். இந்திரன் மகன் சயந்தனை அகத்தியன் சபித்ததும், அங்கிக் கடவுள் முனிவர் மகளிர்பால் வேட்கையுற்றதும், காமன் தன் மகன் பொருட்டு வாணன் நகரில் பேடிக் கூத்தாடியதும், விசுவாமித்திர முனிவன் பசிமிக்கு நாயூன் தின்றதும் பிறவும் எடுத்துக் காட்டப் படுகின்றன.
இவர் காலத்தே உதயணன் கதை நாட்டில் நன்கு பரவியிருந் திருக்கிற தென்பதற்குச் சான்றாக, உதயணனைப் பிரச்சோதனென்ற அரசன் வஞ்சனையாற் பற்றிக் கொண்ட போது, அவ் வுதயணன் மந்திரியாகிய யூகி, தன் சூழ்ச்சியால் மீட்ட வரலாறு, “கொடிக்கோ சாம்பிக் கோமகனாகிய, வடித்தேர்த் தானை வத்தவன் றன்னை, வஞ்சஞ் செய்துழி வான்றளை விடீஇய, உஞ்சையிற் றோன்றிய, யூகி யந்தணன் உருவுக்கு” (15: 61-615) என்று குறிக்கப் பெறுகிறது. திருவள்ளுவர் தம் திருக்குறளில், “தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள், பெய்யெனப் பெய்யு மழை” (கு’ 55) என்று கூறியது. “தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள், பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்ற அப், பொய்யில்புலவன் பொருளுரை தேறாய்” (22: 59-61) என்று காட்டப்படுகிறது.
கரிகால் வளவன், முதுமை வடிவு கொண்டு, தன் இளமை குறித்து இகழ்ந்தோர் வியப்ப, நீதி வழங்கிய செய்தி, ‘இளமை நாணி முதுமை யெய்தி உரைமுடிவு காட்டிய உரவோன்’ (4: 107-8) என்று குறிக்கப் பெறுகிறது. இந் நூற்பதிகம் காவிரிப்பூம் பட்டினத்தின் வரலாறு கூறுகிறது. தொடித்தோட் செம்பியன் தூங்கெயி லெறிந்ததும், மனுச்சோழன் மகனை முறைசெய்ததும், சேரன் செங்குட்டுவன் ஆரிய வரசரை வென்று கண்ணகிக்குக் கோயிலெடுத்ததும் இந்நூற்கண் குறிக்கப்பெறுகின்றது.
இந்நூலின் இடையிடையே வேறு பல வரலாறுகள் காட்டப் படுகின்றன; அவற்றை ஈண்டு விரித்தோதின் பெருகு மாதலின் இவ்வளவில் நிறுத்துகின்றாம்.
VI. இயற்கை நலம் கூறல்: விழாக் காலங்களில் மக்கட்கு விழாவைத் தெரிவிக்கும் மரபும், விழா நிகழும் நகரை மக்கள் இன்ன வகையில் புனைதல் வேண்டுமெனக் காட்டலும் விழா வறை காதையில் குறிக்கப்படுகின்றன. ஊரலர் உரைத்த காதையில் நாடக மகளிர்க் கென வகுத்த கூத்தும், இசையும், கணிதமும் ஏனைக் கலைகளும், ஓவியமும் சுருங்கக் குறிக்கப் படுகின்றன. விழாக் காலத்தே தொகுகின்ற மக்களிடையே துறவிகளும், விடரும் தூர்த்தரும், கட்குடித்தோரும், பித்தரும், பிறரும் வந்து தொகுவது இயல்பன்றோ; அவர்களை மக்கள் கூடி இகழ்ந்துரைத்து மகிழ்வது முண்டே. அவையாவும், மலர் வனம் புக்க காதைக்கண் உரைக்கப் படுகின்றன.
பளிக்கறை புக்க காதையிலும், சிறைக் கோட்டம் அறக் கோட்டமாக்கிய காதையிலும் பிறாண்டும் பூம் பொழில்களின் இயற்கை யழகுகள் எடுத்தோதப்படுகின்றன. கச்சிமா நகர் புக்க காதை அந் நகரின் பல்வேறு தெரு நலங்களும் பிறவும் கூறுகின்றது.
இவையே யன்றி அந்திமாலைச் சிறப்பும், விடியற் சிறப்பும், மிக அழகாகக் கூறப்படுகின்றன. மணி மேகலா தெய்வம் வந்து தோன்றிய காதையில், அந்திமாலைப் போதினை ஒரு பெண்ணாக நிறுத்தி,
“ குணதிசை மருங்கில் நாள் முதிர் மதியமும்
குடதிசை மருங்கில் சென்றுவீழ் கதிரும்
வெள்ளிவெண் தோடு பொற்றோ டாக
எள்ளறு திருமுகம் பொலியப் பெய்தலும்,
அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய
தன்னுறு பெடையைத் தாமரை யடக்க,
பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்டு
ஓங்கிருந் தெங்கின் உயர்மட லேற,
அன்றில் பேடை அரிக்குரல் அழைஇச்
சென்றுவீழ் பொழுது சேவற் கிசைப்ப,
பவளச் செங்கால் பறவைக் கானத்துக்
குவளை மேய்ந்த குடக்கண் சேதா
முலைபொழி தீம்பால் எழுதுகள் அவிப்ப,
கன்றுநினை குரல மன்றுவழிப் படர,
அந்தி யந்தணர் செந்தீப் பேண,
பைந்தொடி மகளிர் பலர்விளக் கெடுப்ப,
யாழோர் மருதத்து இன்னரம்பு உளரக்
கோவலர் முல்லைக் குழல்மேற் கொள்ள,
அமரக மருங்கில் கணவனை இழந்து
தமரகம் புகூஉம் ஒருமகள் போலக்
கதிராற்றுப் படுத்த முதிராத் துன்பமொடு
அந்தி யென்னும் பசலைமெய் யாட்டி
வந்திருத் தனளால் மாநகர் மருங்கு” (5:119-41)
என்று பாடியிருக்கும் இப் பகுதியும், விடியற் காலத்தைச் சொல்லணி நயந்துறும்,
“ காவ லாளர் கண்துயில் கொள்ளத்
தூமென் சேக்கைத் துயில்கண் விழிப்ப
வலம்புரிச் சங்கம் வறிதெழுந் தார்ப்பப்
புலம்புரிச் சங்கம் பொருளோடு முழங்க
புகர்முக வாரணம் நெடுங்கூ விளிப்பப்
பொறிமயிர் வாரணம் குறுங்கூ விளிப்ப,
பணைநிலைப் புரவி பலஎழுந் தாலப்
பணைநிலைப் புள்ளும் பலவெழுந் தாலப்
பூப்பொழி லார்கைப் புள்ளொலி சிறப்பப்
பூங்கொடி யார்கைப் புள்ளொலி சிறப்பக்
கடவுட் பீடிகைப் பூப்பலி கடைகொளக்
கலம்பகர் பீடிகைப் பூப்பலி கடைகொளக்
குயிலுவர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழக்
கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழ
ஊர்துயி லெடுப்ப உரவுநீ ரழுவத்துக்
காரிருள் சீத்துக் கதிரவன் முளைத்தலும்” ((7; 111-126)
என்று பாடியிருக்கும் இப்பகுதியும், ஒவ்வொருவரும் நன்கு சுவைக்கும் இனிய நலம் பொருந்தி யிருப்பதைக் காணலாம்.
VII. நூலின் பொதுநிலைக் கருத்து;
இந் நூலுட் கூறப்படும் வரலாறும் பிறவமைதிகளும் பொதுவாக வைத்து நோக்கின், இந் நூலாசிரியர் பெண்மையின் அமைதியும், பெண்ணின் பத்தின் சிறுமையும் விளக்கும் கருத்தினராதலைக் காணலாம். உதயகுமரன் வாயிலாக ஆண்மகனுக்குப் பெண்ணின்பத்தை நுகர்தற்கு எழும் வேட்கையை விரித்தோதுவார் அதன் இயல்பை,
“ சிறையு முண்டோ செழும்புனல் மிக்குழீஇ
நிறையு முண்டோ காமம் காழ்க்கொளின்” (5: 19-20)
என்றும், பிறாண்டும், “மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும், பொதியில் நீங்கிய பொழுதிற் சென்று, பற்றினன் கொண்டு” (20: 14-16) வருவேன் என்றும் அவனே கூறுதலால் நாம் உணரச் செய்கின்றார்.
மணிமேகலைக்கும் இவ்வுதயகுமரன்பால் வேட்கை யெழுந்து அவள் உள்ளத்தை அலைக்கின்றது. அவளே தனக்கு உண்டாகும் வேட்கையின் இயல்பை,
“ கற்புத் தானிலள்; நற்றவ வுணர்விலள்;
வருணக் காப்பிலள்; பொருள்விலை யாட்டி யென்று
இகழ்ந்தன னாகி நயந்தோன் என்னாது,
புதுவோன் பின்றைப் போனதென் நெஞ்சம்;
இதுவோ அன்னாய் காமத் தியற்கை” (5: 86-90)
என்று கூறுகின்றாள், உதயகுமரன் போலாது, அறவோர் கூட்டுறவும், பழம்பிறப் புணர்வும் பிறவும் பெற்றிருந்தும், மணிமேகலை, உலகவறவிக்கண் காஞ்சனனும் உதயகுமரனும் ஒருங்கிருப்ப, அவ் வுதயகுமரன் பக்கலிலே சென்று நின்று நயமாக உரைக்குமாறு செய்துவிட்டது இவ்வேட்கையெனின், ஆண் பெண் இரு பாலாரி டத்தும் எழும் வேட்கை, இருவர் நிறையையும் ஒருங் கழிக்கும் வன்மை யுடைய தென்பதை ஆசிரியர் ஓராற்றால் நிறுவி விடுகின்றார்.
இதன் தோற்றுவாய் பெண்ணுடம்பில் இருக்கிற தென்று காட்டுவார், மணிமேகலை வாயிலாக, நரை மூதாட்டி ஒருத்தியின் வனப்பிழந்த மேனியை வகுத்துக் காட்டி,
“ பூவினும் சாந்தினும் புலால்மறைத் தியாத்துத்
தூசினு மணியினும் தொல்லோர் வகுத்த
வஞ்சந் தெரியாய் மன்னவன் மகனே” (20: 67-9)
என்று முடிவு கட்டுகின்றார்.
இதனால் மகளிர் தம்மைக் காத்துக் கொண்டு ஒழுகும் கடப்பாடுடையர் என்பார் போலப் பலவிடங்களில் அவர்கட்கு வேண்டும் ஒழுகலாறுகைளை வற்புறுத்து கின்றார்.
“ காதலர் இறப்பின், கனைபெரி பொத்தி
ஊதுலைக் குருகின் உயிர்த்து அகத்தடங்காது
இன்னுயி ரீவர்; ஈயா ராயின்,
நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுவர்;
நளியெரி புகாஅ ராயின் அன்பரோ(டு)
உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர்
பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து” (2: 42-48)
என்றும்,
“ காதலன் வீயக் கடுந்துய ரெய்திப்
போதல் செய்யா உயிரொடு புலந்து
நளியிரும் பொய்கை யாடுநர் போல
முளியெரி புகூஉம் முதுகுடிப் பிறந்த
பத்தினிப் பெண்டிர்” (18: 11-15)
என்றும்,
“ கன்னிக் காவலும் கடியிற் காவலும்
தன்னுறு கணவன் சாவுறிற் காவலும்
நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது
கொண்டோ னல்லது தெய்வமும் பேணாப்
பெண்டிர்” (18: 98-102)
என்றும்,
“ மண்டிணி ஞாலத்து மழைவளந் தரூஉம்
பெண்டி ராயின் பிறர்நெஞ்சு புகார்” (22: 45-46)
என்றும் கூறுவனவற்றாலும் பிறவற்றாலும், நன்மகளிர்க் குரிய ஒழுகலாறுகளை நன்கு பலமுறை வற்புறுத்துதலைக் காணலாம்.
உதயகுமரன் வரலாற்றாலும், ககந்தன் மக்கள் வரலாற்றாலும் ஆண்மகனுடைய வரம்பிகந்த காமமே கொடிதெனக் காட்டி வற்புறுத்துகின்றார். இதனை,
“பத்தினி யில்லோர் பலவறம் செய்யினும்
புத்தே ளுலகம் புகாஅ ரென்பது
கேட்டும் அறிதியோ” (22: 117-9)
என்று கூறுதலால் அறியலாம். பத்தினியுடன் கூடியுறைவோர் கோடற்குரிய வேட்கை, மகப்பேறு கருதியதேயன்றிப் பிறிதில்லை யென்பது ஒரு சாரார் கருத்து. அதனை மறுத்து, இந் நூலாசிரியர், பத்தினிக்கூட்டம் அறஞ்செய்தற் பொருட் டேயன்றி மகப்பேற்றின் பொருட்டன்று என்பார்,
“ இளமையும் நில்லா - யாக்கையும் நில்லா;
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா;
புத்தே ளுலகம் புதல்வருந் தாரார்;
மிக்க அறமே விழுத்துணை யாவது” (22: 135-138)
என்று ஓதுகின்றார்.
இக்கருத்துக்களோடு வினையுணர்வு ஒன்று இந்நூன் முழுதும் ஊடுருவிச் சென்று நிலவுகிறது. இதனை முன்பும் கூறினாம். ஈண்டு ஒன்றே கூறுவோம். இவ்வுடல் “வினையின் வந்தது; வினைக்கு விளைவாயது” (4: 113); “உம்மை வினைவந்து உருத்தல் ஒழியாது” (26:32) வினைநீக்கமே வீடுபேறு என்பது. இதனை, உதயகுமரன் இறந்த செய்தியை அவன் தந்தை மாவண் கிள்ளிக்குக் கூற வந்த அறவோருள் ஒருவர் கூறு மாற்றால் அறியலாம்:
“ மதிமருள் வெண்குடை மன்ன! நின்மகன்
உதய குமரன் ஒழியா னாக,
ஆங்கு அவள் தன்னை அம்பலத்தேற்றி,
ஓங்கிருள் யாமத்து இவனை ஆங்குய்த்துக்
காய சண்டிகைதன் கணவ னாகிய
வாய்வாள் விஞ்சையன் தன்னையும் கூஉய்
விஞ்சை மகள்பால் இவன்வந் தனனென
வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி,
ஆங்கவன் தன்கை வாளால் அம்பலத்து
ஈங்கிவன் தன்னை எறிந்தது”(வினை) (22: 194-203)
என்பது அவ்வறவோர் வினைமேல் ஏற்றிக் கூறிய கூற்றாகும். இவ் வண்ணமே, மணிமேகலை அரசமாதேவிக்கு, அவள் மகன் இறந்ததற்குக் காரணம் முன்னை வினையெனப் பழம் பிறப்புக் கூறி,
“ மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனை
உடல்துணி செய்தாங்கு உருத்தெழும் வல்வினை,
நஞ்சுவிழி யரவின் நல்லுயிர் வாங்கி
விஞ்சையன் வாளால் வீட்டிய தன்றே” (23: 82-85)
என்று அறிவுறுத்துகின்றாள்.
VIII. இந் நூலாசிரியர் காட்டிய தருக்க முடிவு பற்றிச் சிறு குறிப்பு;
இந் நூலில் தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதையில் வரும் தருக்க முடிபுகளைப் பற்றி ஆசிரியர் டாக்டர். உ.வே. சாமிநாதையர் பலவாறு முயன்று விளக்கம் பெறாது விட்டு விட்டனர். ஆனால், அவர்க்குப்பின் பலர் இவற்றைத் தம்மால் இயன்றவரை முயன்று ஆராய்ந்திருக்கின்றனர். அவ் வாராய்ச்சியின் குறிப்பை இங்கே தருவது முறையாதல் பற்றிக் குறிக்கின்றோம்.
இத் தருக்க முடிபுகளை யாராய்ந்து கண்ட டாக்டர்.
திரு. S.கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் இவை தின்னகர் காலத்துக்கு முற்பட்டனவாதல் வேண்டும் என்கிறார்; மகா மகோபாத்தியாய S.குப்புசாமி சாத்திரியார் அவர்களும், எச்.சாக்கோபி (Hermann Jacobi, Professor of Sanskrit, University of Bonn) என்பாரும், இந்நூன் முடிபுகள் வடமொழியிலுள்ள நியாயப் பிரவேசம் என்ற நூன் முடிபை அடிப்படையாகக் கொண்டன வென்றும், ஆகவே இம் மணிமேகலை, தின்னகர் காலத்திற்குப் பிற்பட்டதாகல் வேண்டும் என்றும்கூறுகின்றனர். தின்னகர் கி.பி.நான்காம் நூற்றாண்டில் இருந்தவர் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு; நியாயப் பிரவேசத்தை இயற்றிய ஆசிரியர் சங்கர சுவாமி என்பாரும் அந்த நான்காம் நூற்றாண்டினரே என்பர்.
திரு. அய்யங்காரவர்கள், “இந் நூல், ‘ஆதி சினேந்திரன் அளவை யிரண்டே, ஏதமில் பிரத்தியம் கருத்தளவு என்ன’
(29: 47-48) என்றது கொண்டு, இந் நூலாசிரியர் காட்சி, அனுமானம் என்ற இரண்டையுமே அளவையாகக் கொண்டனர்; தின்னகர் நையாயிகர் கூறும் நான்கும் கொண்டு ஆராய்ந்து இறுதி யிரண்டையும் விலக்கி முதலிற் கூறும் இரண்டையுமே கொண்டனர். பக்கம், ஏது, திட்டாந்தம், உபநயம், நிகமனம் என்று ஐந்துள; அவற்றில்……. ஒட்டிய உபநயம், நிகமனம் இரண்டும். திட்டாந்தத்திலே சென்றடங்கும்” (29: 57-48; 109-110) என்றது கொண்டு, “இந் நூலாசிரியர், பக்கம், ஏது, திட்டாந்தம் மூன்றுமே கொண்டார்; தின்னகர் இவ்வைந்தையுமே கொண்டொழிந்தார். தின்னகர் அனுமானத்தைப் பரார்த் தானுமானம், சுவார்த்தானு மானம் என வகுத்து நெடிது ஆராய்ந்து பரார்த்தம் சுவார்த்தத்தில் அடங்கும் என்றாராக, இந் நூலாசிரியர் அனுமானத்தை அவ்வகையில் ஆராயவேயில்லை” என்று கூறினார் எனக் காட்டி, அக் கூற்றை மறுத்து, இந் நூலிற் கூறப்படும் தருக்க முடிபுகள் நியாயப்பிர வேசம் என்ற வடமொழித் தருக்க நூலையே மேற்கொண்டிருக்கிற தென்று, எங்கள் கல்லூரி வடமொழி விரிவுரையாளரான திரு. ஐயாசாமி சாத்திரியவர்கள் காட்டுகின்றார்கள்.*
சாத்திரியவர்கள் இந்நூலின் இப்பகுதிக்கு எழுதி யிருக்கும் பொருள், நூலில் மூலத்தை வைத்து நோக்கிப் பெரிதும் தூய்மை செய்தற்குரித்தாயினும், இம் மணிமேகலைக்கும் நியாயப்பிரவேசத் துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் காட்டியிருப்பது போற்றத்தக்கது. இப்பகுதியையே சிறிது விரிய ஆராய்ந்து வெளியிடக் கருதுகின்றேனாதலின், தருக்க முடிபு பற்றிய குறிப்பினை இம்மட்டில் நிறுத்திக் கொள்ளுகின்றேன்; இவ்விருவர் கூற்றுக்களின் வன்மை மென்மைகளை ஈண்டுக் காட்டலுறின், இம் முன்னுரை மிக விரியும்.
IX. காப்பிய நிகழ்ச்சி பற்றிய ஆராய்ச்சிக் குறிப்பு:
1. மணிமேகலையின் தாயாகிய மாதவி, இசையும் நாடகமும் நன்கு பயின்று அரங்கேறிய காலத்தே புகார் நகரத்தேயிருந்து ஆட்சி புரிந்த வேந்தன் கரிகால் வளவன் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. மணிமேகலை அக்கலையில் வல்லுநளாய் மங்கைப்பருவம் எய்துங் காலத்தே மாவண்கிள்ளி என்பான் புகார் நகரத்தே ஆட்சி புரிகின்றான். இக் கிள்ளியைக் கரிகால் வளவனுக்கு மகனென்றாதல் பிற தொடர்பு உடையன் என்றாதல் இந்நூல் கூறவில்லை. உதய குமரனை மட்டில் “இளமை நாணி முதுமை யெய்தி, உரைமுடிவு காட்டிய உரவோன் மருகன்” (4; 107-108) என்று கூறுகிறது. மணிமேகலை காலத்தில் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்த கிள்ளியும் மாவண் கிள்ளியும் தமிழ்ப் பெயரே கொண்டிருப்ப, உதயகுமரன் வடமொழிப் பெயர் கொண்டிருப்பது வியப்பும் ஆராய்ச்சிக்கு இடமும் தருகிறது.
2. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதற்குச் சேரன் செங்குட்டுவன் மகன் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. கண்ணகி கணவனான கோவலன் மதுரையிற் கொலையுண்டது வஞ்சிநாட்டில் அக் குட்டுவன் இருந்து ஆட்சி செய்த காலமாகும். இஃதிங்ஙன மிருக்க, மணிமேகலை கச்சிநகருள் அறம் பூண்டிருந்த மாசாத்துவானைக் கண்டபோது, அவள், கோவலனுக்கு அவன் குடியில் ஒன்பது தலைமுறைக்கு முன்பிருந்த கோவலன் என்பான் அவ் விமய வரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு “நீங்காக் காதற் பாங்க” னாயிருந்தான் என்றும், அவ்வேந்தனொடு அவனும் கச்சிநகர்க்குப் போந்து தரும சாரணர் உரைத்த அறம் கேட்டுப் புத்த சைத்தியம் ஒன்று கட்டினான் என்றும் கூறுகின்றாள். இதனால், சேரலாதனுக்கும் செங்குட்டுவனுக்கும் இடையே ஒன்பது தலைமுறைக் காலம் கழிந்திருத்தல் தோன்றுவதோடு, சிலப்பதிகாரக் கூற்றுக்கு முற்றும் மாறுபடுவது தெரிகிறது. சிலப்பதிகாரம் கூறுவது போலவே, இந்நூலும் செங்குட்டுவன் வடவாரிய மன்னரை வென்று வந்து கண்ணகிக்குக் கோயிலெடுத்த செய்தியைச் சிறிதும் மாறு பாடின்றிக் கூறுகிறது. ஆகவே இப்பகுதியும் ஆராய்ச்சிக்கு உரியதாகின்றது.
X. முடிப்புரை:
இனி, இவ்வாராய்ச்சி யுரையை முடிப்பதன்முன், இக் காப்பிய அமைப்பும் நடையும் பற்றிய சில குறிப்புக்களைக் கூறுவது நலமென்று தோன்றுகிறது. கோவலனுக்கும் மாதவிக்கும் உண்டாய தொடர்பின் பயனாக மணிமேகலை பிறக்க, அவட்குப் பெயரிடும் சிறப்பு நாளில், கோவலன் ஒரு பெரிய சிறப்பினைச் செய்தான்; அவன் அளித்த கொடையைப் பெறுதற்கு மக்கள் பெருங்கூட்டமாய் வந்திருந்தனர்; அப்போது அரசனது பட்டத்தியானை மதங்கொண்டு போந்து, அக்கூட்டத்திருந்த வேதியனொருவனைப் பற்றிக் கொள்ளவே, கோவலன் அவன்பால் இரக்கமுற்று, யானையின் நெற்றியிற் பாய்ந்து அதனையடக்கி, அவ்வேதியனை மீட்கு மாற்றால் தன் ஆண்மை யினை நிலை நாட்டினா னென்று சிலப்பதிகாரம் கூறகிறது. பிறந்து பெயர் பெறும் நாளிலே தன் தந்தைக்குப் பெரும் புகழ் விளைத்த மணிமேகலையின் பிறப்பு வரலாற்றை இந்நூல் கூறவேயில்லை; மணிமேகலையின் பிறப்பு மாதவி பிறப்புப் போல்வதன்று. சித்திராபதியின் சொல்லும் செயலும் நோக்கின், மாதவிக்குப் பிறப்பு வரலாறு காண்டல் அரிதாம். அதனாற்றான் இளங்கோவடிகள், கண்ணகி கோவலன் என்ற இருவர் பிறப்புக் கூறியவர், மாதவியின் பிறப்புக் கூறாராயினார். மாதவியின் குணம் செயல்கள் கற்புடை நன்னெறிய வாதலின், அந்நெறி வழாது பிறந்த மணிமேகலையின் பிறப்புக் கூறாமைக்குக் காரணம் தெரிந்திலது.
மாதவியும் மணிமேகலையும் இந்திரவிழாவிற் கலந்து தம் ஆடல், பாடல், அழகு என்பனவற்றால் மக்களை இன்புறுத் தாமையால், ஊரவர் அலர்தூற்றுகின்றார் எனச் சித்திராபதியால் குறிக்கும் இந் நூலாசிரியர், விழாவறை காதையில் இவ் விருவரும் போந்து மேற்குறித்த பணியை ஆற்றற்குரியர் என்பதனைக் குறிக்கவேயில்லை. ஒன்றனைச் செய்தற் குரியார் அதனைச் செய்யாதொழியின் அன்றோ அலர் பிறக்கும்? நாடகக் கலையை அக் காலத்திருந்த அரசரும் பிற சான்றோரும் நன்கு ஆதரித்தனர் என்பதற்குச் சான்றுகள் பல இருக்கின்றவே. நாடக மகளிர் தத்தம் நாடகக் கலை நுட்பத்தை மக்கட்கு நன்கு காட்டுமின் என்பதனை வெளிப்படக்கூறாது, “வேறு வேறு சிறப்பின் வேறு வேறு செய்வினை, ஆறறி மரபின் அறிந்தோர் செய்யுமின்” (1: 56-57) என விழாவறை காதை கூறுதலால் எய்துவித்தார் என்று கொள்வதாயின், மேலே காட்டிய குறைக்கு இடமின்றாம்.
ஆபுத்திரன் மணிபல்லவத்தில் மணிமேகலைபால் விடை பெற்றுச் சென்றவன் என்னானான் என்பதும், காஞ்சனன் உதய குமரனை வாளால் எறிந்த தீவினைப் பயனை இன்னவாறு நுகர்ந்தான் என்பதும் குறிக்கப்படவில்லை. கண்ணகி மதுரையை எரித்த தீவினைப் பயனை நல்வினைப் பயனின் இறுதியில் நுகர்ந்து முடிவில் “பிறவி நீத்த பெற்றிய”ளாவள் என்று கூறின இந்நூலாசிரியர், இவர்தம் முடிவுநிலை கூறாமை ஆராய்தற்குரியதாம். இம் முடிவு நிலையேயன்றி, சித்திரா பதியின் பிற்கால வாழ்வும் தெரிந்திலது. அறவண வடிகள் மணிமேகலைக்கு அறம் கூறுவ தோடு நின்று விடுகிறார்; அவரது முடிவும் தோற்றம்போலத் திடீரென நின்று விடுகிறது. மணிமேகலை, உதயகுமரன் கையிற் சிக்குண்டு தன் தூய்மை கெடாது நீங்கி யிருப்பளேல், இக்காப்பிய அமைதி மிக்க இன்பமாய் இருந்திருக்கும்.
இனி, இந்நூலாசிரியர் பாடியனவாக மேலே காட்டிய சங்க இலக்கியப் பாட்டுக்களையும் இந் நூலில் காணப்படும் பாட்டுக் களையும் ஒப்பு நோக்கின், இந் நூலில் நடைமிக எளிதாக இருப்பது புலனாகும். மேலும், இதன் கண் மிக்க வடசொற்கள் காணப்படு கின்றன. சங்க காலத்தும், அதனையடுத்து வந்த சிலப்பதிகாரக் காலத்தும் காணப்படாத சொல் வழக்குகள் இந் நூலிற் காணப்படு கின்றன. ஏது நிகழ்ச்சி, ஆங்கனம், ஈங்கனம், ஆங்கு, ஈங்கு முதலியன மிகுதியும் பயில்கின்றன, அ,இ என்ற சுட்டிடைச் சொற்கள், அந்த, இந்த எனத் திரிந்து வழங்கும் வழக்குக் கம்பர் காலத்துக்குச் சிறிது முன்னர்த்தான் பயிலுவதாயிற்று. இவ்வழக்கு, சங்க நூற்களுள்ளே கிடையாது. இந் நூலில் இஃது நன்கு வழங்கு கிறது. “முறைமையின் இந்த மூதூரகத்தே” (26:63) என்றும், “இந்த ஞாலத்து எவ்வகை யறிவாய்” (27: 285) என்றும், “ அந்த உதவிக்கு ஆங்கவன் பெயரை” (29:30) என்றும் வருதல் காண்க.
மேலே கூறியவாறு, இந்நூல் நடை சங்க இலக்கியங்களிற் காணப்படும் செய்யுள் நடையின் வேறுபட்டிருந்தலாலும், சங்கச் செய்யுளிற் காணப்படாத வழக்காறு சில இந்நூலிற் காணப்படு தலாலும், இந்நூலுட் காணப்படும் அரசர் வரலாறுகள் சில வரலாற்று நெறிக்கண் நோக்கியவழி மயக்கந் தருதலாலும் இந்நூலை ஆக்கிய சீத்தலைச் சாத்தனாரது வரலாறு ஆராய்தற் குரியதா கின்றது. சிலப்பதிகாரம் இந்நூலாசிரியரை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று வழங்காது, வறிதே சாத்தன் என்றே கூறுகிறது. இந்நூற் பதிகம் மட்டில் “மதுரைக் கூலவாணிகன் சாத்தன்” என்று கூறுகிறது. தொல்காப்பிய உரைகாரர்களும் இவரைச் சீத்தலைச் சாத்தனார் என்கின்றனரே யன்றி, “மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்” என்று கூறவில்லை. ஆகவே, இச் செய்தி மிக ஆர அமர இருந்து ஆராய்தற்குரிய தென்பது விளங்கும்.
இவ்வரிய நூலுக்கு ஆசிரியர் டாக்டர். உ.வே.சாமி நாதையர் அவர்கள் அருஞ்சொற் குறிப்பெழுதி வெளியிட்டிருக் கின்றார்கள். இதற்கு விரிந்ததோர் உரை நாவலர் பண்டித. ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களைக் கொண்டு எழுதுவித்துப் பாகனேரி தன வைசிய புரவலர் திருவாளர் மு.காசிவிசுவநாதன் செட்டியாரவர்கள் பதித்து வருவது மகிழ்தற்குரியதாகும்.
முடிவாக, இந் நூலிற் காணப்படும் புத்த சமயக் கருத்து களைப்பற்றிச் சில கூறாதொழிவது குன்றக் கூறலாய் முடியும். இதனை இந் நெறி பற்றி ஆசிரியர் திரு. நாவலர். ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் ஆராய்ந்து கூறியவற்றை ஈண்டுத் தருகின்றாம்.
“ஆடவரே யன்றி மகளிரும் துறவு பூண்டு தவவொழுக் கத்தை மேற்கொள்ளுதற்கும், வீடடைதற்கும் உரியர் என்பது புத்தர் கொள்கை. அது மணிமேகலையின் துறவு கூறுமுகத்தால் இந்நூலின் கண் உடம்பொடு புணர்த்து அறிவுறுத்தப் பெற்றுள்ளது. பிறப்புத் துன்பமென்பதும், பிறவாமையே இன்பமென்பதும், பிறவியானது பற்றினா லுண்டாகின்ற தென்பதும், பிறவாமையானது பற்றறுதி யினா லுளதாவ தென்பதும் அச் சமயத்தின் கொள்கைகள். இவை நான்கும் நால்வகை வாய்மை என்று கூறப்படும்…….”
“பிறப்பாகிய துன்பத்தையும் அதன் காரணத்தையும் விளக்கு தற்குக் காரண காரிய முறைமையால் ஒன்றொன்றைச் சார்ந்து தோன்றுவனவாகிய பன்னிரு நிதானங்களென்னும் பெயருடைய பன்னிரண்டு தத்துவங்கள் இந்நூலிற் சொல்லப்பட்டுள்ளன. அவையாவன பேதைமை, செய்கை, உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பாவம், தோற்றம், வினைப்பயன் என்பனவாம்….”
“இப்பன்னிரண்டில் உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு பிறப்பு என்பனவும்; பிணி, மூப்பு, சாக்காடு, அவலம், அரற்று, கவலை, கையாறு என்னும் வினைப்பயனுமாகிய ஏழும்; தோற்றமெனப்படுந் துன்பமும்; பேதைமை,செய்கை, வேட்கை, பற்று, பாவம் என்னும் ஐந்தும் அதன் காரணமுமாகும்…”
“துன்ப நீக்கத்திற்குரிய நெறி நற்காட்சி, நல்லூற்றம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன் முயற்சி, நற்கடைப்பிடி, நல்லுளத்தோர் தலைப்பாடு என்னும் எட்டுமாம் என்பர். பிறவித் துன்பத்தினின்றும் நீங்குதற்கு இவற்றை யடைந்து கடைப்பிடித்தலோடு தானமும் சீலமும் உடையராதல் வேண்டும்………”
“இனி, உயிர்கள் எய்தும் பிறப்பு - மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்கு, பேய் என அறுவகைப்படும் என்பதும்; நல்வினை செய்த உயிர்கள் - மக்கள், தேவர், பிரமர் ஆகிய கதிகளிற் பிறந்து இன்புறு மென்பதும்; தீவினை செய்த உயிர்கள் - நரகர், விலங்கு, பேய் என்னும் கதிகளிற் பிறந்து துன்புறு மென்பதும்; தீவினையாவன - கொலை, களவு, காமம் என உடம்பிற்றோன்று வன மூன்றும், பொய் குறளை, கடுஞ்சொல், பயனில் சொல், என உரையிற் றோன்றுவன நான்கும், வெஃகல், வெகுளல், மயக்கம், என உளத்திற் றோன்றுவன மூன்றும் ஆகிய பத்துமாம் என்பதும்; நல்வினை யாவன சொல்லப்
பட்ட பத்துவகைத் தீவினையினும் நீங்கி சீலம் தாங்கித் தானம் தலைநிற்றலாம் என்பது புத்தநூற் றுணிபு. இவை,
‘தீவினை யென்பது யாதென வினவின்
ஆய்தொடி நல்லாய்! ஆங்கது கேளாய்;
கொலையே களவே காமத் தீவிழைவு
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்;
பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்
சொல்லெனச் சொல்லில் தோன்றுவ நான்கும்;
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சியென்று
உள்ளந் தன்னின் உருப்பன மூன்றுமெனப்
பத்து வகையால் பயன்தெரி புலவர்
இத்திறம் படரார் படர்குவ ராயின்
விலங்கும் பேயும் நரகரு மாகிக்
கலங்கிய வுள்ளக் கவலையில் தோன்றுவர்;
நல்வினை யென்பது யாதென வினவின்
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச்
சீலம் தாங்கித் தானம் தலைநின்று
மேலென வகுத்த ஒருமூன்று திறத்துத்
தேவரும் மக்களும் பிரமரு மாகி
மேவிய மகிழ்ச்சி வினைப்பய னுண்குவர்’ (24: 123-140)
என இந்நூலுட் கூறப்படுதல் காண்க. மற்றும், துன்பத்துக் கெல்லாம் காரணமாகிய முக் குற்றங்களில், காமத்தை உடம்பு நிலையில்லது, துன்பத்திற் குறைவிடமானது, உயிரின் வேறாயது, அருவருக்கத் தக்க அழுக்கு நிறைந்தது என்று பாவிக்கும் அகப்பா வனையாலும்; வெகுளியை எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தலும் இரக்கம் கொள்ளுதலும் அவற்றின் ஆக்கத்திற்கு மகிழ்தலுமாகிய மைத்திரி, கருணை, முதிதையென்னும் பாவனை களாலும்; மயக்கத்தைக் கேள்வி, விமரிசம், பாவனை என்னும் உபாயங்களாலும் ஒழிக்க வேண்டும் என்றும் இதிற் கூறப்பட்டுளது. காணப்படுகின்ற எல்லாப் பொருளும், உயிரும், உருவம், நுகர்ச்சி குறி, பாவனை, உணர்வு, என்னும் ஐந்தின் ஈட்டமே யென்பதும்; இவை யெல்லாம் கணந்தோறும் தோன்றியழியும் என்பதும் பௌத்தநூற் கொள்கை. இவற்றுள் உருவமென்பதில் நிலம், நீர், தீ, வளி, என்னும் நான்கு பூதங்களும், உடம்பும், புலன்களும் அடங்கும். நுகர்ச்சியாவது, இன்ப துன்ப அனுபவம்; இது வேதனை யென்றும் கூறப்படும். ஐம்பொறிகளும், மனமும் குறியென்று கூறப்படும். மனமொழி மெய்களால் உண்டாகும் நல்வினை தீவினைகள் பாவனையாகும். இது செய்கையெனவும், வாசனையெனவும் கூறவும் படும். உணர்வாவது விஞ்ஞானமாகும். உருவ முதலியவற்றோடு கூடிய விஞ்ஞானமே ஆன்மாவா மெனவும், அது நீரோட்டம் போலச் சந்தானமாய்க் கணந்தோறும் தோன்றி யழியுமெனவும், அங்ஙனம் அழியுமேனும் முற்கணத்தின் அழிவெய்தும் ஞானத்தில் தோன்றிய வாசனை பிற்கணத்தில் தோன்றும் ஞானத்திற் பற்றுதலால் அறிவு முதலாயின நிகழு மெனவும், இவ்வைந்தும் சந்தானமாகத் தோன்றி யழிதலே பந்தமெனவும், இவை அறக்கெடுதலே முத்தியெனவும் கூறுப. இவ்வைந்தையும் குறித்து,
‘உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை
உள்ள அறிவிவை ஐங்கந்த மாவன’ (30: 189-190)
என மணிமேகலை கூறுகின்றது.”
இனி, இச்சமயநெறிக்கண்ணே நின்று இக் காவியத்தை நோக்கின், சாத்தனார் காலத்தே இத் தமிழ் நாட்டில், சைவம், வைணவம், பிரமவாதம், வேதவாதம் என்பனவும்; சமண சமயத் துறைகளாகிய ஆசீவகவாதம், நிகண்டவாதம் என்பனவும்; சாங்கியம், வைசேடிகம், பூதவாதம், நையாயிகம் மீமாஞ்சை, உலோகாய தம் என்பனவும் நிலவியிருந்தமை தெரிகிறது. சுதமதியின் வரலாற்றினால் சமண் சமயத்தை மறைமுகமாக இழித்துரைக்கும் சமயக் காழ்ப்பும் சிறிது புலனாகிறது. இதனை நாட்டாரவர்களும் கண்டு, _“இக்காப்பியத்திலேதான் புத்தசமயத்தை மேன்மைப்படுத்தும் பொருட்டுப் பிறசமயத்தை இகழ்ந்துரைத்தலாகிய சமய வெறுப்புச் சிறிதே அரும்பியுள்ளமை காணப்படுகிறது” என்று கூறுகின்றார்கள். இக் காழ்ப்பின் தோற்றம் விளங்கித் தோன்றா தொழிதற்குக் காரணம், மணிமேகலை ஏனைச் சமயக்கணக்கர்தம் திறம் கேட்டு ஒரு மறுப்பும் கூறாதொழிவதே யாகும். சிலப்பதி காரத்தே, சமண்சமயத் துறவிகள்பாலும் சமயவெறுப்புச் சிறிது தோன்றியிருந்த திறத்தைச்_ சிலப்பதிகார ஆராய்ச்சிக்கண்உரைத் திருக்கின்றாம்.
புத்த சமயக் கொள்கைகளை நாம் இனிதறிந்து கோடற்குக் கருவியாகும் நூல்கள் பல இப்போது வெளியாகி யுள்ளன. அவற்றை நோக்கின், ஊனுண்டல் பாவமென்பது அச்சமயத்தின் சீரிய கொள்கையாகக் கூறப்பட்டிருப்பது இனிதுவிளங்குகிறது. அசோகனது கல்வெட்டுக்களும் இக்கருத்தை நன்கு வற்புறுத்து கின்றன. அவ்வாறு இருப்பவும், இக்காவியம் ஊனுண்டல் பாவமன்று என்று கூறுகிறது. இதனைச் சாதுவன் என்போன், நாகர் தலைவனுக்குக் கூறும் கூற்றாகவரும், “மூத்து விளிமா வொழித்து எவ்வுயிர் மாட்டும், தீத்திறம் ஒழிக” (16; 116-117) என்பதனால் அறிகின்றோம். ஒருகால், இக்கருத்து, சாத்தனார் காலத்திருந்த பௌத்தர்கள் கொண்டிருந்த கொள்கையாக இருக்கலாமோ என்று நினைத்தற்கு இடந்தருகிறது. இக்கொள்கை முற்காலத்தே மக்களிடையே நிலவி யிருந்த தென்றற்குத் திருக்குறள் உரையாசியரான பரிமேலழகர் ‡உரையும் சான்று பகர்கின்றது. இதுவும் நன்கு ஆராய்தற்குரிய தொன்றாம். சிந்தாமணிக்கண் சீவகன் வேடர் தலைவற்கு அறமுரைக்குமிடத்து, †“இறைவனூற் காட்சி கொல்லா வொழுக் கொடு ஊன்துறத்தல் கண்டாய்” (சீவக. 1242) என்று கூறுவதை நோக்கின், சமண் சமயத்தவர் ஊனுண்டல் பாவமென்னும் கருத்தேயுடையராயிருத்தல் வலியுறுகிறது மணிமேகலையாசிரியர் காலத்தும் சமண் சமயம் தமிழ் நாட்டில் இருந்திருத்தலின், அவர் கொள்கையும் ஈண்டுக் காண்டல் வேண்டியதாயிற்று. புத்த சமயத்தை விளக்கும் வேறு நூலொன்றும் மணிமேகலைக்குப் பின்னும் முன்னும் தமிழ்மொழியில் இதுகாறும் காணப் படாமையின், ஊனுண்டல் பற்றிய இக்கொள்கை மயக்கத்தைத் தந்து நிற்கிறது.
ஆளுடைய பிள்ளையார் காலத்தே புறச் சமயத்தவருள் மீனும் ஊனும் உண்டல் காணப்படுகிறது. இதனை அவர் தாமே. திருவவளிவணல்லூர், “கொம்பிரிய” என்று தொடங்கும் திருவிராகப் பதிகத்துள், *“கழியருகு பள்ளியிடமாக அடுமீன்கள் கவர்வாரும் வழியருகு சாரவெயில் நின்று அடிசில் உள்கிவரு வாரும்” என்கின்றார். “ஊனொடுண்டல் நன்றென ஊனொடுண்டல் தீ தென ஆன தொண்டர் அன்பினால் பேச நின்ற தன்மையான் எனத் திருவானைக்காத் திருவிராகப் பதிகத்தும் குறித்தருளுவதை நோக்கின் ஊனுண்டலைப் பற்றிய வாதம் இற்றைக்குச் சுமார் 1300 ஆண்டு களாக நடந்து வருவதொன் றென்பதும் அறியக்கிடக்கின்றது.
இவ்வாறு, இக்காவியத்தின் ஒவ்வொரு பகுதியும் ஆராயுந் தோறும் பல்வகைப் பொருளாராய்ச்சிக்கும் இடந்தந்து நிற்கும் சிறப்பு மிக்கு விளங்குவதைக் காண்கின்றோம். ஒவ்வொரு காவியத்தையும் இம் முறையே ஆராய்ந்து காண்பது மிக்க இன்பம் தரும் செயலாகும். அதுவேயன்றி, அவ்வக் காவியங்களை இயற்றிய ஆசிரியர்களின் காலத்து மக்கள் மேற்கொண்டிருந்த சமயம், வழக்கம், ஒழுக்கம் முதலியவற்றைக் காணும்பேறும் நமக்கு உண்டாகிறது. இப்பேறு, நம் தமிழகத்தின் பண்டை வரலாற்றை இனிதறிந்து முறை செய்து கோடற்கும் பேருதவியாகும். இத் துறையில் செய்யப்படும் முயற்சிகட்கு ஊக்கமும் ஆதரவும் செய்து வரும் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தினர்க்குத் தமிழ் நன்மக்களாகிய நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். அவர் தம் முயற்சி பெருநலம்கொண்டு விளக்கமுறுவதாக.
குறிப்புரை
(எண் - பக்கவெண்.)
127. தகை - அழகு, வல்லை - வல்லவனாயுள்ளாய், வழுதி - பாண்டியன், தேற்றாய் - தெளியாய், சினம் - வெப்பம், ஊர்பு -தவழ்ந்து,
128. வானம் - மழை, கவினி- அழகுற்று, கமம்சூல் மாமழை - நீர் நிறைந்த மேகம், கார் - கார் காலம், மணி - நீலமணி, பூவை - காயாம்பூ. செம்புற மூதாய் - சிவந்த முதுகையுடைய தம்பலப்பூச்சி. வீ - பூ, கழல் - காம்பினின்று கழன்று. தாஅய் - பரந்து, செய்கை - சித்திரம், புறவு - காடு.
129. கானல் - கடற்கரை. பெருநீர் - கடல், ஏர் - போன்ற, எவ்வம் - வருத்தம், அலர்வாய் - அலர் கூறும் கூற்றிலிருந்து. தடவு நிலை - பெரிய அடிமரம். அயிர் - நுண்மணல், கொடுஞ்சி - தேர்த்தட்டு,
129-130. வண்டற் பாவை - மகளிர் கோரை முதலியவற்றால் செய்துவைத்துவிளையாடும் பாவை. ஞான்றை - நாள். அறிகரி - சான்று. விசைகொளீஇ - விசைத்துக்கொண்டு. வயமீன் - வலிய மீன். தழை - தழையாகிய உடை. மறுகு - தெரு.
130-131. கழி - உப்பங் கழி, துழைஇய - துழவிய. அடும்பு - அடப்பங்கொடி. கல்லகம் - மலைநாடு.
131. புரையில் - உயர்ச்சி யில்லாத, ஆனாக் கௌவை - அமையாத ஆரவாரம். அழுங்கல் - முழக்கம். கை - முன்கால். கோள் வல் - கொலை வல்ல. ஏற்றை - ஆண். பூ நுதல் - மெல்லிய நெற்றி. பிடி - பெண் யானை. நீர் நனந்தலை - நீர்ப்பரப்பில்.
132-133. அலர்வது - அலராவது. புலரா - வாடாத. பருவரல் - துன்பம். நீர்அலைக் கலைஇய - நீர் அலைத்தலால் குலைந்த. தொடையல் - மாலை. கஞலிய - செறிந்த. வெறி - நறுமணம். மணிச்சுனை - நீலமணி போலத் தெளிந்த நீர் நிரம்பிய சுனை. உரி - தோல். உருப்பு - வெப்பம். எருத்து - கழுத்து.
133. கவடு - கிளை, தயங்க - விளங்க. அசைய என்று மாம். சுரம் - பாலைநிலம்; முரம்பு மண் பரந்த நிலமுமாம். உறைதல் வல்லுவோர் - இருக்கக்கூடிய மனவன்மை யுடையவர்.
134. கவலை - கவர்த்த வழி. வலிப்ப - தூண்ட, காதல் - விரும்புவது. என்றி - என்று சொல்கின்றாய். விரைசெலல் - விரைந்து செல்லுதல். திகிரி - தேர்ச் சக்கரம். வறந்த - வற்றின. நிரம்பா - குறுகிய. வள்ளெயிறு - கூரியபல். பிணவு - பெண்நாய். உழிஞ்சில் - ஒருவகை மரம். நொள்ளை - ஒருவகை வண்டு. இயவு - வழி. விழுத் தொடை - பெரிய அம்பு.
135. பொய் வலாளர் - பொய் சொல்லுதலில் வன்மை யுடைய தலைவர், வல்லென - விரைவாக, துனி - வெறுப்பு, நொசி வரல் - நுட்பமிக்க. பாவை - கண்ணிற் பாவை. மாய்ப்ப - மறைப்ப. ஊர்தர - பரவ. மேனி - மேனியழகு. இனையல் - அழாதே. பாசரும்பு - பசிய அரும்பு. அலரி - அலர்ந்த பூ - கொழுதி - கோதி. அருந்து - ஆர்ந்து; உண்டு. அலங்கல் - அசையும் கொம்பு. நயவர - விருப்பமுண்டாக. தெளித்தோர் - தெளிவித்துச் சென்ற காதலர்.
136. பருதியஞ் செல்வன் - சூரியன். கயந் தலை - பெரிய தலை. மடப் பிடி - இளமையான யானை. குளகு - தழை. உயங்கிய - வாடிய. குரம்பை - வீடு.
137. வாஅப் பாணி - நாட்டிய தாளத்திற் கேற்பத் தாவிச் செல்லுதலையுடைய. கலிமா -குதிரை. தாஅத் தாள் - தாவிச் செல்லும் கால். ஒதுங்க - நடக்க. இடி - முட்கோல். ஏமதி - ஏவுக. திரி மருப்பு - முறுக்கிய கொம்பு. நடுநாட் கூட்டம் - கூடாமை. மாண்ட - மாட்சிமைப் பட்ட.
138. மழைக் கண் - குளிர்ந்த கண். பரீஇயினள் - அறுத்தெறிந்து, இறந்திசின் - சென்றாள். பிரம்பு - பிரம்பின் புதர். வருட - தடவ.
139. சாய்ப்புறம் - சோகை. பசுவெயில் - இளவெயில் ஈர்ம் புறம் - நனைந்த முதுகு. பனிக்கும் - குளிர் செய்யும்.
140. ஆர்கை - உண்டல். கதவர் - கோபமுடையவர் ஈனாப்பாவை - வண்டற்பாவை. கானலான் - கானற்கண்.
141. மாபெரும் பத்தினி - கண்ணகியார். தீத்தொழில் - கணிகையர் தொழில்.
142. கையற - செய்கை கெட. கடுநவை - மிக்க துன்பம். தவக்கொடி - தவத்தையுடைய கொடிபோலும் பெண்.
143. இடையிருள் யாமத்து - நள்ளிரவில். முனிவன் - புத்தன். பொருவறு - ஒப்பற்ற. புரையோர் - உயர்ந்தோர்.
144. மறித்து - மறுபடியும். அந்தரம் - வானத்தே.
147-148.ஆருயிர் மருந்து - உணவு. தொலைவில்லா – குறை வதில்லாத. அகன் சுரை - அகன்ற உள்ளிடம். காண்டல் வேட்கையேன் - காணும் விருப்பமுடையேன். கரி - சான்று. செவ்வனம் - செவ்வையாக.
149. மது - தேன். திப்பியம் - வியப்பாகும்.
150. பிணி - நோய். இடும்பைக் கொள்கலம் - துன்பத்தைப் பெய்துவைக்கும் ஒரு பாத்திரம்.
150.நா நல்கூர்ந்தனை - சொல்லால் வறியனாயினை.
158. நன்று - அறம்.
159. தகவிலன் - செய்தற்குரிய தகுதியறியாதவன். மடவார் - மகளிர். மன்னவன் - மனுச்சோழன். வழி - மரபில். வேந்தர் - ஏனைச் சேர பாண்டிய வேந்தர். ஈமம் - சுடுகாடு. சிறப்பின் பாலார் - சிறப்பான பான்மை யுடையவர். ஆயிழை - மணிமேகலை. சிறை நோய் - சிறைத்துன்பம்.
160. ஓரீஇ -நீங்கி. மிக்குழீஇ - மிகுந்தபோது காழ்க் கொளின் - அடக்க முடியாதபடி மிக்கதாகிய வழி. செவ்வியளாயின் - காமநுகர்ச்சிக்குரிய பருவத்தையுடைய வளாயின். என் செவ்வியளாக - என் இன்பச் செவ்விக்குரியளாகுக.
161. வஞ்சி - வஞ்சிக்கொடி. அவத் திறம் - தீய கருத்து. எய்யா மையல் - அறிவறிதற் கில்லாத மயக்கம்.
161-162. நோற்றூண் - நோற்றுண்ணும். நொசி - வாடும். ஏற்றூண் - பிச்சை யெடுத்துண்டல். மண்ணீடு - மண்ணாற் செய்த பாவைகள்.
162. பாடு கிடப்பேன் - உயிர் நீங்குங்காறும் வீழ்ந்து கிடப்பேன். அயர்ப்பாய் - விடுவாய். அரவல்குல் - மணிமேகலை. முத்தை முதல்வி - முதுமையும் முதன்மையுமுடைய சம்பாபதி.
163. தோடு - பூ. பொதுவில் - பொதுவிடமாகிய அம்பலம், முதுக்குறை முதுமொழி - அறிவு நிரம்பிய நற்சொற்கள்.
164-165. மாமறை மாக்கள் - வேதியர்கள். கேண்மோ - கேண்மின். கடவுள் கணி - திலோத்தமை. சிறுவர் - பிள்ளைகள். இருவர் - வசிட்டர், அகத்தியர். களைந்து - நீக்கி. திருந்து முகம் - மலரும் முகம். காட்டும் - காணச் செய்யும். கடிஞை - பிச்சைப் பாத்திரம்.
166. பொறேஎன் - விரும்பேன். தொட்டும் - தொடங்கி. பெயல் -மழை. பிழைப்பறியாது - பொய்ப்பது கிடையாது. உருக்கும் - மெலிவிக்கும்.
167. மறன் -பாவம். புக்கில் -புகுமிடம். சார்பிற் றோற்றம் - பேதைமை முதலிய நிதானம் பன்னிரண்டின் தோற்றம் முடிப்புரைப் பகுதி காண்க) உய்தி - பிழைத்தல். ஆரியன் - ஆசிரியனாகிய புத்தன். இணை - ஒப்பு. கள் - தேன். தார் - மாலை கலம் - மரக்கலம். போகி - சென்று.
168. தூவற - பற்றற. செவிமுதல் - செவியின்கண் . வித்து - விதை. ஏதம் - தீங்கு. கூஉம் - அழும். வேட்டனை - விரும்பினாய், மதிமாறு ஓர்ந்தனை - அறிவான் மாறான செய்தியைக் கருதி விட்டாய்.
169. வெண்திரை - பாற்கடல். வைத்தாங்கு - வைத்தது போல. வறன் ஓடு உலகின் - வற்கடம் பொருந்திய உலகத்தின். வான் துயர் - பெரும் பசி. அறன் ஓடு - அமுதசுரபி. வீழ் கதிர்- மறையும் சூரியன்.
170. ஆர் அணங்காகிய அருந்தவன் - தடுத்தற்கரிய வருத்தத்தைச் செய்தவனாகிய அரிய தவத்தையுடைய முனிவன். பம்பம் - அசைவு. நோனகர் - பெரிய நகரம்.
171. பிறன் - உதயகுமரன். பிறன் - அயலான். அலங்கல் - மாலை. கடிகை - துண்டம். தவளம் - வெண்மை. குறிப்பாடு வழாஅள் - காதற்குறிப்பில் வழுவுதல் இலள். ஒழிந்தனள் - தஙகிவிட்டாள். வான வாழ்க்கையர் - தேவர்கள்.
172. விஞ்சை - வித்தை.
தகவு - தகுதி. அறைபோதல் - உள்ளற்றுப்போதல். அறை -சந்து. தொன்று - பழைமை. நன்றி - நன்மை. வாய்வாள் - தப்பாத வாள். விளிந்தனை - இறந்தாய்.
173. துய்ப்போர் - உண்போர். துணிச் சிதர் - கந்தைத் துணி. இரங்கி - வருந்தி. முனியாது - வெறாது. புன்கண் - துன்பம். அறங்கடை - பாவம்.
174. கட்டு - பந்தம். அற்புக் கடன் - அன்புநெறி. படராது - நினையாது.
175. காதலன் - கோவலன் . நாணு- நாணம்.
176. பின்னது - பேரின்பம். அற்றோர் - பற்றற்றவர். வழுவாய் - துன்பம். தவ்வையர் - தமக்கைமார்.
அவ்வையர் - தாய்மார். வாய்வதாக - வாய்ப்புடைத்தாக. துளங்கியது - கலங்கியது. வளி - காற்று. கொம்பின் - கொம்புபோல.
180. பூட்கை - கொள்கை, ஆணையின் - ஆணைப்படி.
181. கொளுத்தி - இசைத்து, வெயில் - ஞாயிற்றின் கதிர். பொதும்பர் - சோலை. இலஞ்சி - பொய்கை. விரை - மணம். உரவோன் - கரிகாலன். குருகு பெயர்க் குன்றம் - கிரவுஞ்சம் என்னும் மலை. கொன்றோன் - முருகன்.
182. முருகச் செவ்வி - இளமைப் பருவம். சாப சரத்தி - சாபம் என்னும் அம்பினை யுடையாள். காமன் - காமச் சேட்டை. தீ நெறி -தீய கருத்து, படரா - நினையாத. தகை - அழகு.மிகை - வேறு பல மிகுத்துச் சொல்லுதல்.
183. துகள் - குற்றம். ஆரும் - ஆதரிப்போர் எவரும். வடு - சீவிவிடும் வடு. நெடியோன் -திருமால். அடைத்த ஞான்று - அணை கட்டியபோது. மலை - மலைக்கற்கள், அளக்கர் - கடல்.
184. தீவினையாட்டி - தீவினையாளன் என்பதன் பெண் பால். முட்டாள் - குறையாதவள்.
185. குறளுரு - வாமனன். படி - பூமி. மருமான் - வழித்தோன்றல். கொம்பர் - கொம்பு. பொங்கர் - சோலை. மண் - நாடு. மன்பதை - மக்கள்.
186. திரிந்தோன் - வேறுபட்டவன். தட - பெரிய. பெரும் பிறிதாக்கும் - கெடப் பண்ணும். தக்கன்று - தகுதியன்று. ஓடு - பிச்சையெடுக்கும் பாத்திரம். தகைக்குநர் - தடுப்பவர். உய்யா நோய் - தீராநோய். புழுக்கறை - காற்றுப்புகாத அறை.
187. தவத்தாட்டி - தவமுடையவள். இடுக்கண் பொறாது சிறுமை செய்தேன் பொறுக்க என இயைக்க.சிறுமை -துன்பம். உரவோர் - அறிவுடையோர். புலைமை - புலைத்தன்மை. தீவகச்சாந்தி - இந்திர விழா. தணியா - நீக்க முடியாத.
நகுதக்கன்று - சிரிக்கும் தகுதியுடையது. தக்கு - தகுதி, எள்ளுரை - இகழ்ச்சிச்சொல். சுடுமண் - செங்கல், சூழ் போகி - சுற்றிவந்து. வடு - பழி. தம்மோர் அனையேன் - தம்மை யொப்பாவோன். சுருப்பு - சுரும்பு (வண்டு). கருப்பு - கரும்பு. அருப்புக் கணை - அரும்பாகிய அம்பு. செருக் கயல் - செருக்கித் திரியும் கயல்மீன்.
188. பயன் - பொருள். கொண்டி - கொள்ளை. படிற்றுரை - தவறான சொல். கோன்முறை - செங்கோல் முறை. பூவிலை- தலைப் பரிசம். ஈத்தவன் - கொடுத்த கோவலன். பொன்றினன் - இறந்தான். ஐயம் - சோறு. தன்மையன்மையின் - நாடகமகளிர்க்கு அது தகுதியல்லாமையால்.
பெருந்தெய்வம் - மணிமேகலா தெய்வம். மடந்தைக்கு: அகலிகையின் பொருட்டு. தளை - விலங்கு. உஞ்சை - உச்சயினி.
191. குணதிசை - கிழக்கு. குடதிசை - மேற்கு. மதியம் - முழுமதி. கதிர் -சூரியன். பூம்பொதி - தாமரைப்பூவின் கூம்பிய இதழ். அரிக் குரல் - அரித்த ஓசை. அழைஇ - அழைத்து. சேதா - செம்மையான பசு. துகள் - மண் பொடி. மருதத்து இன்னரம்பு - மருதப்பண். உளர - இசைப்ப. அமரகம் - போர்க்களம். மெய்யாட்டி -உடம்பினை யுடையவள். இறுத்தனள் - தங்கினாள். துயில் கண் விழிப்ப - துயில்வோர் கண் விழிப்ப. புலம்புரிச் சங்கம் - புலவர் கூட்டம். புகர் - புள்ளி. வாரணம் - யானை. கூவிளிப்ப - பிளிற. வாரணம் - கோழிச்சேவல். பணை - குதிரைப் பந்தி; மரக்கிளை - பொழில். ஆர்கைப் புள் - பொழிலிடத்தே நிறைந்துள்ள பறவைகளின் கூட்டம். கொடியார் மகளிர். கைப்புள் - கைவளை.
192. பீடிகை - பீடம். பூப்பலி - படைத்தல். கடைகொள - நன்கு படைக்க. கலம் - அணிகலம். பீடிகை - கடைத்தெரு குயிலுவர் - தோற்கருவி இசைப்போர். பண் இயம் - பண்ணிசைக்கும் இசைக்கருவி. பண்ணியம் - பண்டங்கள், உரவுநிர் அழுவம் - நீர் பரந்த கடல். மிக்குழீஇ - மிகுந்த விடத்து. வருணக்காப்பு - வருணத்திற்கேற்ற காவல்,
193. பின்றை - பின்னே.
தூசு - உயரிய உடை. பொத்தி - மூட்டி. ஊதுலைக் குருகின் - கொல்லன் உலைக்களத் துருத்திபோல. பொய்கையின் - பொய்கையின் மூழ்குவார் போல, நளி - மிக்க, நோற்று உடம்பு அடுவர் - கைம்மை நோன்பு நோற்று உடம்பை வதக்குவர். பரப்புநீர் - கடல். முளி யெரி - கனன்ற தீயினில்.
194. மண் திணி ஞாலம் - மண் அணுக்கள் செறிந்த நிலவுலகம். பிறர் நெஞ்சு புகுதல் - பிறரால் காமுற்று நினைக்கப்படுதல். புத்தேள் - தேவர். விழுத்துணை - சிறந்த துணை.
195. மதி - திங்கள், மருள் - போன்ற, உய்த்து - செலுத்தி. கூஉய் - வருவித்து. கலக்கி - நினைப்பித்து, மடைக்கலம் - சோறு சமைக்கும் கலம். மடையன் - சோறாக்குபவன். செய்த ஆங்கு - செய்த அப்பொழுது. உருத்து - சினந்து. நஞ்சு விழி யரவு - திட்டிவிடம் என்னும் பாம்பு.
196. சினேந்திரன் - புத்தன். ஏதம் - குற்றம். பிரத்தியம் - காண்டலளவை. கருத்தளவு - அனுமான அளவை - அனுமான உறுப்புக்கள் ஐந்து; பக்கம்,ஏது, திட்டாந்தம், உபநயம், நிகமனம், அனுமானம், கருதலளவை, பரார்த்தானுமானம் - தன் காட்சி
யினின்று தான் ஒன்றை உணருமாறு கொள்ளும் அனுமானம்.
197. இளமை நாணி - இளமை கண்டு பிறர் நாணுவதால் முதுமை எய்தி - முதுமைக் கோலங்கொண்டு. உரைமுடிவு காட்டிய - சொல்லை ஆராய்ந்து அதன் முடிவை விளக்கிய.
உரவோன் - அறிவு வலியுடைய சோழன். மருகன் - வழித்தோன்றல், வியப்பு - அதிசயம். காதற் பாங்கன் - உயிர்த்தோழன். புத்த சைத்தியம் - புத்தன் கோயில்.
198. அலர் தூற்றுதல் - பலருமறியப் பழிகூறல்.
199. ஆறறி மரபின் அறிந்தோர் - நிருத்தம் முதலிய ஆறு அங்கங்களையும் உணர்ந்த முறையையுடைய அந்தணர். நீத்த - ஒழித்த. பெற்றியள் - தன்மையள்.
200. அவலம் - துன்பம். அரற்று - புலம்பல். கவலை - மனச் சஞ்சலம். கையாறு - செயலறுகை.
காமத் தீ விழைவு - காமமாகிய கொடிய விழைவு. உலைய - உலையாநின்ற; அழிதலுடைய. குறளை - கோள். பயனில் சொல் - அறம் பொருள் இன்பங்களுள் ஒன்றும் பயவாத சொல், வெஃகல் - விரும்பல், வெகுளல் - சினத்தல். உருப்பன - தோன்றுவன. இத்திறம் - கொலை முதலிய தீய வழிகளில். படரார் - செல்லார்.
201. சீலம் - ஐஞ் சீலம்; அவை; கொல்லாமை, பொய்யாமை, களவின்மை, காமமின்மை இரவாமை என்பன மகிழ்ச்சி வினை - நல்வினை. உண்குவர் - நுகர்வர்.
சந்தானம் - தொடர்பு,
203. நுகர்ச்சி - வேதனை. உள்ள அறிவு - விஞ்ஞானம். காழ்ப்பு - மனவைரம். சீரிய - சிறந்த.
204. மூத்து விளி மா - வயது முதிர்ந்து இறந்த விலங்கு.
205. கழி - உப்பங் கழி. அடிசில் - உணவு. உள்கி - கருதி.
தமிழ்த்தாய் வாழ்க!
Lord Macaulay.
- இச்சிலப்பதிகாரத்தின் மூன்றாம் காண்டமாகிய வஞ்சிக் காண்டம் இளங் கோவடிகள் எழுதியதன்று என்பாரும், பதிகத்தை வேறு எவரேனும் எழுதியிருப்பர் என்பாருமாகப் பலதிறத்து ஆராய்ச்சியாளர் உளர்:- History of the Tamils by P.T.S. Ayyengar.
1. இதனை டிரைடன் (Dryden), என்பாரும் இவ்வாறே Poetic Prose என்று கூறுவர்.
2. இதனை இக் கட்டுரைக்குப் பின் காண்க.
3. - கண்ணகியென்னும் பெயர் பண்டைத் தமிழ் மகளிர்க்கு இடப்பெற்றுப் பயில வழங்கிய பெயர்களுன் ஒன்று. வையாவிக் கோப்பெரும் பேகன் என்னும் வள்ளலின் மனைவியார் பெயரும் கண்ணகி யென்பது புறநானூற்றால் தெரிகின்றது.
ஒருகால், இக் கண்ணகியாரும் கணவனான பெரும்பேகனால் துறக்கப்பட்டுப் பின்பு அரிசில் கிழார், கபிலர், பாணர் முதலிய புலவர் பெருமக்களின் உதவியால் கணவன்பால் கூட்டப்பட்டனர்.
இனி, நம் கண்ணகியார் தம் மார்பொன் றைத் திருகியெறிந்த செய்தி போல்வ தொரு செய்தி நற்றிணையில் ஆசிரியர் மதுரை மருதனிளநாகனாரால் குறிக்கப் பெறுகின்றது. “இதணத் தாங்கண், ஏதிலாளன் கவலை கவற்ற, ஒரு முலையறுத்த திருமா வுண்ணிக், கேட்டோ ரனைய ராயினும், வேட்டோரல்லது பிறர் இன்னாரே” (நற். 216) என்பது அக்குறிப்பு. இதன் உரைகாரர் திருமாவுண்ணி யென்றது நம் கண்ணகி யாரையே என்று உரைக்கின்றார். இஃது ஆராய்தற்குரியது.
- “ஆயிரம் பரிசத்துக்கும் எண் கழஞ்சு மெய்ப்போகத்துக்கும்” என்பர் அடியார்க்கு நல்லார். (3:162-3 உரை)
- The Silapadikaram pp. 362.
*Astronomical date and the date of the Silappadikaram pp. 354-9.
- “In pressing into service the astronomical data, though not in a way warranted by the original. the Commentator shows himself an able astronomer and we may add an astrologer too” (Introduction to Silappadikaram in English)
- Ancient Ceylon by P.H. Parker.
- திருவள்ளுவமாலையில் இவர் பாடியதாக ஒரு வெண்பா காணப்படுகிறது.
- ஆயின் - ஆராய்ந்து நோக்கின்.
_The Journal of Oriental Research, Madras, Vol. XI. part II page 118-128
கரந்தை கட்டுரை. பக். 226.8
_கரந்தைக் கட்டுரை.பக்.224 _சிலப்பதிகார ஆராய்ச்சி. பக்.81.
‡குறள். புலால் மறுத்தல். †சீவக.1242
_சம்பந்தர் தேவாரம்
*சீவக சிந்தாமணி - சமாசப்பதிப்பு, முன்னரை, பக். 27.
- Ancient India PP. 375.
- சிவக. சிந்தாமணி, சமா. பதிப்பு பக்-19.
- Ibid - pp.21,22
- சீவக சிந்தாமணி - சமாசப் பதிப்பு. முக. பக். 22.
*சிலப்பதிகார ஆராய்ச்சி, பக். 19.
1 தொல்-கற். 44.
- “Four things turneth not back; a spoken word, a sped arrow,
neglected opportunity and past life” - என ஆங்கிலேயர் கூறுப.
- “சிந்தாமணியும் சைவமும்” என்ற பொருள் பற்றி இந் நூலாசிரியர் செய்துள்ள சொற்பொழிவினைச் “சித்தாந்தம்” Vol. 15. பக். 206,211,250 காண்க.
- “எங்கெழிலன் ஞாயி றெளியோமல்லோம்” (6:95-2) எனத் திருநாவுக்
கரசரும் கூறியிருத்தல் காண்க.
- கரந்தைக் கட்டுரை பக். 57-67.
- The Cholas by K.A, Nilakanta Sastri. Vol. II. Part I. P. 516.
- The Cholas. Vol. PP. 134,135: 147,149:185-7.
- Journal of the S.V. Oriental Institute Vol. 1 (Tamil p.1.1)
- “பைந்தொடி மகளிராவார் பாவத்தாற் பெரிய நீரார்” (738), “காரிகையார்கள் (வீட்டைச்) செல்லார்” (737), “கணவற் பேணுங் கற்புடைமகளிர் இந்த உருவத்தின் நீங்கிக் கற்பத்துத்தம் தேவராவர்” (739). “மாதவந் தாங்கி வையத்து ஐயராய் வந்து தோன்றி, ஏதமொன் றின்றி வீடு எய்துவர்” (740) என்று மேருமந்தரபுராணம் கூறுகிறது. பிராப்பிரதத் திரயம், பிரசுவ சனசாரம் முதலிய சமண்சமய நூல்களும் பெண்கட்கு வீடு பேறு கிடையாது என்கின்றன.
- ஈண்டுக் காட்டிய ஞாயிற்றின் செய்கை, சங்ககாலத்தமிழ் மகனொரு வன் தன் மனக்கினிய தமிழ்மகளை மணம் செய்து கொண்ட பிற்றை நாள், தன்னையும் அவளையும் மணவறையில் தமர் விட்டகாலை, “ஓரிற் கூடிய வுடன்புணர் கங்குல், கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து, ஒடுங்கினள் கிடந்த ஓர்புறம் தழீஇ, முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப” (அகம். 86) தாகிய செய்கையை நினைப்பிப்பது காண்மின். தமிழ் மகன் தமிழ்மகளின் “முகம்புதை”திறக்குங்கால் மணமுரசு மழங்குமென வறிக.
- கொண்ட - கொள்ளுதற்கு இடமாகிய மார்பம், என்று பொருள் கொள்க.
- இப் பகுதிக்கண் வரும் செய்யுளெண்கள், சாமிநாதையரவர்களின் உரையோடு கூடிய பிரதி யெண்களாகும்.
- சீவக சிந்தாமணி மூலமும் உரையும், 3-ஆம் பதிப்பு, முன்னுரை பக்.1,22.